பன்னீர்செல்வம் - சசிகலா இணைந்தால் அ.ம.மு.க.,வுக்கு ஆபத்து
'பன்னீர்செல்வமும் சசிகலாவும் இணைந்து செயல்பட்டால், தென் மாவட்ட ஓட்டுக்கள் பிரிந்து விடும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, அ.ம.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சசிகலா சிறையில் இருந்த வெளியே வந்தபோது, அவரை வைத்தே அ.தி.மு.க.,வை கைப்பற்ற, தினகரன் திட்டமிட்டார். ஆனால், அ.தி.மு.க.,வில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வர் என நம்பியதால், தினகரன் பேச்சை சசிகலா கேட்கவில்லை. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
கடந்த 2017ல் ஆண்டில் இருந்து, 'பழனிசாமியை துரோகி' என, விமர்சித்து வந்த தினகரன், இப்போது அவரையே முதல்வராக்குவேன் என, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
தென் மாவட்டங்களில், தினகரன் பலமே, முக்குலத்தோர் சமூக ஓட்டுகள்தான். அதனால்தான், அவரை பலகட்ட பேச்சுக்கு பின், கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது, பா.ஜ., தலைமை.
இந்நிலையில், பழனிசாமியுடன் தினகரன் கைகோர்த்து இருப்பதை, அ.ம.மு.க., நிர்வாகிகள் பலரும் ஏற்கவில்லை. ஒருவர் பின் ஒருவராக, கட்சியை விட்டு விலகி வருகின்றனர். கட்சியில் உள்ள நிர்வாகிகளும், அ.தி.மு.க.,வுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர வாய்ப்பு இல்லாததால், சசிகலா புதுக்கட்சி துவங்கும் எண்ணத்தில் இருக்கிறார். இல்லையென்றால், அவரது உறவினர் திவாகரன் நடத்தும் அண்ணா திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட உள்ளார்.
முக்குலத்தோர் அடர்த்தியாக இருக்கும் தொகுதிகளில் மட்டும் களமிறங்க, சசிகலா முடிவெடுத்து உள்ளார். இதற்காக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையும் அழைத்து உள்ளார்.
குறிப்பாக, முக்குலத்தோர் சமூகத்துக்கு எதிராக, பழனிசாமியின் 10.5 சதவீத வன்னியர் உள் ஒதுக்கீட்டை காட்டி, பிரசாரம் செய்யவும் சசிகலா திட்டமிடுகிறார். சசிகலா, பன்னீர் இணைப்பு நடந்தால், முக்குலத்தோர் ஓட்டுகள் சிதறி, தினகரனின் செல்வாக்கு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
இதை தெரிந்து கொண்ட தினகரன் அச்சத்தில் உள்ளார். எனவேதான், இதுநாள் வரை பொதுவெளியில் சசிகலாவை ஒருமுறை கூட விமர்சனம் செய்யாத தினகரன், 'சசிகலா தி.மு.க.,வின் ஏஜென்ட்; பிள்ளை பிடிப்பவர்கள்போல வேட்பாளரை பிடிக்கிறார்; சசிகலா கட்சி தொடங்குவதாக சொன்னல், நம்பி யாரும் ஏமாற வேண்டாம்' என, கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளார்.
அதேபோல், சசிகலா பேச்சை கேட்க வேண்டாம் என, பன்னீரிடமும் தினகரன் கூறியுள்ளார். ஆனால், பன்னீர் கேட்கவில்லை. எனவே, பன்னீரை, 'பசு தோல் போர்த்திய புலி' என, தினகரன் தாக்கியிருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
Advertisement

அது சரி ஒன்னுக்கும் உதவாத ஓபிஎஸ்ஸால் என்ன பாதிப்பு...