ஒதுங்கும் அ.தி.மு.க., - தி.மு.க.,: கூட்டணிக்கு தாரை வார்க்கப்படுமா?
ஈரோடு: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி இம்முறை கூட்டணிக்கு தாரை வார்க்கப்படும் என எண்ணி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பணிகளை முடுக்கி உள்ளனர். ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தொகுதியில் எந்த பணியும் செய்யாமல் அமைதி காக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதி முற்றிலும் கிராமம் சார்ந்தது. வெவ்வேறு பிரிவு கவுண்டர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கின்றனர்.
இத்தொகுதியில் ஏற்கனவே சோஷலிச கட்சி, தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - பா.ஜ., வென்றுள்ளது. கடந்த 1996ல் தேர்தலில் சீர்திருத்தம் ஏற்படுத்தக்கோரி 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டு, தேசிய கவனத்தை ஈர்த்த தொகுதி. இத்தேர்தலுக்கு பின்னரே, தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீரமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
கடந்த 2021ல் தி.மு.க., வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை, 281 ஓட்டுகளில் வென்ற பா.ஜ., சரஸ்வதி, எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். வரும் சட்டசபை தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட, தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், கூட்டணியில் உள்ள காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, தெற்கு மாவட்ட காங்., தலைவர் முத்துகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், கொ.ம.தே.க., இளைஞரணி செயலர் சூரியமூர்த்தி, புதிய திராவிடர் கழக நிறுவன தலைவர் மற்றும் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்க ராஜ் கவுண்டர், ம.தி.மு.க.,வில் செந்தில்குமார் உட்பட சிலர் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வின் சரஸ்வதி எம்.எல்.ஏ.,வாக உள்ளதால், அவர் அல்லது அவருடைய மருமகள் கிருத்திகா அல்லது பா.ஜ.,வின் சிவசுப்ரமணியம், செந்தில் போன்றோர், தொகுதியில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதே நேரம், அ.தி.மு.க.,வில் அத்தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியம், முன்னாள் எம்.பி., செல்வ குமாரசின்னையன் ஆகியோரும் போட்டியிடும் முனைப்பில் உள்ளனர். இதில், சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக பா.ஜ.,வைச் சேர்ந்த சரஸ்வதி உள்ளதால், அத்தொகுதியை தக்க வைக்க பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர்.
இருப்பினும், இரு முக்கிய கட்சிகளின் கூட்டணி கட்சியினரே, மொடக்குறிச்சியில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டுவதால், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் களத்தில் ஆர்வமின்றி ஒதுங்கி உள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்