அ.தி.மு.க., கூட்டணியில் பசுபதி பாண்டியன் கட்சி
சென்னை: அ.தி.மு.க., தலைமை, தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் இறந்த பின், அவரது மகள் சந்தனப்பிரியா, அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலராக உள்ளார்.
ஆதரவு
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்து தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அவரது அமைப்புக்கு தென் மாவட்டங்களில் ஆதரவு இருப்பதால், அவரை அழைத்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க., கூட்டணியில், அவர் சேர முன்வந்துள்ளதாகவும், ஒரு தொகுதி ஒதுக்க முடிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகள் அதிகமாக இருக்கும் நிலக்கோட்டை அல்லது ஓட்டப்பிடாரம் தொகுதி ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: 'தி.மு.க., தலைவர் ஸ்டாலினைப் போல, நிறைய கட்சிகளை கூட்டணியில் இணைத்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
அதற்கேற்ப, சின்ன சின்ன கட்சிகளையும் விடாமல் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் அ.தி.மு.க., களம் இறங்கி உள்ளது.
அதற்காக, தமிழகத்தில் ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கும் அனைத்து கட்சிகளிடமும் கூட்டணி குறித்து பேசுமாறு கட்சியினருக்கு, பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் தான், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை, அ.தி.மு.க., கூட்டணியில் இணைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.
பலன் தருமா?
உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தே.மு.தி.க., போன்ற ஓரளவுக்கு மக்கள் செல்வாக்குள்ள கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டும், என்ற நோக்கில் தான், நிறைய கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டும் என சொல்லி உள்ளார்.
ஆனால், அது கைகூடாததால், சின்ன சின்ன கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கின்றனர். கூட்டணியில் நிறைய எண்ணிக்கையில் கட்சிகள் இருக்கலாம்; ஆனால், அவையெல்லாம் பலன் தருமா என தெரியாது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
Advertisement

சமீபத்தில் பாஜகவின் ஊரகநல அணி நகரப் பகுதி நிர்வாகி என்று ஒருவர் தான் 300 பேரை கட்சியில் சேர்ந்து உள்ளேன் என்று என்னிடம் சொன்னார்.
அந்த 300 பேரும் பாஜகவிற்கு ஓட்டு போடுவார்களா என்று கேட்டால் சற்றும் தயங்காமல் மாட்டார்கள் என்று சொல்லி விட்டார்.
உதிரி கட்சித் தலைவர்கள் கூட சுற்றுப்பவர்கள் கூட அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.