தி.மு.க., - காங்., இறுதி கட்ட பேச்சு தாமதமானது ஏன்?
- நமது நிருபர் -
நேற்று மாலை, 5:00 மணிக்கு இறுதிகட்ட பேச்சுக்கு வருவதாக, காங்கிரஸ் தரப்பில் தி.மு.க.,விடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கோவாவில் இருந்து மதியமே சென்னை வந்த பின்பும், இரு தரப்புக்குமான பேச்சு தொடங்குவது தாமதமானது.
மாலை, 3:00 மணிக்கு, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை தொடர்பு கொண்ட தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர், 'தி.மு.க., ஒதுக்க உள்ள ராஜ்யசபா சீட்டில் காங்., தரப்பில் யாரை நிறுத்தப் போகிறீர்கள்; தி.மு.க.,வை மிகக் கடுமையாக விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி என்றால் ஏற்க முடியாது. அதனால், எம்.பி., வேட்பாளர் யார் என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிய விரும்புகிறார்' என்று தெரிவித்துள்ளனர்.
'கட்சி மேலிடத்தில் கேட்டுச் சொல்கிறேன்' என்று செல்வப்பெருந்தகை பதில் கூறியிருக்கிறார். பின், இந்தத் தகவலை, காங்., தலைவர் கார்கே, காங்., பொதுச்செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் உள்ளிட்டோரிடம் கூறியிருக்கிறார். காங்., வேட்பாளர் யார் என்பதை, தங்களிடம் சொன்ன பிறகு தான், உடன்பாட்டில் கையெழுத்திட முடியும் என்பதில், தி.மு.க., உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சோனியா, ராகுல் உள்ளிட்டோரிடம் கார்கே பேசியுள்ளார். இறுதியில், 'பிரவீன் சக்கரவத்தியை தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக்க மாட்டோம்' என, கார்கே தெரிவித்த தகவலையடுத்து, கிரீஷ் ஷோடங்கரும், செல்வப்பெருந்தகையும் இரவு 7:00 மணிக்கு மேல், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு சென்றனர்.
அங்கு முன்கூட்டியே வந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., பேச்சு குழுவினர், காங்., குழுவினருடன் பேசி, தொகுதி பங்கீட்டை முடித்துள்ளனர்.
Advertisement

தமிழகத்தில் காங்கிரஸ் ஏன் காணாமல் போனது என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளே சாட்சி!