சென்னை: சினிமா 'பிளாக் டிக்கெட்' போல, தவெக விருப்ப மனு வினியோகம் துவங்கிய, ஒன்றரை மணி நேரத்தில், 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன. விருப்ப மனுவை வாங்க வந்தவர்களில் பலரும், கையில் வைத்திருந்த விசிலை ஊதிக் கொண்டே இருந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினருக்கு, விருப்ப மனு வினியோகம், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் துவங்கியது. தவெக தலைவர் ஜோசப் விஜய் என்ற பெயரில் முதல் மனுவை, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.வழக்கமாக, அதிமுக, திமுக போன்ற கட்சிகள் விருப்ப மனு, 10,000 முதல் 15,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். ஆனால், தவெகவில் விருப்ப மனு கட்டணம் வெறும் 100 ரூபாய் மட்டுமே. விருப்ப மனுவை நிரப்பி கொடுக்கும் போது, பொது பிரிவினர், 10,000 ரூபாயும், பட்டியலின பிரிவினர், 5,000 ரூபாயும் கொடுக்க வேண்டும். அதுகுறித்து தெரியாமல், தவெகவினர் கட்டுக்கட்டாக மனுக்களை வாங்கினர். பெரும்பாலும், விஜய் பெயரிலேயே அவை வாங்கப்பட்டன. அதனால், விருப்ப மனு வினியோகம் துவங்கிய ஒன்றரை மணி நேரத்தில், 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன. விருப்ப மனுவில், ஜாதி சங்கங்களில் இருந்தால் அதன் விபரம், தாய்மொழி, வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட விபரம், சொத்து விபரம் உள்ளிட்ட, 37 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதிமுகவினர் புறக்கணிப்பு
தவெக துணை பொதுச்செயலர் நிர்மல்குமார் கூறியதாவது:எந்த கட்சிக்கும் இல்லாத ஆரவாரம், தவெகவுக்கு இருக்கிறது. கட்சிக்கு தொடர்பு இல்லாத பொதுமக்களும் விருப்ப மனுக்களை வாங்க வந்தனர். முதல் நாளில், 4,000 மனுக்கள் தான் போகும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஒன்றரை மணி நேரத்தில், 10,000 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும் 14ம் தேதி வரை விருப்ப மனு வினியோகம் உண்டு. நிரப்பிய மனுவை சமர்ப்பிப்பதற்கான தேதி விரைவில் அறிவிப்போம். திமுக தான் பிரதான எதிரி என்பதை, அதிமுக மறந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. திமுக வெற்றிக்கு உதவும் விதமாக, அதிமுக, நிர்வாகிகள் சிலர், தவெகவை பற்றி பேசுகின்றனர். குறிப்பாக, மதுரை அதிமுக நிர்வாகிகள், அமைச்சர் மூர்த்தி பற்றி பேசுவதே இல்லை. ஜெயலலிதாவுக்கு பின், அதிமுகவினரை மக்கள் புறக்கணித்து விட்டனர். அவர்கள் குறித்து இனி பேச வேண்டியதில்லை.கொந்தளித்த பனையூர்வாசிகள்-பலித்த செங்கோட்டையன் வாக்கு
தவெக தலைமை அலுவலகம், சென்னை பனையூரில் உள்ளது. விருப்ப மனுவை வாங்க வந்தவர்களில் பலரும், கையில் வைத்திருந்த விசிலை ஊதிக் கொண்டே இருந்தனர். அதேபோல, தவெக அலுவலகத்தை சுற்றி, 6 தெருக்களில், ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், அப்பகுதிகள் ஸ்தம்பித்தன. இதனால், டென்ஷனான பனையூர்வாசிகள், காவல் துறையிடம் புகார் அளித்ததோடு, தவெகவினருக்கு எதிராக பேட்டியும் கொடுத்தனர். 'பொதுமக்கள் காதில் போய் விசிலை ஊதி விடாதீர்கள்; இருக்கும் ஓட்டும் போய் விடும்' என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் எச்சரித்திருந்தார். அவர் சொன்னது போலவே, பனையூரில் விருப்ப மனு வினியோகத்தில் அப்படி ஒரு நிகழ்வு அமைந்தது.