கூட்டத்திற்கு ஆள் சேர்க்க களமிறங்கிய அம்மணிகள்!
தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கும், வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வரும் போதும், 'மாஸ்' காட்ட, பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருவர். இதற்கு, பெரும்பாலும் ஆண்களே, 'ஏஜன்டாக' இருப்பர். இத்தேர்தலில், பெண்கள் அந்த வேலைக்கும் போட்டியாக வந்துள்ளனர்.இவர்கள், ஒவ்வொரு வேட்பாளரையும் அணுகி, 'பேக்கேஜ்' முறையில், 'ரேட்' பேசுகின்றனர். இரண்டு மணி நேர கூட்டத்துக்கு பெண்கள் வர, பிரியாணி போட்டு, தலா, 250 ரூபாய். வாகனத்தை வேட்பாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்ற பெண், 'ஏஜன்டு'கள், வேலுார் மாவட்டத்தில், 11, திருப்பத்துாரில், எட்டு, ராணிப்பேட்டையில், ஆறு பேர் உள்ளனர். வேலுார் மாவட்டம், அணைக்கட்டு, பெண், 'ஏஜன்ட்' பவித்ராவிடம் பேசினோம். ''மகளிர் குழுவில் துணை தலைவியா இருக்கேன். 100 நாள் வேலை திட்டத்திலும் இருக்கேங்க. போன தேர்தல் வரைக்கும், கொஞ்சம் பெண்களை அழைச்சிட்டு வாம்மா...னு சொல்லி சின்னதா கமிஷன் தந்தாங்க. அதுல கிடைச்ச அனுபவத்துல, இப்ப நானே ஏஜன்ட் ஆயிட்டேன்,'' என, பூரிக்கிறார்.எந்த எந்த கட்சிகள் கூட்டத்துக்கு பெண்கள் கேட்கிறது? “தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., மூணு கட்சிலயும் கேப்பாங்க. காலை, மதியம், ராத்திரின்னு பிரிச்சுக்குவேன். அந்தந்த நேரத்ல யாரு ஓய்வா இருப்பாங்களோ அவங்க, 'லிஸ்ட்'லாம் இருக்கு. ''வண்டி அனுப்பி கூட்டிட்டு போக சொல்லிருவேன். கூட்டம் முடிஞ்சு எல்லாரையும் பத்திரமா அவங்கவங்க விட்ல இறக்கி விட்டதா, 'மெசேஜ்' வரணும். அப்பத்தான் என்னால, துாங்க முடியும்,'' என சிலிர்த்தபடி சொல்கிறார். அ.தி.மு.க.,வில் மகளிர் அணி வளமாக செயல்படுவதால், அவர்களே வந்து விடுகிறார்களாம். எனவே, 100 பேர் போதும் என்று, 'ஆர்டர்' கொடுக்கின்றனர். தி.மு.க.,வில் கனிமொழி அளவுக்கு அவருடைய அணி சுறுசுறுப்பாக இல்லை என்பதால், அதிகமான பெண்களை கூட்டி வர, 'ஆர்டர்' கிடைக்கிறது. ''பாழாப்போன இந்த கொரோனாவால, 'லேடீஸ்' இப்ப கொஞ்சம் பயப்படுறாங்க. ஆனா, வெயிலுக்கு குடை, 'கூலிங் கிளாஸ்'லாம் தரதால எல்லாம் சொல்லி கூட்டிட்டு வந்துருவேன்,'' என்கிறார் பவித்ரா.'பிசினஸ்' நல்லா நடக்குதா? வாயெல்லாம் பல்லாக சிரிக்கிறார் பவித்ரா. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.