Advertisement

உலக நாடுகளே பாரத பிரதமரை மதிக்கின்றன!

விநாயகர் சதுர்த்தி விழா என்றாலே விநாயகருக்கு அடுத்து ஞாபகத்துக்கு வருவது ஹிந்து முன்னணி தான். தமிழகத்தில், நீண்ட காலமாக, விநாயகர் சதுர்த்தி விழாக்களை பிரபலப்படுத்துவதோடு, ஹிந்து உரிமைகளுக்காக போராடி வருகிறது ஹிந்து முன்னணி. பெரியளவில் தொண்டர் படை வைத்துள்ள இந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், லோக்சபா தேர்தலில் தங்கள் நிலைப்பாடு பற்றியும் அந்த அமைப்பின் செயல்பாடு பற்றியும், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

நீங்கள் பல ஆண்டுகளாக ஹிந்துக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறீர்கள். தற்போதைய சூழலில், ஹிந்துக்களிடம் அதற்கான தாக்கத்தை காண முடிகிறதா?

கடந்த 1980ல் ஹிந்து முன்னணி துவங்கப்பட்டது. ஹிந்துக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். அவர்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச என, பல போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டுள்ளோம்.

ஹிந்து முன்னணி துவங்கும் முன், கடவுளை அவமதிப்பது, மதத்தை கொச்சைப்படுத்தி பேசுவது என இருந்தது. இதைப் பார்த்து மக்கள் கொதித்து இருந்தனர். ஹிந்துக்களுக்காக ராமகோபாலன், ஹிந்து முன்னணி இயக்கத்தை துவங்கினார். ஜாதி வித்தியாசம் பார்க்காமல், அனைத்து பக்கமும் சென்று தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்தார்.

சென்னிமலையில் மதமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், பழமை வாய்ந்த முருகன் கோவில் மலையை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்றும் கிறிஸ்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் இருந்தனர்.

இப்பிரச்னையை முன்னெடுத்து போராட்டம் நடத்திய போது, ஹிந்துக்களின் எழுச்சி வெளிப்பட்டது. திருச்செந்துார், பழனி ஆகிய பல இடங்களில் கோவில்கள் பிரச்னையின் போது, ஹிந்துக்கள் போராட்டம் நடத்தி வெற்றி கண்டு வருகின்றனர். ஹிந்துக்களுக்கு பிரச்னையென்றால், எதிர் குரல் கொடுக்கும் அளவுக்கு ஹிந்துக்கள் தற்போது தயாராக உள்ளனர், இதுவே ஹிந்து முன்னணியின் சாதனை.

பயங்கரவாதிகள் நடமாட்டம் பற்றி அடிக்கடி எச்சரிக்கை செய்கிறீர்கள். நீங்கள் சொல்வதை இந்த அரசு கேட்கிறதா? நடவடிக்கை எடுக்கிறதா?

தேனி, கம்பம், சத்தியமங்கலம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிரவாத பயிற்சி நடக்கிறது என்று நீண்ட காலமாக சொல்லி வருகிறோம். நக்சலைட், பயங்கரவாதிகளுடன், இஸ்லாமிய பயங்கரவாதிகளும் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இது எனக்கு எப்படி தெரியும் என்றால், பிரிவினை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறை சென்றேன். அப்போது, வீரப்பனின் அண்ணனை சந்தித்தேன். 'எங்களை நக்சலைட்கள் சந்திக்கின்றனர். அவர்களுடன் இஸ்லாமியர் உடன் வந்தனர்' என்று அவர் கூறினார்.

சமீபத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சிலிண்டர் குண்டு வெடித்தது. இவ்வழக்கில் தொடர் புலன் விசாரணை காரணமாக ஒவ்வொருவராக கைது செய்து வருகின்றனர். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் பயிற்சி எடுத்ததும் தெரியவந்தது. உக்கடம் அருகில், ரகசிய அமைப்பு ஒன்றையும் துவங்கியுள்ளனர்.

இதை கண்காணிக்க வேண்டும் என்று பலமுறை கூறினோம். ஆனால், கண்காணிக்க தவறி விட்டனர். இதன் விளைவாக சிலிண்டர் குண்டு வெடித்தது. இரு திராவிட கட்சிகளும் மென்மையாக நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் நடக்கின்றனர். பயங்கரவாதத்தை இந்த அரசும், உளவுத்துறையும் கண்காணிப்பது கிடையாது. இதையெல்லாம் கண்டுபிடித்தது மத்திய உளவுத்துறை. பயங்கரவாதம் பெருகி வருகிறது. இதை கண்காணிக்க தவறினால், தமிழகத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது.

தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கை எதனால் அதிகரிக்கிறது?


முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினர். விடுதலையாகி வந்த உடன், அவரை கட்டியணைத்து தமிழக முதல்வர் வாழ்த்து சொல்கிறார். எதை செய்தாலும் வெளியில் வந்து விடலாம் என்று, பயங்கரவாதிகள் நினைக்கும் மன சூழலை உருவாக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன. லயோலா கல்லுாரியில் ஒருவர் இறந்து விடுகிறார். அந்த நபர் நக்சலைட், குற்றவாளி. அவருக்கு சென்று முதல்வர் அஞ்சலி செலுத்தினார். இந்த அரசு, பயங்கரவாதிகளுக்கு உதவியாக உள்ளது என்று நினைக்கும் வகையில் உள்ளது.

தமிழகத்தில் ஹிந்து விரோத அரசு உள்ளதாக கூறி வருகிறீர்கள். ஆனால், அரசு நுாற்றுக்கணக்கான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்டுள்ளது. எப்படி ஹிந்து விரோத அரசு என சொல்ல முடியும்?

ராமருக்கு செருப்பு மாலை, விநாயகரை செருப்பால் அடிப்பது, பட்டிமன்றம் நடத்தி ஹிந்துக்களை கேவலமாக பேசுவது என, பல அவமதிப்புகளை செய்தனர். ஹிந்து முன்னணி பதில் கொடுத்த பின், குறைய ஆரம்பித்தது. இஸ்லாமியர் மசூதி சொத்து, கிறிஸ்துவர்கள் சொத்து அவர்களுக்கே. இவற்றை பராமரிப்பதும் அவர்களே.

ஹிந்துக்களுக்கு தனி வாரியம் கேட்டு வருகிறோம். அரசு தயாராக இல்லை. இந்த அரசு, கும்பாபிஷேகம் செய்து இருந்தாலும், செலவு குறித்து கணக்கு கேட்டால், பதில் இல்லை. பொதுமக்கள் செலவில் தான் கும்பாபிஷேகம் நடக்கிறது. இது முழுக்க, முழுக்க மக்களின் முன்னெடுப்பால் நடக்கிறது. எந்த கோவிலையும், அரசு, முன்வந்து கும்பாபிஷேகம் செய்ததாக தெரியவில்லை.

மீட்ட கோவில் இடங்கள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டு வருகிறோம். இதுவரை தரவில்லை. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள இடம், பூ மார்க்கெட் போன்றவை கோவில் இடங்கள். கோவில் இடத்தை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில், வேற்று மதத்தவர் ஒருவர் கடை வைத்து, வாடகை வசூலித்து வருகிறார்.

தமிழக ஹிந்துக்களை அச்சுறுத்தும் விஷயங்கள் எவை?

ஹிந்துக்களுக்கு ஆதரவாக கோரிக்கை விடுத்தால், வழக்கு பதிவு செய்வது போன்ற இடையூறுகளை செய்கின்றனர். ரம்ஜான் பண்டிகைக்கு, பா.ஜ., உட்பட அனைத்து கட்சியினரும் கஞ்சி குடிக்க செல்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு வாருங்கள் என்றால் யாரும் வருவதில்லை. முதல்வரின் மகனான அமைச்சர் உதயநிதி கூட கேவலமாக பேசும் அளவுக்கு உள்ளது. ஹிந்துக்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை. ஹிந்து பண்டிகை திருவிழாக்களுக்கு சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தியை மிக விமரிசையாக ஹிந்து முன்னணி கொண்டாடும். இப்போது பெரிய அளவில் நடத்துவதாக தெரியவில்லையே...

விநாயகர் சதுர்த்தி சென்னையில் மட்டும் தான் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு, தமிழகம் முழுதும், 1.50 லட்சத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பிரமாண்டமாக நடக்கிறது. இதை நடத்த கூடாது என, இரு திராவிட கட்சிகளும் மிகவும் முயல்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், பிரதிஷ்டை, ஊர்வலம் போன்றவை அதிகரித்து வருகின்றன. போலீசார் கெடுபிடி இருந்தாலும், பெரிய எழுச்சியாக நடந்து வருகிறது. அனைத்து தெருக்களிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் கனவும், வரும் காலங்களில் நனவாகும்.

கொங்கு மண்டலத்தை தாண்டி ஹிந்து முன்னணி பெரிதாக வளர்ச்சி அடையவில்லை என்று பலரும் சொல்கின்றனரே...

ஹிந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹிந்து வேட்பாளர் என்ற பெயரில் பாலசந்தர் என்பவரை நிறுத்த, அவர் வென்றுள்ளார். திண்டுக்கல்லில் ஹிந்து வேட்பாளர் என்று ஒருவர் நிறுத்தப்பட்டு வென்றார்; ஆனால், வென்றவரை, 19 ஓட்டுகளில் தோற்றதாக அறிவித்தனர்.

