ஊருக்கு பங்காளி; உள்ளுக்குள் பகையாளி!
- நமது நிருபர் - 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பர்களும் இல்லை என்று சொல்வர். ஆனால், துரோகியை நண்பராக ஏற்றுக்கொள்வது அரசியலில் இல்லை. ஆட்சியை காப்பாற்றித் தந்த எங்களுக்கு, பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்' - இது, கடந்த செப்டம்பர் 25 அன்று, அ.ம.மு.க., தலைவர் தினகரன் பேசியது. அன்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது எனக்கூறி, கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார்.
பயன் இல்லை
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், 2021 தேர்தலில் அ.தி.மு.க., பின்னடவை சந்திக்க, அ.ம.மு.க., பிரித்த ஓட்டுகள் தான் காரணம். அந்த நேரத்தில், வன்னியர்களுக்கு 10.50 சதவீத இடஒதுக்கீடு விவகாரமும், முக்குலத்தோர் மத்தியில் அ.தி.மு.க.,விற்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தி இருந்தது. 2024 தேர்தலில், அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விலக்கப்பட்டது, முக்குலத்தோர் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எல்லாம் சரிசெய்ய தான், அ.ம.மு.க.,வை கூட்டணிக்கு இழுத்து, அபரிமிதமாக 1 1 தொகுதிகளும் கொடுக்கப்பட்டன. அவற்றில் எட்டு தொகுதிகள் அ.தி.மு.க., பலவீனமாக இருக்கும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் உள்ளவை. இருப்பினும், களத்தில் தாமரை இலையில் தண்ணீர்போல், அ.தி.மு.க., - அ.ம.மு.க., கூட்டணி ஒட்டாமலே இருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.,வினர் கூறுவதாவது: தினகரனுடன் கூட்டணி சேர வேண்டும் என்றால், அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற ஒரு நிபந்தனையை பழனிசாமி விதித்திருந்தார். அதை தினகரன் ஏற்றுக் கொண்டார். அதனால் தான், தொகுதி பங்கீட்டில் அ.ம.மு.க., கேட்கும் தொகுதிகளை ஒதுக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் பழனிசாமிக்கு ஏற்பட்டது. அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் தொகுதிகளை கூட அ.ம.மு.க.,வுக்கு பழனிசாமி ஒதுக்கினார். வார்த்தைகளால் பங்காளிகள், சகோதரர்கள் என சொன்னாலும், இருவருக்கும் இடையில் இருக்கும் 'ஈகோ' பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பிரசார களத்தில் இதுபோன்ற நெருடல் வந்துவிடக்கூடாது என்றுதான், அ.தி.மு.க., - அ.ம.மு.க., கூட்டணி இணைந்ததும், பீஹார் பாணியில், பழனிசாமி வீட்டில் தினகரனுக்கும், தினகரன் வீட்டில் பழனிசாமிக்கும் விருந்து நிகழ்ச்சியை நடத்த பா.ஜ., முயற்சி செய்தது. ஆனால், கடைசி வரை இருவருமே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கூட்டணி நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, இருவரும், தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளவே இல்லை. இதுவும் கூட்டணி ஒட்டாமல் இருக்க காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர். முக்குலத்தோர் ஓட்டுகளை குறிவைத்து, ஒருபக்கம் சசிகலாவும் தேர்தலில் இறங்கி உள்ள சூழலில், பழனிசாமி, அ.ம.மு.க., தொகுதிகளில் பிரசாரம் செய்யாவிட்டால், அ.தி.மு.க., மீது முக்குலத்தோர் இழந்த நம்பிக்கையை, மீட்க முடியாது. அந்த சமூக ஓட்டுகள், 2021 மற்றும் 2024 போல, மீண்டும் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.பா.ஜ.,வுக்கும் முழுக்கு
இருவரும், பா.ஜ.,வையும் புறக்கணித்து வருகின்றனர். பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் இருந்து தான் பிரசாரத்தை பழனிசாமி துவங்கினார். பா.ஜ.,வில் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், தமிழிசையை வைத்து பிரசாரம் செய்தார் பழனிசாமி. அதுவுமே, தமிழிசையை அவர் அழைக்கவில்லை என கூறப்படுகிறது. தமிழிசை கலந்துகொண்டதில் பழனிசாமி சற்று அதிர்ச்சி அடைந்தார் என்றே அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அதன்பின், பா.ஜ., தரப்பில் யாரையுமே, தன் பிரசார வாகனத்தில் பழனிசாமி ஏற்றவில்லை. தன் பிரசாரத்தையும் பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்தே அமைத்துள்ளார். பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் உள்ள மாவட்டங்களில், பழனிசாமி பிரசாரத்தை முடித்துவிட்டார். பா.ஜ., வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட சுணக்கத்தால் பத்மநாபபுரம், குளச்சல், சாத்துார், ராமநாதபுரம், திருச்செந்துார் உள்ளிட்ட தொகுதிகளில், பழனிசாமி பிரசாரமே செய்யவில்லை. அதேபோல், இரண்டாம் கட்ட சுற்றுப்பயண அறிவிப்பிலும், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் இடம் பெறவில்லை. பழனிசாமியை போலவே தினகரனும் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக ஒரு தொகுதியில் கூட பிரசாரம் செய்யவில்லை. தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தான், முழுக்க முழுக்க பிரசாரம் செய்ய உள்ளார். தி.மு.க., கூட்டணியிலும் அதே நிலை... தே.ஜ., கூட்டணியை போல, தி.மு.க., கூட்டணியிலும் பல பிரச்னைகள் தலைதுாக்கி உள்ளன. தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகள் கொடுத்ததிலும், தங்களுக்கு தொகுதிகளை குறைத்ததிலும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருக்கின்றனர். அது, இப்போது பிரசாரத்தில் எதிரொலிக்கிறது. சென்னையின் ஒருசில தொகுதிகளை தவிர மற்ற இடங்களில் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, பிரசாரம் செய்யவில்லை. இதனால், தே.மு.தி.க., ஓரளவுக்கு பலமாக இருக்கும், வட மாவட்ட தி.மு.க., வேட்பாளர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஏற்கனவே, வி.சி.க, தலைவர் திருமாவளவனை பொது தொகுதியில் பிரசாரம் செய்ய தி.மு.க., அனுமதிக்கவில்லை. காட்பாடியில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், வி.சி., கட்சி மாவட்டச் செயலரை பிரசார வாகனத்தில் இருந்து இறங்க சொன்னது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தி.மு.க.,வுக்கு ஆதரவாக வி.சி.க., நிர்வாகிகள் பல இடங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். போதாக்குறைக்கு, திருமாவளவன் தேர்தலில் போட்டியிடுவதால், மொத்த நிர்வாகிகளையும் காட்டுமன்னார்கோவிலுக்கு அவர் வரவழைக்க திட்டமிட்டுள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும் அவரது மகன் துரையும் அவர்களது கட்சியினரை ஆதரித்துதான் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். கம்யூனிஸ்ட் தலைவர்களும் தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கொள்ளை அடிப்பதில் இரண்டு பேரும் பங்காளிகள் தான்.
இதெல்லாம் சகஜமப்பா. கருணாநிதி கூட இனி காங்கிரசுடன் ஒட்டுமில்லை உறவுமில்லை ன்னு அறிவித்தார். பின்னர் அவர்களுக்கே அடிமையானார்.
தமிழிசையை சஸ்பெண்டு செய்ய வேண்டும். அவர் எப்படி தன்னிச்சையாக பிரச்சாரத்தில் ஈடு பட்டார்.
ஹும். பேசாமல் அண்ணாமலை படித்து படித்து சொன்னதை பஜக மேலிடம் கேட்டு இருக்கலாம். இந்நேரம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பஜக பிரசாரங்கள் சிறப்பாக முன்னெடுப்பு பண்ணி இருக்கும். எல்லாம் விழலுக்கு இறைத்த தண்ணிர் ஆன கதைதான். இந்த தேர்தல் தோல்விக்கு பின் அண்ணாமலை தனி கட்சி தொடங்கணும்.
தனிக்கட்சி தொடங்கி? நாசமா போகணுமா?
புதிய பா.ஜ. கட்சி ன்னு அண்ணாமலை ஆரம்பிக்க போறாரோ?
பிரச்சாரம் செய்தால் மட்டுமே ஓட்டு வரும் என்பது ஏற்புடையது அல்ல. வாக்காளர் ஏற்கனவே முடிவு செய்திருப்பார்.கட்சி சின்னம் இதான் முதன்மை இடம் பெரும்