எல்லை மீறிய தி.மு.க., - மா.செ.,: கொந்தளிக்கும் மகளிர் அணியினர்
- நமது நிருபர் -
'தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள், உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளிடம், 'எல்லை' மீறிய, தென்காசி தெற்கு மாவட்டச் செயலர் ஜெயபாலனின் பதவியை பறிக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, மகளிர் அணியினர் புகார் அனுப்பி உள்ளனர்.
தி.மு.க., தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர்களான, ஆயக்குடி பேரூராட்சி கவுன்சிலர் விமலா ராணி, கடையநல்லுார் ஒன்றிய கவுன்சிலர் மாரியம்மாள், கடையம் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி...
பாவூர்சத்திரம் மாவட்ட மகளிரணி வலைதள பொறுப்பாளர் ஸ்டாலின் மேரி, செங்கோட்டை நகராட்சி கவுன்சிலர் ராஜபாத்திமா, தென்காசி ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா ஆகியோர், முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு, மாவட்டச் செயலர் ஜெயபாலனை சந்திக்க சென்றால், பெண்கள் என்றும் பாராமல் கேலி, கிண்டல் செய்கிறார்; 'அம்மிக்கல், ஆட்டுக்கல், குத்துக்கல்' என பட்டப்பெயர் சூட்டி அழைக்கிறார்.
நாங்கள் கவுரவமான குடும்பத்தில் இருந்து, கட்சிப் பணியாற்ற வந்துள் ளோம். அவர், இதுபோன்று அழைப்பதால், பிற ஆண்கள் கேலியாக பார்க்கும் சூழல் உருவாகிறது.
தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினராக, கடையநல்லுார் தொகுதியைச் சேர்ந்த, கலாநிதியை நியமித்துள்ளார். இவர் கட்சிக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகின்றன. அவருக்கு டாஸ்மாக் பார் நடத்த, அனுமதி வாங்கி கொடுத்துள்ளார்.
மாவட்ட தி.மு.க., அலுவலகத்திற்கு வழக்கமாக செல்லும் நான்கு பெண்களுக்கு மட்டும், முக்கியத்துவம் கொடுக்கிறார். பெண்களிடம் 'எல்லை' மீறி நடப்பதால், எங்களை போன்றவர்கள், கட்சி அலுவலகம் செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
எனவே, தென்காசி தெற்கு மாவட்டச் செயலர் ஜெயபாலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வெள்ளான்குளம் ஊராட்சி தலைவிக்கு எதிராக, ஜாதி ரீதியாக கோஷ்டிகளை உருவாக்கி, உட்கட்சி பூசலை உருவாக்கி வருவதாக, ஜெயபாலன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, அவர் பேசும் ஆடியோவும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடியை அவதுாறாகப் பேசி சர்ச்சையில் சிக்கியவர் ஜெயபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement

இவரை அந்த பெண்கள் நடுத்தெருவில் அடித்து இருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை ஆகவே வேறு எதாவது உள் நோக்கம் இருப்பதாக தெரிகிறது