பன்னீர் - சசிகலா இணைந்தால் அ.ம.மு.க.,வுக்கு ஆபத்து
'பன்னீர்செல்வமும், சசிகலாவும் இணைந்து செயல்பட்டால், தென் மாவட்டங்களில் ஓட்டுகள் பிரிந்து விடும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அ.ம.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தபோது, அவரை வைத்தே அ.தி.மு.க.,வை கைப்பற்ற தினகரன் திட்டமிட்டார். ஆனால், அ.தி.மு.க.,வில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வர் என நம்பியதால், தினகரன் பேச்சை சசிகலா கேட்கவில்லை. இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
கடந்த 2017ல் இருந்து, 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை துரோகி' என விமர்சித்து வந்த தினகரன், இப்போது 'அவரை முதல்வராக்குவேன்' என கூறி அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். தென் மாவட்டங்களில் தினகரனின் பலம், முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் தான். அதனால், அவரை பலகட்ட பேச்சுக்கு பின், கூட்டணிக்குள் பா.ஜ., தலைமை கொண்டு வந்தது.
ஆனால், பழனிசாமியுடன் தினகரன் கைகோர்த்ததை, அ.ம.மு.க., நிர்வாகிகள் பலர் ஏற்கவில்லை; பலர், கட்சியை விட்டு விலகுகின்றனர். கட்சியில் இருப்பவர்களும், அ.தி.மு.க.,வுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர வாய்ப்பு இல்லாததால், புதுக்கட்சி துவங்கும் எண்ணத்தில் சசிகலா இருக்கிறார். அப்படி இல்லாவிட்டால், தன் உறவினர் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் கட்சியில் இணைந்து செயல்பட உள்ளார்.
முக்குலத்தோர் சமூகத்தினர் அடர்த்தியாக இருக்கும் தொகுதிகளில் மட்டும் களமிறங்கவும் சசிகலா முடிவெடுத்து உள்ளார். இதற்காக, அ.தி.மு. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தையும் அழைத்துள்ளார்.
குறிப்பாக, பழனிசாமியின் 10.5 சதவீத வன்னியர் உள்ஒதுக்கீடு, முக்குலத்தோர் சமூகத்துக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்யவும் சசிகலா திட்டமிடுகிறார். சசிகலா - பன்னீர் இணைப்பு நடந்தால், முக்குலத்தோர் ஓட்டுகள் சிதறி, தினகரனின் செல்வாக்கு குறைய வாய்ப்பு உள்ளது.
இதை அறிந்து, தினகரன் அச்சத்தில் உள்ளார். எனவே தான், இதுநாள் வரை பொதுவெளியில் சசிகலாவை விமர்சனம் செய்யாத தினகரன், 'சசிகலா தி.மு.க.,வின் ஏஜன்ட்; பிள்ளை பிடிப்பவர்கள் போல வேட்பாளரை பிடிக்கிறார்; சசிகலா கட்சி துவங்குவதாக சொன்னால், யாரும் ஏமாற வேண்டாம்' என கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதேபோல், 'சசிகலா பேச்சை கேட்க வேண்டாம்' என பன்னீரிடமும் தினகரன் கூறியுள்ளார். ஆனால், பன்னீர் கேட்காததால், அவரை, 'பசு தோல் போர்த்திய புலி' என தினகரன் விமர்சித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தீயசக்தியிடம் விலை போவதா?
ஜெயலலிதாவின் நல்லாட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைத்திடுவோம் என சூளுரைத்தவர்களில் சிலர், இத்தனை காலம் துாக்கத்தில் இருந்து விட்டு, தங்களின் சுயநலனுக்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலன் தரவில்லை. இதனால், ஜெயலலிதா தொண்டர்களை ஏமாற்றி, அவர்களை துண்டாட நினைப்பதையும், ஜெயலலிதாவால் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, தற்போது தன் சுயநலனுக்காக, தீய சக்திகளிடம் விலை போய், அவர்களுடன் இணைய துடிக்கின்றனர்.
சட்டசபைக்குள் தன் ஆதரவாளரை வைத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை, மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். இந்த சுயநல கூட்டத்துக்கு, வரும் சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,
- நமது நிருபர் -
Advertisement
வீணாப்போன பண்ணீர் எல்லாம் எந்தவித பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்திட முடியாது... உண்மையான துரோகி யார் என்பதை எடப்பாடியை எதிர்க்கும் அஇஅதிமுக சொந்தங்கள் இப்பவாவது புரிந்து கொண்டு இருப்பார்கள் ஓபிஎஸ் நச்சு பாம்பு என்பதை..
ஆமாம் ஆபத்துதான் வரவு செலவு கணக்கு எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்

இல்லாததை உருடுவதில் அப்படி என்ன மகிழ்ச்சியோ . கருத்து சுதந்திரம்.