பா.ஜ.,வில் சலசலப்பை தவிர்க்க பாடம் எடுக்க வருகிறார் சந்தோஷ்
சென்னை: தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக, தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியதால், இனி, இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, பா.ஜ., நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க, அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், நாளை சென்னை வர உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்த லையொட்டி, 234 தொகுதிகளிலும் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, 72 பொறுப்பாளர்களை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், கடந்த வாரம் நியமித்தார்.
ஒருவருக்கு இரண்டு முதல் ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன; அண்ணா மலைக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், தன் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரை கவனிக்க வேண்டிய கடமை இருப்பதால், ஆறு தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக, கடந்த 3ம் தேதி அண்ணாமலை திடீரென அறிவித்தார்.
அவர், அதிருப்தியில் இருப்பதாக தி.மு.க., கூட்டணியினர் கருத்து தெரிவித்தனர். இது, கட்சியினர் மத்தியிலும், தேசிய ஜனநாயக கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ், நாளை சென்னை வருகிறார். அவர், கட்சி நிர்வாகிகளுடன், தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்த நிலையில், அவர் அதிருப்தியில் இருப்பதாக, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வதந்திகளை பரப்புகின்றன.
இனி, கட்சியினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க, சந்தோஷ் நாளை சென்னை வருகிறார்.
அவர், தேர்தல் முடியும் வரை, பா.ஜ., நிர்வாகிகள் பொது வெளியில் பேச வேண்டியவை, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து செயல்படுவது தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்க உள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (0)