Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தொடக்கம் முதலே தடுமாற்றம்

 தொடக்கம் முதலே தடுமாற்றம்

- நமது நிருபர் -

த.வெ.க., தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தால், கூட்டம் அலைமோதுகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், கட்சி நிர்வாகிகளும் போலீசாரும் திணறி வருகின்றனர். ஆனால், த.வெ.க., திருத்தணி வேட்பாளர் சத்தியகுமாருக்கு ஆதரவாக, கட்சி நிர்வாகிகள் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர், தன்னந்தனியாக பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். த.வெ.க.,வின் பல வேட்பாளர்கள் இதே நிலையில் தான் உள்ளனர்.

கடந்த 2024ல் கட்சி தொடங்கியதில் இருந்தே, ஒவ்வொரு கட்டத்திலும் த.வெ.க., தடுமாறி வருகிறது.

கட்சியின் கொள்கை என்னவென்று முடிவு செய்வதிலும் குழப்பம் இருந்தது. அதனால், எங்களை கேட்காதீர்கள், முடிந்தால் அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள் என்ற பாணியில், கொள்கை முன்னோடி தலைவர்கள் என, அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் மற்றும் விடுதலை போராட்ட வீரர்களான வேலுநாச்சியாரும் அஞ்சலை அம்மாளும் அறிவிக்கப்பட்டனர்.

பின், 2024 அக்டோபரில் விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாநாடு நடத்தியதில், லட்சம் பேருக்கும் மேலாக திரண்டதால், கட்சி சரியான பாதையில் தான் உள்ளது என்ற தோற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து, 2025 பிப்ரவரியில், தி.மு.க.,வின் தேர்தல் வியூக 'பென்' அமைப்பிலும், வி.சி., கட்சியிலும் முக்கிய பொறுப்பு வகித்த ஆதவ் அர்ஜுனாவும், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமாரும் த.வெ.க.,வில் இணைந்தனர்.

நிர்வாகிகள் இல்லை

இது, கட்சியின் நிர்வாக கட்டமைப்பு செம்மையாகும் தோற்றத்தை உருவாக்கியது. அ.தி.மு.க.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், 2025 நவம்பரில் த.வெ.க.,வில் இணைந்தார். --- செங்கோட்டையன் இணைந்தபின், அவர் கண்டது, அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கட்சி நிர்வாகம் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டது. ஒரு பக்கம், ஆதவ் அர்ஜுனா தன், 'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' அமைப்பை வைத்து தனியாக இயங்கிக்கொண்டு இருந்தார். எதிர்பக்கம் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியமர்த்தப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, விஜயின் நண்பர் விஷ்ணு ரெட்டி, விஜயின் உதவியாளர் ெஜகதீஷ் ஆகியோர் தனியாக இயங்கிக் கொண்டு இருந்தனர். இதில், கட்சியின் இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் எங்கோ அகப்பட்டு, தனியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

கட்சியில் மாவட்ட செயலர்கள் மட்டும் இருந்தனர். மாவட்ட செயலர்களுக்கு கீழ், நகர, பேரூர், கிளை, பகுதி என எந்த மட்டத்திலும் நிர்வாகிகள் இல்லை. இந்த நிர்வாகிகளின் தேவையை எடுத்துச் சொல்லியும், ஆரம்பத்தில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. குறிப்பாக ஜான் ஆரோக்கியசாமி. 'விஜய் ஒன்மேன் ஆர்மி' என்று சொல்லி தட்டிக்கழித்துவிட்டார். 'நான் கொங்கு மண்டலத்திலாவது நிர்வாகிகளை போட்டுக் கொள்கிறேன்' என்று சொல்லி, செங்கோட்டையன் நிர்வாகிகளை நியமிக்க தொடங்கிய பின்னரே, பிற பகுதிகளுக்கும் நியமித்துக் கொள்ளலாம் என உத்தரவு வந்தது.

