ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு: அரசியல் கட்சிகளுக்கு கமிஷன் 'கிடுக்கி'
-நமது சிறப்பு நிருபர் -
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி தேர்தல் அதிகாரிகளுக்கும், மத்திய விசாரணை முகமைகளுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதி களுக்கும், ஏப்., 23ல் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் மறைமுகமாக ஓட்டுக்கு பணம் கொடுப்பது வழக்கமாகி வருகிறது.
இது தவிர, மது பானம், மளிகை பொருட்கள், எலெக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வழங்கி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றன.
கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக் குறிச்சி மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப் பட்டுவாடா நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. இறுதியாக அதே ஆண்டு நவம்பரில் இரு தொகுதிகளுக்கும் தனியாக தேர்தல் நடத்தப்பட்டது.
எனவே, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில், கண்காணிப்புகளை தீவிரப்படுத்தும்படி உளவுத் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை மற்றும் பாதுகாப்பு முகமைகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:
கருப்பு பணம், போதைப் பொருட்கள் மற்றும் பிற சட்டவிரோத சலுகைகள் அதிக அளவில் புழங்குகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம், சலுகைகள் வழங்கப்படுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக ரொக்கம் சிக்கினால், உடனடியாக வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கையால் 69.59 கோடி ரூபாய், 8.17 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், 330 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள், 99.85 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 35.21 கோடி ரூபாய் மதிப்பிலான பிற இலவசப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன .
தேசிய அளவில் 849.15 கோடி ரூபாயும், 8,889.74 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் சிக்கின.
Advertisement
ஒன்றும் செய்ய முடியாது. கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கொடுத்து முடிக்கப் பட்டு விட்டது. இப்ப பாவம் சந்தைக்கு மாடு வாங்க செல்பவர்கள், மகனுக்கு ரொக்கமாக பீஸ் கட்ட செல்பவர்கள், மகள் திருமணத்திற்கு நகை வாங்க செல்பவர்கள் இவர்கள் போன்றவர்களைத்தான் பறக்கும் படை பாய்ந்து,பாய்ந்து பிடிக்கும்.
ஒன்றும் தடுக்க முடியாது வணிகர் பொதுமக்கள் விவசாயிகள் கொண்டு செல்லும் பணம் வழிப்பறி செய்யபடும்

பணம் வாங்காமல் ஓட்டு போட்டு பழக்கம் இல்லையே! சென்ற முறை ஐந்தாயிரம் கொடுத்த மவராசன் மேலும் கொடுக்காமல் போய் விடுவாரா? மற்றவர்கள் அதைவிட அதிகமாக கொடுப்பதாக உறுதி அளித்தால் தான் ஓட்டு!