புதுச்சேரியை வீணாக்கி விட்டார் நாராயணசாமி ; ரங்கசாமி சரமாரி குற்றச்சாட்டு

புதுச்சேரி அரசியலில், 30 ஆண்டுகளாக, அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர், முன்னாள் முதல்வர் ரங்கசாமி. கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, காங்., கட்சியில் இருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து, இரண்டே மாதங்களில் ஆட்சியை பிடித்து அசத்தியவர்; ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். தேர்தல் களத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த போதும், நாராயணசாமி தலைமையிலான காங்., ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?'காங்., ஆட்சியின் குறைகளை, சட்டசபையிலும், வெளியிலும் பல முறை சுட்டிக் காட்டியுள்ளோம். நாங்கள் அமைதியாக இல்லை; அனைத்தையும் கண்காணித்து கொண்டிருந்தோம். நாராயணசாமி தலைமையிலான ஆட்சியில், எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.ஐந்தாண்டுகளில், எந்த மாற்றமும் நிகழவில்லை. மோசமான சூழ்நிலையை உருவாக்கியது தான் மிச்சம்.

கடந்த, 5 ஆண்டுகளில் ஆளுங்கட்சி தவறுகளை சுட்டிக் காட்டி, என்.ஆர். காங்., நடத்திய போராட்டங்களை பட்டியலிட முடியுமா?போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆட்சியின் செயல்பாடு சரியில்லை என, வலியுறுத்தி வருகிறோம். காங்., ஆட்சியின் செயல்பாடுகளை மக்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கான நல்ல பதிலை, சட்டசபை தேர்தலில் அளிப்பார்கள்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான நீங்கள், கொரோனா பரவல் நேரத்தில், வெளியே வந்து மக்களை சந்திக்கவில்லை; அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கவில்லையே ஏன்?ஆளும் கட்சி தரப்பில், அப்படி தான் சொல்வர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, என்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ.,க்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் உதவினர். அவர்களுடைய பணியை சரியாக செய்தனர். அதுமட்டுமின்றி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் உதவிகள் செய்துள்ளனர்.

நானும், வேறு எங்கும் சென்று விடவில்லை. இங்கு தான் மக்களுடன் மக்களாக இருந்தேன். காங்., ஆட்சியின் செயல்பாடுகளை, பொதுவெளியில் தான் நீங்கள் விமர்சனம் செய்யவில்லை. சட்டசபையிலும் பேசாதது ஏன்?மக்கள் பிரச்னைகளை சட்டசபையில் பேசியுள்ளேன். என்.ஆர். காங்., - எம்.எல்.ஏ.,க்களும் பலமுறை பேசியுள்ளனர். நாங்கள் சொன்னது எதையும், ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், பல நேரங்களில் வெளிநடப்பு செய்துள்ளோம்.
காங்., அரசினால் எதையும் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, முதல்வரை கண்டித்து, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களே பேசியுள்ளனர். நாராயணசாமி ஆட்சி போன்ற, மிக மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடந்ததில்லை என்பது, எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு மட்டுமல்ல; மக்களின் குற்றச்சாட்டும் அது தான்.

என்.ஆர்.காங்., ஆட்சியில் முதல்வராக இருந்த போது, மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுத்தீர்கள். காங்., ஆட்சியாளர்கள் மாநில அந்தஸ்து கேட்டு போராட்டம் நடத்திய போது, நீங்கள் கண்டு கொள்ளாதது ஏன்?என்.ஆர்.காங்., கட்சியை ஆரம்பித்த போதே, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கூறினேன். அதனை வலியுறுத்தி, எங்களுடைய ஆட்சியில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம். பிரதமரை சந்திக்கும் போதும் வலியுறுத்தினேன். மாநில அந்தஸ்து கிடைத்தால் சிறப்பாக இருக்கும். நாராயணசாமி மத்திய அமைச்சராக பதவி வகித்த, காங்., ஆட்சிடில்லியில் நடந்தபோதும், முழு மாநில அந்தஸ்து கேட்டோம். ஆனால், அவர்களுக்கு கொடுக்க மனம் இல்லை. இப்போது, மாநில அந்தஸ்துக்காக போராடுகிறோம் என்கிறார் நாராயணசாமி.

அரசியல் காரணங்களுக்காக மட்டுமே, மாநில அந்தஸ்து கேட்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?அப்படி இல்லை; மாநில அந்தஸ்தை, நாங்கள் உண்மையாக வலியுறுத்தி வருகிறோம். காங்., ஆட்சியாளர்கள் மாநில அந்தஸ்திற்காக போராட்டம் நடத்தியது போலியான நடிப்பு.

புதுச்சேரிக்கு தேவையான நிதியை, மத்திய அரசு ஒதுக்கி தரவில்லை, நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டது என்பது, நாராயணசாமியின் குற்றச்சாட்டு சரியானதா?இதுபோல அடிக்கடி சொல்லி சொல்லியே, புதுச்சேரியை நாராயணசாமி வீணாக்கி விட்டார். மாநிலம், 10 ஆண்டு காலம் பின்னோக்கி சென்று விட்டது. நான் முதல்வராக இருக்கும் போது, மத்தியில் பா.ஜ., ஆட்சி இருந்தது. அப்போதே, புதுச்சேரிக்கான நிதியை பெற்று பலவற்றை செய்து கொடுத்துள்ளோம்.

இப்போதும் மத்திய அரசுடன் இணக்கமாக பேசி, மாநில அந்தஸ்து வாங்கி தர முடியும், அதேபோல, மாநிலத்திற்கு தேவையான நிதியை வாங்கி, பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த, 30 ஆண்டுகளில், 3 முறை முதல்வர், பல முறை அமைச்சர் என தொடர்ந்து, பதவியில் இருந்துள்ளீர்கள். மக்களுக்கு நீங்கள் செய்தது என்ன?நான் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தபோது, புதுச்சேரி மாநில வளர்ச்சி, மக்களின் நலன் கருதி பல திட்டங்களை செயல்படுத்தினேன். மாணவர்களுக்கு, காமராஜர் பெயரில், கல்வி நிதியுதவி வழங்கினோம். எங்கள் ஆட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு, 16 சதவீத நிதியை ஒதுக்கி முழுமையாக செயல்படுத்தி உள்ளேன்.

நெசவாளர்களின் பிரச்னைகளை அறிந்து உதவியுள்ளோம். குடிசை வீடுகள் கல் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளதற்கு, நாங்கள் கொண்டு வந்த, காமராஜ் வீடு கட்டும் திட்டமும் காரணம்.இப்படி பல திட்டங்களை கூறலாம். மக்கள் விரும்பும் எல்லா திட்டங்களும், முழுமையாக செயல்படுத்தப்பட்டது.

என்.ஆர்.காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு, 10 ஆண்டுகளாகி விட்டது. கட்சிக்கு தொகுதி அளவில், நிர்வாகிகளை நியமிக்காதது ஏன்?என்.ஆர்.காங்., கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளோம். வெளிப்படையாக ஊடகம் வாயிலாக தெரியப்படுத்தவில்லை அவ்வளவு தான். இன்னும் புதிய நிர்வாகிகளை, தொகுதிகளில் நியமிக்க உள்ளோம். பொதுச் செயலர்களையும் நியமிக்க உள்ளோம்.

ஆரம்பத்தில், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்தீர்கள். பின், பா.ஜ., கூட்டணியில் மீண்டும் தொடர்வதாக அறிவித்துள்ளதற்கு காரணம் என்ன?புதுச்சேரி மக்களின் நலன், மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டும், புதுச்சேரி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், சில முடிவுகளை எடுக்க நேரிட்டது. மத்திய அரசின் ஒத்துழைப்பு நமக்கு வேண்டும். மத்திய அரசின் உதவி இல்லாமல், நம் மாநிலம் வளர்ச்சி பெறுவது சிரமம். அதனால், பா.ஜ., கூட்டணியில் தொடர தீர்மானித்தேன்.

கூட்டணியில் நீடிப்பதற்கு பா.ஜ., தரப்பில் இருந்து ஏதாவது நெருக்கடி கொடுக்கப்பட்டதா?நெருக்கடி ஏதும் இல்லை. நாங்கள் ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் தான் இருக்கிறோம்.

