புதுச்சேரியை மிகச்சிறந்ததாக உருவாக்க தேஜ பாடுபடும்: மோடி
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணி புதுச்சேரியை மிகச் சிறந்ததாக உருவாக்கப் பாடுபடும் வேளையில், எதிர்க்கட்சிக்கு அது குறித்த எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தேஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுச்சேரியில் இன்று நடந்த ரோடு ஷோ சிறப்பாக அமைந்தது. புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை மீண்டும் தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனர், இதன்மூலம் புதுச்சேரியை மிகச்சிறந்ததாக உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். ரோடு ஷோவில் பெண்களும், இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்
முதல்வர் ரங்கசாமியின் கீழ் புதுச்சேரி பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் சாதித்துள்ளது. சமூக நலன் மீது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கவனம் செலுத்துவது, பலதரப்பட்ட மக்களுடன் நல்ல இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது விநியோக அமைப்புமுறை, வேலைவாய்ப்பு உருவாக்கம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், விவசாயிகள், இளைஞர்களின் நலன் உள்பட இன்னும் பல திட்டங்களை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், மிகுந்த பாராட்டுக்குரியவை.
நாங்கள் புதுச்சேரியில் சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறோம். புதுச்சேரியின் பொருளாதாரம் வளர்வது மிகவும் முக்கியம். கடந்த முறை நான் புதுச்சேரிக்கு வந்திருந்தபோது பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 41 சாலைகளின் கட்டுமானம், புதுச்சேரியில் ஒரு பாரம்பரிய நகரத்தின் உருவாக்கம், சதுப்பு நிலக் காடுகளை மீட்டெடுத்தல் மற்றும் குடிநீர் விநியோக மேம்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்தப் பணிகள் அனைத்தும் உரிய காலத்தில் நிறைவடைவதை இந்த இரட்டை எஞ்சின் அரசு உறுதி செய்யும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி BEST புதுச்சேரியை உருவாக்கப் பாடுபடும் வேளையில், எதிர்க்கட்சிக்குப் புதுச்சேரியின் முன்னேற்றம் குறித்து எந்தத் தொலைநோக்குப் பார்வையும் இல்லை. அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக, புதுச்சேரியை ஒரு ஏடிஎம் போலப் பயன்படுத்தி, டில்லியின் தலைமையின் கீழ் அது இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறார்கள். சில நாட்களுக்கு முன், நான் புதுச்சேரி பாஜ வாக்குச்சாவடி முகவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது கட்சியின் செயல்வீரர் ஒருவர், எதிர்க்கட்சியின் நோக்கம் ஒரு WEAK புதுச்சேரியை உருவாக்குவதே என்று மிகச் சரியாகவே கூறினார்.
அவர் WEAK என்று கூறியதன் பொருள் இதுதான்:
W- மோசமாக நிர்வாகம் செய்தல்
E- வளர்ச்சிக்கு முடிவு கட்டுதல்
A - மக்களுக்கு எதிராக இருத்தல்
K- பொருளாதாரத்தை அழித்தல். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Advertisement
புதுச்சேரியில் பாஜக ,என்ஆர் காங்கிரஸில் இருப்பவர்கள் அனைவரும் முன்னாள் காங்கிரஸ் கட்சியினர் தானே இதில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்று கூறுவது புதுமையான ஒன்று.
பெரும் வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லை.சுற்றுலா வளர்ச்சிக்கு , பெரிய கட்டமைப்பை இன்னமும் உருவாக்கவில்லை.

அடிக்கடி வந்து அடிக்கல் நாட்டுறதே சாதனைன்னு சொல்லிக்கறாங்க.