அதிருப்தியால் த.வெ.க., தாவும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
தி .மு.க.,வில் சீட் கிடைக்காததால் முதல்வர் வரவேற்பில் பங்கேற்காத சண்முகையா எம்.எல்.ஏ., மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.
அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், சண்முகையாவுக்கு 2021ல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கும், மாவட்டச் செயலரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டதால், சண்முகையாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க., வேட்பாளராக, அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், நேற்று வேட்பு மனுவையும் தாக்கல் செய்து விட்டார். வேறு தொகுதியை சேர்ந்தவர் என்பதால், கட்சியினர் மத்தியில் அவருக்கு போதிய வரவேற்பு இல்லை.
இந்நிலையில், தென் மாவட்ட பிரச்சாரத்திற்காக, தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் துாத்துக்குடி வந்த முதல்வரை வரவேற்க சண்முகையா செல்லவில்லை. அன்றைய தினம் நடந்த தேர்தல் தொடர்பான வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
சண்முகையா குடும்பத்திற்கு என ஓட்டப்பிடாரம் தொகுதியில் தனி செல்வாக்கு உள்ளதால், அவரது அண்ணனான தொழிலதிபர் அயிரவன்பட்டி முருகேசனை சுயேச்சையாக போட்டியிட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, யாரும் எதிர்பாராத வகையில், த.வெ.க., வேட்பாளராக சண்முகையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சண்முகையா ஆதரவாளர்கள் கூறியதாவது:
ஓட்டப்பிடாரம் தொகுதி த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதன்ராஜா, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராக இருந்தார். அவரை கட்சி தலைமை தடுத்து வைத்துள்ளது.
த.வெ.க.,வில் இணைய முன்வந்துள்ள சண்முகையாவுக்கு விட்டுக்கொடுக்கும்படி மதன்ராஜாவிடம் பேசப்பட்டு வருகிறது. அனைத்தும் சரியாக நடந்தால் த.வெ.க., வேட்பாளராக சண்முகையா அறிவிக்கப்பட்டு நாளை மனு தாக்கல் செய்வார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

தாவுடா ... தாவு..