கருணாநிதி பிறந்த நாள் ரூ.4,000 வழங்க ஸ்டாலின் உறுதி
நாகர்கோவில்:''நாங்கள் ஆட்சிக்கு வந்து, ஜூன் 3ல் கருணாநிதி பிறந்த நாள் அன்று, 4,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின்தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்டம்,தக்கலையில், தி.மு.க., - காங்., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று அவர் பேசியதாவது:முதல்வர் இ.பி.எஸ்., தன்னை படிப்படியாக வளர்ந்து வந்தவர் என்று கூறுகிறார். படிப்படியாக வளர்ந்து வந்தவன் நான்.நீங்கள் பல்லி, பாம்பு போல ஊர்ந்து வந்தவர். நெடுஞ்சாலைத் துறை மூலம் முதல்வரின் உறவினருக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்தது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை உயிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். அந்த விசாரணை நடந்திருந்தால், அவர் இன்று வெளியே இருந்திருக்க மாட்டார். பா.ஜ.,வின் கிளை கழகமாக, அ.தி.மு.க., செயல்பட்டுகொண்டிருக்கிறது.இ.பி.எஸ்., உறவினர்கள் குவித்த சொத்துகள் குறித்து, நாம் ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நிதியாக மக்களுக்கு, 5,000 ரூபாய் கொடுக்கச் சொன்னோம். ஆனால், 1,000 ரூபாய் கொடுத்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்து, ஜூன் 3ல் கருணாநிதி பிறந்த நாள் அன்று, மீதமுள்ள, 4,000 ரூபாய் வழங்கப்படும்.குமரியில் அய்யா வைகுண்டசாமி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். கன்னியாகுமரி சரக்கு பெட்டக துறைமுகத்தை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவர் என்பதால், தி.மு.க., இந்த திட்டத்தை வர விடாது.மீனவ மக்களை கடல்சார்பழங்குடியினர் என, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.மதவெறியை தூண்டி நாட்டை குட்டிச்சுவராக்க மோடியும், அமித்ஷாவும் நினைக்கின்றனர். இது, திராவிட மண்; தமிழகத்தில்அவர்கள் நுழைய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.