'கொளுத்துது வெயிலு! கள்ளு மட்டுமாவது குடுங்க'
பிரசாரத்துக்கு செலவிட கட்சியினர் 'பம்மி' வரும் நிலையில், கொளுத்தும் வெயிலில் கொடி பிடிக்க தென்னங்'கள்' மட்டுமாவது வினியோகிக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த, 2009, லோக்சபா தேர்தலில், கொங்கு மண்டலத்தில், வெற்றி பெற, அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்த, தி.மு.க., வினர், விவசாயிகள் தென்னை மரங்களில் இருந்து 'கள்' இறக்குவதை கண்டுகொள்ளவில்லை.
அந்த தேர்தல் பிரசாரத்தில், அனைத்துக் கட்சியினரும், குறைந்த விலைக்கு கிடைத்த, தென்னங்கள்ளை வாங்கி தொண்டர்களுக்கு வினியோகித்தனர்.
இதனால், உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் பிரசாரம் களை கட்டியது. தொடர்ந்த தேர்தல்களிலும், பிரியாணி, குவாட்டர் என பிரசார களம் களை கட்டியது.
தற்போதைய தேர்தலில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பிரசார பணிகளுக்கு செலவிட அனைத்து கட்சியினரும், 'பம்மி' வருகின்றனர். இதனால், கொளுத்தும் வெயிலில், கொடி பிடிக்க யாரும் வருவதில்லை.
தென்னை மரங்களில் இருந்து, 'கள்' இறக்க அனுமதித்தால், பிரசாரமும் களைகட்டும்; விவசாயிகளும் தொழிலாளர்களும் பயனடைவர் என, கட்சியினருக்கு மறைமுகமாக பிரஷர் கொடுத்து வருகின்றனர்.
வாசகர் கருத்து