தென் மாவட்டங்களில் வெற்றி பெற தேர்தலில் தினகரன் போட்டியிட தமிழக பா.ஜ., வலியுறுத்தல்
சென்னை: 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் இணைந்துள்ளதால், தென் மாவட்டங்களில் வெற்றி பெற, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், தேனி மாவட்டத்தில் போட்டியிட வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - அ.ம.மு.க., இணைந்துள்ளன. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, கூட்டணியில் சேர்க்க பா.ஜ., முயற்சித்து வந்த நிலையில், அவர் தி.மு.க.,வில் இணைந்து விட்டார்.
இதனால், வரும் சட்டசபை தேர்தலில், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, நெல்லை, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில், அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியான, முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு வரும் என அக்கட்சி நம்பிக்கையோடு உள்ளது.
தனி கட்சி துவங்கி, சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக சசிகலா அறிவித்துள்ளதும், தங்களுக்கு சாதகமாக இருக்கும் என தி.மு.க., நினைக்கிறது. அதே நேரம், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தாலும், வரும் சட்டசபை தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என தினகரன் கூறியுள்ளார்.
பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் இணைந்த நிலையில், தினகரனின் முடிவு, அ.தி.மு.க., கூட்டணிக்கு பாதகத்தை ஏற்படுத்திவிடும் என பா.ஜ., கருதுகிறது. எனவே, தென் மாவட்டங்களில் தி.மு.க.,வை தோற்கடிக்க, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், தேனி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என, பா.ஜ., தலைமை வலியுறுத்தி வருவதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மத்திய அமைச்சர் பீயூஸ் கோயல், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தினகரனிடம் பேசியுள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்