ஆனால், கடந்த டிசம்பரில் தான் இந்த பணி தொடங்கியது என்பதால், அனைத்து பகுதிகளுக்கும் தேவையான நிர்வாகிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனால், சின்ன ஊர்களில் கூட்டம் நடத்துவதற்கு கூட, மாவட்ட செயலர் தான் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று அனுமதி வாங்கும் சூழல் உள்ளது. கட்சி நிர்வாகம் தடுமாறிக் கொண்டு இருக்க, வேட்பாளர் தேர்வு மிகவும் சொதப்பல் என்கின்றனர், த.வெ.க., நிர்வாகிகள். --- -

எங்கும் அதிருப்தி

மற்ற கட்சிகளைப் போல், த.வெ.க.,விலும் விருப்ப மனு பெறப்பட்டது. ஏராளமானோர் மனு அளித்தனர். ஆனால், எவ்வளவு பேர் மனு தாக்கல் செய்தனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரையும் அழைத்து, விஜய் நேர்காணல் நடத்துவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்த 115 பேரை மட்டும் விஜய் சந்தித்தார். அவர்களிடமும் நேர்காணல் நடத்தவில்லை. இது வேட்பு மனு அளித்தவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. விஜயை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தான், பலர் வேட்பு மனுவே அளித்தனர்.

வேட்பாளர் பட்டியல் வெளியானதும், கட்சியினர் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதில், வேட்பு மனு வெளியாவதற்கு முந்தைய நாள் கட்சியில் சேர்ந்தவர்களுக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் 234 பேரில் 106 பேர், பிற கட்சிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள். விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து உழைத்த, பலருக்கும் சீட் இல்லை. கட்சியில் மாவட்ட செயலராக இருக்கும் 62 பேருக்கு சீட் இல்லை. தலைமையின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள், பல மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர்.

வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அதிருப்தி நிர்வாகிகள் போராட்டம் நடத்துவது, எல்லா கட்சியிலும் இயல்பாக நடப்பது தான். ஆனால், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமை உடனே தலையிட்டு, அதிருப்தி நிர்வாகிகளிடம் பேசி, பிரச்னையை சரிசெய்து அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தும். ஆனால், த.வெ.க., நிர்வாகிகளை சமாதானம் செய்து, தேர்தல் பணிகளை மேற்கொள்ள வைக்க, அக்கட்சி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுச்செயலர் ஆனந்த் உட்பட முன்னணி நிர்வாகிகளும், 'நமக்கு என்ன வந்தது' என, கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இது இன்றுவரை வேட்பாளர் பிரச்சாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு முன்பு, வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலும் சொதப்பல் நடந்தது. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை, சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்த தீர்மானித்து, அங்கு அதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வந்தனர். ஆனால், அதற்கான அனுமதியை உரிய அலுவலரிடம் இருந்து பெறவில்லை. ஹோட்டலில் இந்த ஏற்பாடு நடப்பதை அறிந்து அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், 'உரிய அனுமதியின்றி வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தக் கூடாது. மீறி, நடத்தினால் ஹோட்டல் சீல் வைக்கப்படும்' என நிர்வாகிகள் மற்றும் ஹோட்டல் அதிபரிடம் எச்சரித்தனர்.

இதனால், திட்டமிட்டபடி அங்கு அறிமுகக் கூட்டம் நடத்தப்படவில்லை. அதன்பின் தான், உரிய அனுமதி பெற்றே கூட்டம் நடத்த முடியும் என்ற அடிப்படை தகவல் நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு, அதற்கான முன் அனுமதி பெறும் ஏற்பாடு நடந்தது. இரு நாட்களில் அனுமதி பெற்று, நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர். இதனால், திட்டமிட்ட இரு நாட்களுக்கு பின்பே வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, தேர்தலை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருக்கே அதிக அதிகாரம். எந்த பிரச்னையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தொகுதி தேர்தல் பார்வையாளர்களிடம் தான் மனு அளிக்க வேண்டும். பொதுவான பிரச்னையாக இருந்தால், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கலாம். இந்த விபரமும் த.வெ.க.,வினருக்கு தெரியவில்லை.

