வெளிநாட்டு பங்குகள் விவகாரம்: தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சிக்கல்
- டில்லி சிறப்பு நிருபர் -
வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த கூடுதல் மனு மீது பதிலளிக்கும்படி, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெறாமல், வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியதாக, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து, 'சம்மன்' அனுப்பியது. இதை எதிர்த்து, ஜெகத்ரட்சகன் தொடர்ந்த வழக்கில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இடைக்கால தடையை நீக்கக் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளோம்.
'அதில், சில தொழில்நுட்ப திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பதால், திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
ஜெகத்ரட்சகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில், 17 லட்சம் பங்குகள் வாங்கப்பட்டன. விசாரணையில், ஒரு ரூபாய் கூட வெளிநாட்டிற்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பணப்பரிமாற்றமே நடக்காத நிலையில், எதற்காக சம்மன் அனுப்பி தொந்தரவு செய்ய வேண்டும்' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடைக்கால தடையை நீக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த கூடுதல் மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஜெகத்ரட்சகனுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் அறிவுறுத்தினர். வழக்கு இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Advertisement

எது சிக்கலா? ஹல்லோ அவர் திமுக வை சேர்ந்தவர். அந்தக் கட்சியில் சேர்ந்து விட்டால் எவ்வளவு பெரிய ஊழல் பேர்வழியும், மொள்ளமாரியும், புனிதர், உத்தமர் ஆகி விடுவார்கள். அவர் இப்பொழுது புனிதர். உலகின் மிகவும் முக்கியமான ஒன்பது ஆறுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீரை தொளித்து அவர் புனிதர் ஆக்கப்பட்டு விட்டார் - நம்ம ஐந்து கட்சி அமாவாசை ஆகிய டேக் டைவேர்ஷன் ஹீரோ செந்தில் பாலாஜி, அதர்மயுத்தர் பன்னிசெல்வம் ஸாரி பன்னீர்செல்வம் மாதிரி.