ஈயடிச்சான் காப்பி

அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையை படிக்கும்போது, இரண்டு நாட்களுக்கு முன்பு இதே வார்த்தைகளையும், வாக்கியங்களையும் எங்கோ படித்திருக்கிறோமே என்று உங்களுக்கு தோன்றினால், உங்கள் ஞாபகசக்திக்குசல்யூட். ஆமாம், இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான தி.மு.க.,வின் அறிக்கையில் வெளிப்பட்ட வரிகள், கருத்துகள், எண்ணங்கள் அனைத்தும் அ.தி.மு.க., அறிக்கையிலும் 'ஈயடிச்சான் காப்பி'யாக வளைய வருகின்றன. இரண்டிலும் அவ்வளவு ஒற்றுமைகள்! உதாரணங்களை, நீங்களே பாருங்கள்:

1 மத்திய அரசு கவர்னரை மாநிலங்களுக்கு நியமிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில முதல்வருடன் ஆலோசித்து, முதல்வர் ஒப்புதலோடு நியமிக்க வேண்டும்

2 உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம்

3 நீட் தேர்வுக்கு மாற்றாக, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முறையை கொண்டு வர, மத்திய அரசை அ.தி.மு.க., வலியுறுத்தும்

4 உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவை மீட்க, ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கை விரைவுபடுத்த, மத்திய அரசை வலியுறுத்துவோம்

தி.மு.க.,வுக்குத் தான் தொலைநோக்குப் பார்வையோ, தேசிய பார்வையோ இல்லையென்றால், அ.தி.மு.க.வுக்குச் சொந்தப் பார்வையும் இல்லை; சுயசிந்தனையும் இல்லை. குறைந்தபட்சம், தமிழகம் சார்ந்த பிரச்னைகளிலேனும் மாறுபட்ட ஆலோசனைகள், சிந்தனைகள், செயல் திட்டங்கள் அக்கட்சியிடம் இல்லை. அடிப்படையில் மாற்றி யோசிக்கும் கற்பனை வளம் கூட இல்லை. நல்ல ஆலோசனைகளைச் சொல்லும் சிந்தனையாளர் வளம் அக்கட்சியிடம் இல்லை என்பதைத் தான் இந்தத் தேர்தல் அறிக்கை காட்டுகிறது.

மிஸ்ஸிங்



அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 133 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், 6 முறை 'முயற்சிகளை மேற்கொள்ளும்' என்ற சொற்றொடரும், 307 முறை 'வலியுறுத்தல்' என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளன.

விரைவில் அமையவிருக்கும் மத்திய ஆட்சியில், என்னவெல்லாம் 'முயற்சிகளை மேற்கொள்வோம்', 'வலியுறுத்துவோம்' என்று அ.தி.மு.க. இப்போதே வாக்குறுதி கொடுக்கிறது.

தி.மு.க., தேர்தல் அறிக்கையிலாவது, எதிர்காலத்தில் 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைக்குமேயானால், இவற்றையெல்லாம் 'செய்வோம்', 'கொண்டு வருவோம்' என்று உறுதியாகச் சொல்லி இருந்தனர். அந்த உறுதியோ, வலிமையோ, தீர்மானமோ, அ.தி.மு.க., அறிக்கையில் மிஸ்ஸிங்.

யார் பிரதமர் என்றே தெரியாமல், யாருக்கு எதிர்காலத்தில் ஆதரவு தரப் போகிறோம் என்பதில் தெளிவில்லாமல், எப்படிப்பட்ட ஆட்சி அமையப்போகிறது, அதில் தாம் என்ன பங்கு வகிக்கப் போகிறோம் என்பதே தெரியாமல், காற்றில் கம்பு வீசும் தேர்தல் வாக்குறுதிகளையே அ.தி.மு.க., அறிக்கை முழுக்க பார்க்க முடிகிறது.

இன்னொரு பிரச்னை, மத்திய அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் பல திட்டங்களையும் அதன் பயன்களையும் இன்னும் உயர்த்தச் சொல்வது.

யோசிக்க மறந்து



அதாவது, 'மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில், வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்தச் சொல்வது; பேரூராட்சிகளில் 100 நாள் திட்டத்தை விரிவாக்கச் சொல்வது; பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதியோர் உதவித் தொகை, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற திட்டங்களில் வழங்கப்படும் அலகுத் தொகையை காலத்துக்கேற்ப உயர்த்தி வழங்க வலியுறுத்துவது' என்பவையெல்லாம் புதிய ஆலோசனைகளா? புதிய திட்டங்களா?

அவையெல்லாம் பயன் தரும் திட்டங்கள், அதன் பயனை இன்னும் பலருக்கும் விரிவுபடுத்துங்கள் என்று கோருவது ஒரு வாக்குறுதியா? அந்தக் கோரிக்கைகள் ஏன் அ.தி.மு.க., வாக்குறுதி பட்டியலில் இடம்பெற வேண்டும்? பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அல்லவா இடம்பெற வேண்டும்?

ஒருசில வாக்குறுதிகளை எழுதும்போது, இவையெல்லாம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன, தம்மால் இவற்றில் வாக்குறுதி கொடுக்க முடியுமா என்பதைக்கூட யோசிக்க மறந்து, தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உதாரணமாக 'விமான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்,' 'மத்திய அரசு வங்கிகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியதை, பழைய நிலைக்கு 7.50 சதவீதம் அளவிற்கு குறைத்திட வலியுறுத்துவோம்,' 'தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள் சென்றுவரும் அனைத்து வாகனங்கள், கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளானாலோ, ஏதேனும் வழக்குகளில் சிக்கினாலோ, இந்த வழக்குகளை மூன்று மாத காலங்களில் முடித்துக் கொடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.' என்பவற்றைச் சொல்லலாம்.

'தேர்தல் அறிக்கைதான் ஹீரோவாக இருக்கப் போகிறது' என்று கடந்த மாதம் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். ஆனால், அது 'ஜீரோ'வாக அல்லவா இருக்கிறது?



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)