Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 த.வெ.க., வேட்பாளர் தேர்வு விவகாரம்: ஆனந்த் - ஜான் இடையே வெடித்தது மோதல்

 த.வெ.க., வேட்பாளர் தேர்வு விவகாரம்: ஆனந்த் - ஜான் இடையே வெடித்தது மோதல்

தமிழக வெற்றிக் கழகத்தில் வேட்பாளர் தேர்வு பணிகள் நடந்து வரும் சூழலில், ஆனந்த் - ஜான் இடையே மோதல் வெடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


த.வெ.க.,வில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவுக்கும், விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கும் இடையே மோதல் வெடித்தது.

தலைவர் விருப்பம்

அதை தொடர்ந்துதான், 'எல்லாரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள்' என, மாமல்லபுரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், தலைவர் விஜய் அழுத்தமாக சொன்னார். ஆனால், உட்கட்சி மோதல் முடிவுக்கு வரவில்லை.

கூட்டணிக்கு இன்றளவிலும் கட்சிகள் வராததால், த.வெ.க., தனித்து போட்டியிடும் சூழல் உள்ளது. இதனால், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு பணிகளை, விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை - பனையூர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை, உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பொதுச்செயலர் ஆனந்த், ஜான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அப்போது, விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே, பல ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகள் பெயர் அடங்கிய பட்டியலை முன்வைத்த ஆனந்த், அவர்களில் பலருக்கும் வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கலாம் என கூறினார்.

அதை கேட்ட ஜான், 'இந்த பட்டியலில் இருப்பவர்களுக்கு சீட் கொடுத்தால், கட்சி அவ்வளவு தான். நல்ல வேட்பாளர்களை நிறுத்தினால் தான், வெற்றி பெற முடியும்' என கூறி, ஆனந்த் வழங்கிய பட்டியலை மேஜையின் மீது துாக்கி போட்டார்.

இதனால் கோபமான ஆனந்த், 'கட்சிக்காக உழைத்தவர்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது தான் தலைவர் விஜயின் விருப்பம்; அதை நீங்கள் நிராகரிக்க முடியாது' என கத்தி கூச்சல் போட்டார்.

பதிலுக்கு, 'இந்த பட்டியல் எப்படி தயாரானது என்பது, இங்கு இருக்கும் எல்லாருக்கும் தெரியும். கட்சிக்காக உழைப்பது யார் என விஜய்க்கு தெரியும். அதனால் தான் நான் இங்கே இருக்கிறேன்.
உங்களை போன்ற ஆட்கள் தான், உளவாளியாக இருந்து, இங்கிருந்து எல்லா தகவல்களையும் போலீசுக்கு அனுப்புகிறீர்கள்' என, ஜானும் பதிலுக்கு கத்தினார்.

கடும் கோபம்

'நான் ஆரம்பத்தில் இருந்தே தலைவர் விஜயுடன் இருக்கிறேன். உங்களை மாதிரி ஆட்கள் வந்த பிறகு தான், விஜய் சம்பந்தமான தகவல்கள் வெளியே போகின்றன.
'நீங்கள் யாரையெல்லாம் சந்திக்கிறீர்கள்; எதற்காக சந்திக்கிறீர்கள் என எனக்கு தெரியும். என்னையும், விஜயையும் தவறாக பேசியதுடன், த.வெ.க.,வுக்கு 2 சதவீத ஓட்டுகள்கூட தேறாது என நீங்கள் பேசிய ஆடியோவை ஊரே கேட்டதே' என, கடும் கோபத்தில் கொந்தளித்தார் ஆனந்த்.
இப்படியாக, இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் நீடித்தது. சுற்றியிருந்த நிர்வாகிகள் பலரும் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தும் நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்துக்கு போன ஆனந்த், 'தலைவர் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் வரை, நான் கட்சி வேலை எதுவும் செய்ய மாட்டேன்' என கூறிவிட்டு வெளியேறினார்.

புறக்கணிப்பு

அப்போது, 'ரொம்ப சந்தோஷம். இனி கட்சி நல்லா இருக்கும்' என ஜான் கிண்டலடிக்க, பனையூர் அலுவலகத்தில் இருந்து ஆவேசமாக ஆனந்த் வெளியேறினார். வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று ஆனந்த் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டார்.

கட்சியில் நடக்கும் பிரச்னைகளுக்கு விஜயும் ஒரு வகையில் காரணம். வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கியமான பணிகளைக்கூட அவர் முன்னின்று செய்யாமல் உள்ளார். மாவட்டச் செயலர் நியமனத்தில் துவங்கிய இந்த பிரச்னை, இப்போது வேட்பாளர் தேர்வில் வந்து நிற்கிறது.

தலைமையில் இருப்பவர்களுக்கு இடையே நடக்கும் இந்த மோதலில், அடுத்தகட்ட நிர்வாகிகள் தான், எந்த பக்கம் போவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement