வயநாட்டுக்கு அதிகமாக வந்தவை யானைகளே: ராகுலை கிண்டலடிக்கும் சுரேந்திரன்
கடந்த தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றி தந்த உற்சாகத்தில் காங்கிரசின் ராகுல், இம்முறையும் வயநாட்டில் போட்டியிடுகிறார். ஆனால் இம்முறை அவ்வளவு எளிதில் வெற்றி கிடைக்காது என்று கூறுகின்றனர் இடதுசாரி கூட்டணி வேட்பாளரான ஆனி ராஜாவும், பா.ஜ., கூட்டணி வேட்பாளரான சுரேந்திரனும்.
கேரள மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன், முதலில் தேர்தலில் போட்டியிடவில்லை என்றார். தலைமை கேட்டுக் கொண்டதால், வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டியிடுகிறார்.
அவர் கூறியதாவது:
எம்.பி., ஆன பின்னர் வயநாடு தொகுதிக்கு ராகுல் என்ன செய்தார் என்று இங்குள்ள மக்கள் கேட்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை ஆறுமுறை தான் அவர் வயநாட்டுக்கு வந்திருப்பார். அவர் வந்ததைவிட, அதிக தடவை காட்டு யானைகள் ஊருக்குள் வந்து சென்று விட்டன என்று வயநாட்டு மக்கள் கிண்டலாகக் கூறுகின்றனர்.
வயநாட்டில் 20 சதவீதம் பேர் வனப் பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களுக்காக ராகுல் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. கேரளாவிலேயே வயநாட்டில் உள்ள மக்கள்தான் மிகவும் பின் தங்கியுள்ளனர்.
அடிப்படை வசதி கூட இல்லாமல் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். இவர்களை ராகுல் கண்டுகொள்ளவில்லை.
விசிட்டிங் விசா எடுத்து வயநாட்டுக்கு வருகிறார்; ஏதாவது கடைக்கு சென்று 2 பரோட்டா சாப்பிடுகிறார்; இன்ஸ்டாகிராமில் அதை வீடியோவாக போடுகிறார்; திரும்பிப் போகிறார். இப்படித்தான் 5 வருடங்களில் ராகுலின் வயநாடு சுற்றுப்பயணம் அமைந்தது.
அமேதியில் பெற்ற தோல்வியை இந்த முறை வயநாட்டிலும் அவர் பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து