திருப்பூரில் வடக்கு - தெற்கு 'சென்டிமென்ட்'
திருப்பூர் தொகுதியில், வடக்கு - தெற்கு 'சென்டிமென்ட்' செயல்படுவதாக, அ.தி.மு.க.,வினர் கண்டுபிடித்துள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பெருந்துறை, கோபி, பவானி, அந்தியூர் என, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், பெருந்துறை, கோபி, பவானி, அந்தியூர் சட்டசபை தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், இந்திய கம்யூ., வேட்பாளராக, 'சிட்டிங்' எம்.பி., சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் அருணாச்சலம் களமிறக்கப்பட்டுள்ளார்.
மூன்று தேர்தல்களை சந்தித்துள்ள தால், திருப்பூர் தொகுதி அ.தி.மு.க., வினர், புதிதாக 'ஈரோடு வடக்கு, திருப்பூர் தெற்கு' என்ற 'சென்டிமென்ட்'டை கண்டுபிடித்துள்ளனர்.
முதல் தேர்தலில் (2009), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசாமி (அ.தி.மு.க.,) வெற்றி பெற்றார்; ஈரோடு தொகுதியை சேர்ந்த (தாராபுரம்) கார்வேந்தன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அடுத்து வந்த 2014 தேர்தலில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சத்தியபாமா (அ.தி.மு.க.,) வெற்றி பெற்றார்; திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் (தே.மு.தி.க.,) இரண்டாமிடத்தை பிடித்தார்.
மூன்றாவது முறையாக நடந்த, 2019 தேர்தலில், திருப்பூரை சேர்ந்த ஆனந்தன் (அ.தி.மு.க.,) மற்றும் சுப்பராயன் (இ.கம்யூ.,) போட்டியிட்டனர்; சுப்பராயன் வெற்றி பெற்றார்.
இதன்படி, ஒருமுறை திருப்பூரை சேர்ந்த வேட்பாளரும், அடுத்த முறை ஈரோட்டை சேர்ந்த வேட்பாளரும் வெற்றி பெறுவது தொடர்ச்சியாக நடந்துள்ளது.
'வடக்கு - தெற்கு சென்டிமென்ட்' வரிசையில், நான்காவது தேர்தலில் ஈரோட்டை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெறுவார்; சென்டிமென்ட் வேலை செய்யும்; திருப்பூரில் அ.தி.மு.க., வேட்பாளர் வெல்வது உறுதி என்கின்றனர் அக்கட்சியினர்.
வாசகர் கருத்து