திருநெல்வேலியில், ஆர்.எம்.வீரப்பன் இடைத்தேர்தலில் நின்று, எங்களிடம் ஆதரவு கேட்டார். பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், எங்களிடம் ஆதரவு கேட்டு, வென்ற பின், எங்களால் தான் ஜெயித்தார் என்று அவரே கூறினார்.

சென்னையில், மறைந்த தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் ஆதரவு கேட்டு, வென்றார். அதன்பின், அனைத்து விநாயகர் சதுர்த்தி விழாவிலும் பங்கேற்றார். சமீப காலங்களில் மதுரையில், 100 வார்டுகளில், 100 கமிட்டிகள் உள்ளன. சென்னையிலும் நல்ல வளர்ச்சி உள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் உங்கள் மகன் கவுன்சிலராக இருக்கிறார். அவர் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட நீங்கள் முயற்சி செய்தீர்கள். சமூக அமைப்பாக இருந்த ஹிந்து முன்னணி அரசியல் அமைப்பாக மாறி வருகிறதா?

ஹிந்து முன்னணி அரசியல் கட்சியில்லை. ஹிந்துக்களுக்கு ஆதரவாக நிற்கும் ஹிந்து வேட்பாளர்களை ஆதரித்து வருகிறோம். எல்லா கட்சிகளிலும், ஹிந்து சிந்தனையை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. என் மகனுக்கு பா.ஜ.,வில் சீட் கொடுத்து, அவர் கவுன்சிலராக ஜெயித்தார். அது கட்சியின் வேலை. ஹிந்து முன்னணிக்கு சம்பந்தம் கிடையாது. என் மகனுக்கு எம்.பி., சீட் கேட்கவில்லை. அப்படி கேட்டு கொடுத்தாலும், அது கட்சியின் வேலை. அதற்கும், ஹிந்து முன்னணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மத்தியில் பா.ஜ., அரசு, 10 ஆண்டுகளாக இருக்கிறது. பா.ஜ., ஒரு ஹிந்துத்துவா கட்சி என்று சொல்லி கொள்கிறது. ஹிந்துக்களுக்காக என்ன செய்திருக்கிறது? ராமர் கோவில் கூட சுப்ரீம் கோர்ட்டும், தொல்லியல் துறையும் கொடுத்த பரிசு என்கின்றனரே?

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, தேச பக்தி உள்ளவர்களை உருவாக்கியுள்ளது. அதில் வந்தவர் தான், பிரதமர் மோடி. ஹிந்து முன்னணியை ஆரம்பித்த ராமகோபாலன் கூட, ஆர்.எஸ்.எஸ்.,சில் இருந்து வந்தவர். 370 சட்டப்பிரிவை நீக்கினர். அயோத்தி கோவில், கோர்ட் தீர்ப்புக்கு பின்னும், பல கட்ட போராட்டங்களை தாண்டி மோடி அரசு உதவியால் தான் கட்டப்பட்டது.

இவ்விஷயத்தில் கோர்ட்டையும், அரசையும் பாராட்டுகிறோம். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய மதமாற்றம் தொடர்பான பணத்தை தடுத்துள்ளனர். பலமான பிரதமராக உள்ளதால் தான், அனைத்து நாடுகளும் மதிக்கின்றன. மீண்டும் அவர் பிரதமரானால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இஸ்லாமிய நாடுகள் கூட, பிரதமரை பாராட்டுகின்றன. இஸ்லாமிய நாட்டில் ஹிந்து கோவிலுக்கு இடம் கொடுத்து, அதை திறக்க பிரதமரை அழைக்கின்றனர். பிரதமர் சமமாக நடந்து கொள்வதாக இஸ்லாமியர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. ஹிந்து முன்னணியின் நோக்கம் அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதே.

கோவில்களை அரசு பிடியில் இருந்து விடுவிக்க, பா.ஜ., ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

பிற மாநிலங்களில் கோவில்களில் உண்டியல் வசூல் செய்வது கிடையாது. இங்கு, தரிசன கட்டணம் வசூலிக்கின்றனர். சிறப்பு நாளின் போது, தரிசன கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கின்றனர். இதற்கு, பா.ஜ.,வை குறை சொல்ல முடியாது. இதை அந்தந்த மாநில அரசு தான் செய்ய வேண்டும்.

இந்த தேர்தலிலாவது, ஹிந்து முன்னணி ஆதரவு யாருக்கு என்பது குறித்து வெளிப்படையாக அறிவிப்பீர்களா?

கோவில் இடங்களை பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடை சட்டம், பெண்களுக்கு பாதுகாப்பு, போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்து, வெளிப்படையாக சொல்கிறோம். அரசியல் கட்சிகள் வெளிப்படையாக பதில் சொல்ல தயாராக இல்லை. இந்த கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு, ஹிந்து முன்னணி ஆதரவு தரும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)