ஊருக்கு பங்காளி; உள்ளுக்குள் பகையாளி!
- நமது நிருபர் -
'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பர்களும் இல்லை என்று சொல்வர். ஆனால், துரோகியை நண்பராக ஏற்றுக்கொள்வது அரசியலில் இல்லை. ஆட்சியை காப்பாற்றித் தந்த எங்களுக்கு, பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்' - இது, கடந்த செப்டம்பர் 25 அன்று, அ.ம.மு.க., தலைவர் தினகரன் பேசியது. அன்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது எனக்கூறி, கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார்.
'கடந்த 2017 ஏப்ரல் வரை, நாங்கள் எப்படி ஒரு குடும்பத்து அண்ணன் - -தம்பியாக இருந்தோமோ, அதுபோலவே இப்போது ஒன்றாகி இருக்கிறோம். இனி, எல்லா இடங்களுக்கும் ஒன்றாகத்தான் செல்வோம்' - - இது, கடந்த ஜனவரி 24ம் தேதி, அதே தினகரன், மீண்டும் தே.ஜ., கூட்டணியில் இணைந்து, பழனிசாமியோடு சேர்ந்து பேசியது.
பழனிசாமியும், 'நானும் தினகரனும், ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை மறந்துவிட்டோம்' என்று, அப்போது நட்பு பாராட்டினார்.
கடந்த மார்ச் 23 அன்று, தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீட்டை, அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து அறிவித்தார் பழனிசாமி, அதற்காக, ஒன்பது ஆண்டுகளுக்கு பின், அ.தி.மு.க., அலுவலகத்திற்குள் தினகரன் அனுமதிக்கப்பட்டார். மிக குறைந்த ஓட்டு விகிதம் உள்ள அ.ம.மு.க.,விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இது, பழனிசாமியும் தினகரனும் முற்றிலும் பகையை மறந்து பங்காளிகளாகி விட்டனர் என்றே அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டது. இது, அ.தி.மு.க.,- - அ.ம.மு.க., கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஆனால், அ.ம.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பழனிசாமியும், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக தினகரனும் இன்று வரை பிரசாரம் செய்யவில்லை.
அ.ம.மு.க., வேட்பாளர் பட்டியல், மார்ச் 28ம் தேதியே வெளியாகி விட்டது. முதல்கட்டமாக, மார்ச் 29 அன்று ராதாபுரத்தில் பிரசாரம் செய்த பழனிசாமி, பக்கத்தில் இருக்கும் அ.ம.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட நாங்குநேரியில் பிரசாரம் செய்யவில்லை. அதேபோல், ஓட்டப்பிடாரம், காரைக்குடி உள்ளிட்ட அ.ம.மு.க., போட்டியிடும் தொகுதிகளுக்கு, பக்கத் து தொகுதியில் பிரசாரம் செய்த பழனிசாமி, அ.ம.மு.க.,வை கண்டுகொள்ளவே இல்லை.
தற்போது, அவரது இரண்டாம் கட்ட பிரசாரத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதிலும், அ.ம.மு.க., போட்டியிடும் திருச்சி மேற்கு, பூந்தமல்லி, மடத்துக்குளம் உள்ளிட்ட எந்த தொகுதியும் இடம் பெறவில்லை. இதனால், அ.ம.மு.க.,வினர் மட்டுமல்லாது, அ.தி.மு.க.,வினரே திகைத்துப் போயுள்ளனர். காரணம், பழனிசாமி- - தினகரனின் செயல்கள் கூட்டணியின் நோக்கத்திற்கே நேர்மாறாக இருப்பது தான்.
பயன் இல்லை
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், 2021 தேர்தலில் அ.தி.மு.க., பின்னடவை சந்திக்க, அ.ம.மு.க., பிரித்த ஓட்டுகள் தான் காரணம். அந்த நேரத்தில், வன்னியர்களுக்கு 10.50 சதவீத இடஒதுக்கீடு விவகாரமும், முக்குலத்தோர் மத்தியில் அ.தி.மு.க.,விற்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தி இருந்தது.
2024 தேர்தலில், அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விலக்கப்பட்டது, முக்குலத்தோர் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எல்லாம் சரிசெய்ய தான், அ.ம.மு.க.,வை கூட்டணிக்கு இழுத்து, அபரிமிதமாக 1 1 தொகுதிகளும் கொடுக்கப்பட்டன. அவற்றில் எட்டு தொகுதிகள் அ.தி.மு.க., பலவீனமாக இருக்கும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் உள்ளவை.
இருப்பினும், களத்தில் தாமரை இலையில் தண்ணீர்போல், அ.தி.மு.க., - அ.ம.மு.க., கூட்டணி ஒட்டாமலே இருக்கிறது.
இது பற்றி அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.,வினர் கூறுவதாவது: தினகரனுடன் கூட்டணி சேர வேண்டும் என்றால், அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற ஒரு நிபந்தனையை பழனிசாமி விதித்திருந்தார். அதை தினகரன் ஏற்றுக் கொண்டார். அதனால் தான், தொகுதி பங்கீட்டில் அ.ம.மு.க., கேட்கும் தொகுதிகளை ஒதுக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் பழனிசாமிக்கு ஏற்பட்டது. அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் தொகுதிகளை கூட அ.ம.மு.க.,வுக்கு பழனிசாமி ஒதுக்கினார்.
வார்த்தைகளால் பங்காளிகள், சகோதரர்கள் என சொன்னாலும், இருவருக்கும் இடையில் இருக்கும் 'ஈகோ' பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
பிரசார களத்தில் இதுபோன்ற நெருடல் வந்துவிடக்கூடாது என்றுதான், அ.தி.மு.க., - அ.ம.மு.க., கூட்டணி இணைந்ததும், பீஹார் பாணியில், பழனிசாமி வீட்டில் தினகரனுக்கும், தினகரன் வீட்டில் பழனிசாமிக்கும் விருந்து நிகழ்ச்சியை நடத்த பா.ஜ., முயற்சி செய்தது. ஆனால், கடைசி வரை இருவருமே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
கூட்டணி நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, இருவரும், தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளவே இல்லை. இதுவும் கூட்டணி ஒட்டாமல் இருக்க காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்குலத்தோர் ஓட்டுகளை குறிவைத்து, ஒருபக்கம் சசிகலாவும் தேர்தலில் இறங்கி உள்ள சூழலில், பழனிசாமி, அ.ம.மு.க., தொகுதிகளில் பிரசாரம் செய்யாவிட்டால், அ.தி.மு.க., மீது முக்குலத்தோர் இழந்த நம்பிக்கையை, மீட்க முடியாது. அந்த சமூக ஓட்டுகள், 2021 மற்றும் 2024 போல, மீண்டும் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.,வுக்கும் முழுக்கு
இருவரும், பா.ஜ.,வையும் புறக்கணித்து வருகின்றனர். பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் இருந்து தான் பிரசாரத்தை பழனிசாமி துவங்கினார். பா.ஜ.,வில் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், தமிழிசையை வைத்து பிரசாரம் செய்தார் பழனிசாமி. அதுவுமே, தமிழிசையை அவர் அழைக்கவில்லை என கூறப்படுகிறது. தமிழிசை கலந்துகொண்டதில் பழனிசாமி சற்று அதிர்ச்சி அடைந்தார் என்றே அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அதன்பின், பா.ஜ., தரப்பில் யாரையுமே, தன் பிரசார வாகனத்தில் பழனிசாமி ஏற்றவில்லை.
தன் பிரசாரத்தையும் பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்தே அமைத்துள்ளார். பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் உள்ள மாவட்டங்களில், பழனிசாமி பிரசாரத்தை முடித்துவிட்டார். பா.ஜ., வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட சுணக்கத்தால் பத்மநாபபுரம், குளச்சல், சாத்துார், ராமநாதபுரம், திருச்செந்துார் உள்ளிட்ட தொகுதிகளில், பழனிசாமி பிரசாரமே செய்யவில்லை. அதேபோல், இரண்டாம் கட்ட சுற்றுப்பயண அறிவிப்பிலும், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் இடம் பெறவில்லை.
பழனிசாமியை போலவே தினகரனும் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக ஒரு தொகுதியில் கூட பிரசாரம் செய்யவில்லை. தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தான், முழுக்க முழுக்க பிரசாரம் செய்ய உள்ளார்.
Advertisement
பிரச்சாரம் செய்தால் மட்டுமே ஓட்டு வரும் என்பது ஏற்புடையது அல்ல. வாக்காளர்
ஏற்கனவே முடிவு செய்திருப்பார்.கட்சி சின்னம் இதான் முதன்மை இடம் பெரும்

ஹும். பேசாமல் அண்ணாமலை படித்து படித்து சொன்னதை பஜக மேலிடம் கேட்டு இருக்கலாம்.
இந்நேரம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பஜக பிரசாரங்கள் சிறப்பாக முன்னெடுப்பு பண்ணி இருக்கும். எல்லாம் விழலுக்கு இறைத்த தண்ணிர் ஆன கதைதான். இந்த தேர்தல் தோல்விக்கு பின் அண்ணாமலை தனி கட்சி தொடங்கணும்.