காசு கொடுத்தாலும் 'கம்பி நீட்டும்' வாக்காளர்கள்!
''ஓட்டுப்பதிவே முடியப் போகுது... ஒரே குடும்பத்தை சேர்ந்த நாலு பேருக்கு மொத்தம் 2,000 ரூபாய் கொடுத்திருக்கோம்... வந்திருவாங்கதானே''
கரை வேட்டி கட்டிய பிரமுகர் ஆதங்கப்பட்டார்.
''அவங்க எங்க வரப்போறாங்க... நாலு பேருக்கும் சேர்த்து மொத்தம், 4,000 கொடுத்திருக்கோம்... நாங்களே கவலைப்படல''
இது கரை வேட்டி கட்டிய இன்னொரு கட்சியை சேர்ந்த பிரமுகரின் வேதனை.
இந்த உரையாடல் நிகழ்ந்தது, கடந்த சட்டசபை தேர்தலில் - திருப்பூர், அவிநாசி ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடி முன்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அந்தியூர், பெருந்துறை, பவானி, கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் மட்டும், ஓட்டுப்பதிவு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.
காரணம் என்ன?
திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகளிலேயே இடம்பெயர்ந்த தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், தங்கள் சொந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்வதில்லை; புதிதாக விண்ணப்பித்து திருப்பூரிலும் வாக்காளராக சேர்ந்து விடுகின்றனர்.
அதேபோல், திருப்பூர் மாவட்டத்துக்குள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வாக்காளராக நீடிப்போரும் பலர் உள்ளனர். செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வகையில், ஆதார் எண் - வாக்காளர் அட்டை இணைப்பை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. ஆனாலும், அது கட்டாயமாக்கப்படவில்லை.
கடந்த பிப்ரவரி நிலவரப்படி, திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில், 54 சதவீத வாக்காளரே, ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்; திருப்பூர் வடக்கு தொகுதியிலோ, 36 சதவீத அளவிலான வாக்காளரே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
ஆதார் இணைப்பில் மிகவும் பின்தங்கியுள்ளதால், திருப்பூர் வடக்கு மற்றும், திருப்பூர் தெற்கு தொகுதிகளில் நடப்பு லோக்சபா தேர்தலிலும் ஓட்டுப் பதிவு விகிதம் உயருமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது; 70 சதவீதத்தை கடந்தாலே பெரிய சாதனை தான்.
கடந்த 2009 லோக்சபா தேர்தலில், 71.09 சதவீதமாக இருந்த திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு, 2014 லோக்சபா தேர்தலில், 69.13 சதவீதமாகவும்; 2019 தேர்தலில் 62.60 சதவீதமாகவும் சரிந்துள்ளது. அதேபோல், 2009 லோக்சபா தேர்தலில் 68.31 சதவீதமாக இருந்த திருப்பூர் தெற்கு தொகுதி ஓட்டுப்பதிவு, அடுத்தடுத்த லோக்சபா தேர்தல்களில், 67.72 மற்றும் 62.10 சதவீதம் என குறைந்தது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலிலும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 62.70 சதவீதம்; திருப்பூர் வடக்கு தொகுதியில் 62.44 சதவீத அளவிலேயே ஓட்டுப்பதிவானது.
வாசகர் கருத்து