சேலம்: சேலத்தில் வரும் 13ல், த.வெ.க., தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த, 51 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சேலத்தில் வரும் 13ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய் கலந்து கொள்ளும், 'மக்கள் சந்திப்பு கூட்டம்' நடத்த, த.வெ.க., தலைமை முடிவெடுத்தது. சீலநாயக்கன்பட்டி அல்லது சேலம் அருகே மகுடஞ்சாவடி பகுதியில், கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி, போலீசில் த.வெ.க.,வினர் மனு அளித்தனர்.
ஆனால், போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இதனால், 5,000 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில், சேலத்தில் கூட்டம் நடத்திக்கொள்ள, 51 நிபந்தனைகளுடன் போலீசார் நேற்று அனுமதி அளித்தனர். இது குறித்து, த.வெ.க., மாவட்ட செயலர் பார்த்திபன் கூறியதாவது: போலீசாரின் 51 நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளன. பங்கேற்போர் 5,000க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதால், விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு பதிலாக, 'விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்' நடத்தப்படுகிறது. கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், வீட்டிலிருந்தபடியே 'டிவி'யில் நிகழ்ச்சியை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் பரவாசுதேவன் கூறுகையில், ''பிப்., 13 மதியம் 12:00 மணிக்கு கூட்டத்தை துவங்கி, பிற்பகல் 3:00 மணிக்குள் முடிக்க வேண்டும். ''போலீசின் 51 நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் த.வெ.க.,வினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.