பா.ஜ.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சு சுமூகமாக நடந்ததா? பேச்சில் உங்களுக்கு முழு திருப்தியா?சுமூகமாக தான் தொகுதி பங்கீடு நடந்துள்ளது; அதில், முழு திருப்தி தான்.

காங்., - எம்.எல்.ஏ.,க்கள் வரிசைகட்டி ராஜினாமா செய்தது, தொடர்ந்து காங்., ஆட்சி கவிழ்ந்தது பற்றி உங்கள் கருத்து என்ன?சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களே, ராஜினாமா செய்து வெளியேறும் அளவில் தான் காங்., ஆட்சியின் செயல்பாடு இருந்திருக்கிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் மோசமான ஆட்சி தான் நடந்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பில், என்.ஆர். காங்., கட்சிக்கு பங்குள்ளதா?ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்க்கட்சிகள் காரணம் என்று சொல்லக்கூடாது. காங்., ஆட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை குறைந்தது. அப்படி இருக்கும் போது, பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று தானே, எதிர்க்கட்சிகள் சொல்ல முடியும். அதுதானே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆட்சி முடிய சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் கூட இருக்கலாம். இருந்தாலும், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்பது எதிர்க்கட்சிகளின் கடமை. அந்த கடமையையே எதிர்க்கட்சிகள் செய்தன. இதை ஆட்சி கவிழ்ப்பு என்று சொல்ல முடியாது. அவர்களிடம் பலம் இல்லை என்பதை சுட்டிகாட்டினோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, உங்களை வெளிப்படையாகஅறிவிக்கவில்லையே. கூட்டணிக்கு தலைமை என்று தானே அறிவித்துள்ளனர்...கூட்டணிக்கு தலைமை என்றாலே, அதுதான் பொருள். அதிகமான தொகுதிகளையும், நாங்கள் பெற்றுஇருக்கிறோம். அப்படியென்றால் முதல்வர் வேட்பாளர் என்று தானே அர்த்தம்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வராக பதவியேற்க உள்ளது நீங்களா... நமச்சிவாயமா?பொதுவாக சட்டசபை தேர்தல் முடிந்ததும், எண்ணிக்கை அடிப்படையில், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணங்களை கேட்டு, சட்டசபை கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதுபோன்றே, தேர்தல் முடிந்தவுடன் முதல்வரை எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்வர். பல தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து, என்.ஆர்.காங்., பிரமுகர்கள் சுயேச்சையாக போட்டியிடுகிறார்களே...

அவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம். எங்களின் கட்சி கொடி, சின்னம், பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்துள்ளோம்.

உங்கள் கட்சியில் ஜாதகத்தை பார்த்து தான், வேட்பாளர்களை தேர்வு செய்வது ஏன்?இது, எங்கள் கட்சியில் மட்டும் நடப்பதில்லை. எல்லா கட்சியிலும் தான், ஜாதகத்தை பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர். எங்கள் கட்சி ஆன்மிகத்துடன் இணக்கமான கட்சி. 2011ல், கட்சி துவங்கிய இரு மாதங்களில் ஆட்சியை பிடித்தது சாதாரணமல்ல. அதற்கு இறைவனின் அருள் முக்கியம். எங்கள் கட்சியில் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து தான், போட்டியிட வைக்கிறோம்.

ஒவ்வொரு தேர்தலின் போதும், வெற்றிக்காக நீங்கள் யாகம் நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடக்க உள்ள தேர்தலை முன்னிட்டு யாகம் நடத்தப்படுமா?இறைவனிடம் வேண்டுதலுக்காகவே, யாகம் நடத்தப்படுகிறது. தேர்தல் சமயத்தில், அனைவருமே யாகம் நடத்துவர். அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்வார்கள். நாங்கள் கொஞ்சம் வெளிப்படையாக நடத்துகிறோம் அவ்வளவு தான். அது, ஒன்றும் தவறு இல்லையே.

என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் எதை மையப்படுத்தி இருக்கும்?மாநில மக்கள் நலன், மாநில வளர்ச்சியை மையப்படுத்தியே, எங்கள் பிரசாரம் இருக்கும்.இவ்வாறு, ரங்கசாமி கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)