'முஸ்லிம்களை புறக்கணிக்காதீங்க'
லோக்சபா தேர்தலில் தி.மு.க., ஒதுக்கிய 10 தொகுதிகளை காங்., பெற்றது. தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளை பெறுவது, யாருக்கு சீட் கொடுப்பது என்று கோஷ்டி தலைவர்களுக்கு இடையே போட்டா போட்டி துவங்கியுள்ளது. அதனால், அக்கட்சியில் எம்.பி., கனவில்உள்ளோர், டில்லி தலைமையை வெவ்வேறு வழிகளில் அணுகி வருகின்றனர்.
இந்நிலையில் 'சிறுபான்மையினர் பெரும் அங்கம் வகிக்கும் காங்.,கில் இஸ்லாமியர்களை இந்த தேர்தலிலும் புறக்கணித்து விட வேண்டாம். எங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்' என ராகுல், சோனியாவிற்கு நீண்ட கடிதம் அனுப்பி நெருக்கடி கொடுத்து வருகின்றனர் சிறுபான்மையினர்.
இதுகுறித்து காங்., சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் செய்யது பாபு கூறியதாவது:
உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா என எந்த தேர்தல் என்றாலும் கட்சியில் பொதுச் செயலர், செயலர், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் என எந்தப் பதவிகள் என்றாலும், பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர். 1967க்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் ஆட்சியில் இல்லை. இருப்பினும் சிறுபான்மையினர், ஆதிதிராவிட மக்கள் ஒன்றிணைந்து இக்கட்சியை இன்று வரை வலுப்படுத்தி வருகிறோம்.
வரும் லோக்சபா தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஆதரவை பெற, வேட்பாளர்களில் பிரதிநிதித்துவம் வேண்டும். வெறுமனே, காங்கிரஸ் மைனாரிட்டிகளின் ஆதரவு கட்சி என்று சொல்வதில் பயன் இல்லை. முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி அதை நிரூபிக்க வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலில் தேனியில் முஸ்லிம் ஜமாத்துகளை காங்., சரியாக கண்டுகொள்ளாததால் தான், 58 ஜமாத்துகளைச் சேர்ந்தோரும் வருத்தத்தில் இளங்கோவனுக்கு ஓட்டளிக்கவில்லை. விளைவாக அவர் தோற்றார். இத்தேர்தலில் தேனி தொகுதியில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை களம் இறக்க டில்லி காங்., தலைமைக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இந்த தேர்தலிலும் வழக்கம் போல் கண்டுகொள்ளவில்லை என்றால் இழப்பு கட்சிக்குத் தான்; எங்களுக்கு இல்லை
.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து