தி.மு.க., கூறும் எண்ணிக்கை ஏற்புடையதல்ல: மார்க்சிஸ்ட்
சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் பேச்சு நடத்த அமைக்கப்பட்டிருக்கும் தி.மு.க., குழுவினரிடம், இரண்டாம் கட்டமாக நடந்த பேச்சில், இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் தேர்தலில், ஐந்து தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., குழுவினருடன் நேற்று, மார்க்சிஸ்ட் கட்சியினர் இரண்டாம் கட்ட பேச்சு நடத்தினர். அதில், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம் தலைமையிலான குழுவினர் வலியுறுத்தி உள்ளனர்.
சண்முகம் அளித்த பேட்டி: கூடுதல் தொகுதிகள் கேட்டுள்ளோம். முதல்வர் ஸ்டாலினிடம் கலந்து பேசிய பின், மீண்டும் நாளை பேசலாம் என, தி.மு.க., குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்சிகள் தி.மு.க., அணியில் சேர்ந்துள்ளன. நியாயமான காரணத்தை, அவர்கள் எடுத்துக் கூறினர். அது ஏற்கக் கூடியதாக இருக்கிறது.
தற்போது எண்ணிக்கையை மட்டும் பேசினோம். எண்ணிக்கை முடிவான பின், எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்