பிரச்சாரம்



கடந்த மார்ச் 30 அன்று, சென்னை- பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, விஜய் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கொளத்துாரிலும் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கரூர் போன்ற தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவாவதை உணர்ந்து, பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டார்.

இதையடுத்து, விஜய் பிரச்சாரத்திற்கு தமிழக போலீஸ் போதுமான பாதுகாப்பு கொடுப்பதில்லை என்று, கட்சியின் இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், மத்திய உள்துறை செயலருக்கு புகார் அனுப்பினார். ஆனால், அந்த உள்துறை செயலர் மணிப்பூர் கவர்னராகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது!

விஜய் பிரச்சார கூட்டத்திற்கு வரும் அபரிமிதமான கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு, அந்த கட்சியிடம் உரிய கட்டமைப்பு இல்லை. எனவே, விஜயின் ஒவ்வொரு பிரச்சார கூட்டத்திலும், வருவோர் மயங்கி விழும் சம்பவங்கள் தொடர்கிறன.

அதனால் முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி போல், விஜயால் சுதந்திரமாக பிரச்சாரம் செய்ய முடிவதில்லை. விஜயும் ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவதில்லை, அதனால், சிக்கலான நிலை தொடர்கிறது.

தான், பிரச்சாரம் செய்யப்போகும் இடங்களுக்கு, கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் உடன் வரவேண்டும் என, விஜய் வற்புறுத்துகிறார். அப்போது தான், 'நான் பாதுகாப்பாக உணர்கிறேன்' என்று சொல்வதால், மாநில நிர்வாகிகள், விஜயுடன் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகிகளை நிர்வகிக்கும் இடத்தில் உள்ள இவர்கள், தேர்தல் நேரத்தில் இப்படி பயணப்படுவதால், எந்த தேர்தல் வேலையும் நடக்கவில்லை என கூறப்படுகிறது.

ஒரு பக்கம், சீட் கிடைக்காத மாவட்ட நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருக்க, மறுபக்கம், 'விஜய்க்கு மட்டுமே கட்டுப்படுவோம்; மற்றவர்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டோம்' என, கீழ்மட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றனர். இதனால், பல வேட்பாளர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தத்தளிக்கின்றனர். உள்ளூர் நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லாததால், திருத்தணி வேட்பாளர் சத்தியகுமார், தான் சென்னையில் இருந்து அழைத்து வந்த நான்கு பேருடன் பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல் தான், சென்னை வேளச்சேரியில் குமார்; திருநெல்வேலியில் ஆர்.எஸ்.முருகன்; கம்பத்தில் ஜெகநாத் மிஸ்ரா; சிவகாசியில் கீர்த்தனா என பலருக்கும், த.வெ.க., நிர்வாகிகள் பிரச்சாரம் செய்யவில்லை. அதேபோல், அ.தி.மு.க.,வில் இருந்து வந்து, செய்யாறு வேட்பாளரான துாசி மோகன், பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகி, காஞ்சிபுரம் வேட்பாளரான ரஞ்சித்குமார் ஆகியோருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் கூட, த.வெ.க.,வினர் போஸ்ட் போடுவதில்லை.

கொங்கு மண்டலத்தில்தான், அதிகப்படியான இறக்குமதி வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, கட்சி நிர்வாகிகள் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என, சீட் கிடைக்காமல் விரக்தியில் உள்ள நிர்வாகிகள், கோஷ்டி அரசியல் செய்து வருகின்றனர்.

திருவெறும்பூருக்கு பிரச்சாரம் செய்ய, கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் சென்றார். அவரை பார்க்க வந்த நிர்வாகிகள் கூட, 'இந்த தொகுதி வேட்பாளருக்கு வேலை செய்ய மாட்டோம். நீங்கள் சொல்வதால், ஓட்டு வேண்டுமானால் போடுகிறோம்' என நிர்தாட்சண்யமாக தேர்தல் வேலை பார்க்க மறுத்தனர்.

'கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளை வேட்பாளராக்கி இருந்தால், இதுபோன்ற நிலைமை வந்திருக்காது. பணக்காரர்களையும் சிபாரிசில் உள்ளே வந்தவர்களையும் வேட்பாளர் ஆக்கியதால்தான், த.வெ.க.,வுக்கு களத்தில் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது' என, த.வெ.க., மூத்த தலைவர் ஒருவர் சொல்கிறார்.

----வேட்பு மனு தாக்கலுக்குப் பின், மனுவுக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால், ஒவ்வொரு வேட்பாளருக்கும் உரிய அறிவுரை வழங்குவதற்கென்றே, கடந்த ஜனவரி 31ல், நிர்மல் குமார் தலைமையில் சட்ட பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. அதேபோல, ஓய்வு பெற்ற அதிகாரிகள் துணையுடன் வேட்பு மனுவை தயார்செய்து கொள்ளலாம் என்றும் அறிவுத்தப்பட்டது. ஆனால், இத்தனை முன்யோசனை இருந்தும், தலைவர் விஜயின் வேட்பு மனுவிலேயே பல ஓட்டைகள்.

விஜயின் வேட்பு மனு குழப்பங்களுக்கு நால்வரே காரணம் என்று கட்சியினர் அடையாளம் காட்டுகின்றனர். விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, விஜயின் நண்பர் விஷ்ணு ரெட்டி, உதவியாளர் ஜெகதீஷ் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தான். இந்த நால்வர் மேற்பார்வையில் தான், வழக்கறிஞர் குழு ஒன்று விஜய்க்காக வேட்பு மனுவை தயார் செய்தது.

இத்தனை பலம் இருந்தும், விஜய்க்கான வேட்பு மனு, குழப்பங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மற்ற வேட்பாளர் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

அவினாசி தனி தொகுதி த.வெ.க., வேட்பாளர் கமலி, மனுவை எடுத்துச் செல்லாமலேயே, வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றுள்ளார். ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிடும் சரவணன், ஏராள எழுத்துப் பிழையுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய, அதிகாரி அதை திருப்பிக் கொடுத்து திருத்தச் சொல்லி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இதுவரை, கட்சி சார்பில் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். ஆனால், அவர்களில் 10 சதவீதம் வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக, அக்கட்சியில் இருப்போரே அச்சப்படுகின்றனர்.

கட்சியில் துவக்கத்தில் இருந்தே எல்லா விஷயங்களிலும் குளறுபடி நடக்கிறது. இதற்கு தலைமையில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளுக்குள் நடக்கும் அதிகார மோதலே காரணம் என கூறப்படுகிறது. ---

விஜய்க்கான ஓட்டுகள், விளைந்த நெற்கதிர்கள் போல் அறுவடைக்கு தயாராக இருந்தாலும், அறுக்கவும் தெரியாமல், கையில் அரிவாளும் இல்லாமல், விஜயும் த.வெ.க.,வும், வந்த வாய்ப்பை தடுமாற்றங்களால் தவற விடப்போகிறது என்கின்றனர் த.வெ.க., அனுதாபிகள்.

*

Advertisement

ஏப் 05, 2026 06:40 pm

படிப்பும் அரைகுறை அதுபோல கட்சியும் அரைகுறை அவ்வளவே

Reply Rate this
ஏப் 05, 2026 11:42 am

ஜோசப் விஜிகினாய் வரவு ஸ் டாலின் ஐயாவுக்கு வயிற்றல் புளியை கரைச்சிடுச்சி. கனவிலெ வந்து பயமுறுத்துது. புது புது ரீல் எல்லாம் அனுமார் வால் போல அவுத்து விட்டுக்கிட்டிருக்கிறார்.

Reply Rate this
ஏப் 05, 2026 11:31 am

Journalism is playing a Dirty game

Reply Rate this
ஏப் 05, 2026 10:48 am

நீங்க இப்ப சொல்றீங்க.... நான் இவன் கட்சி ஆரம்பிச்சப்பவே சொல்லிட்டேன்...? “இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்”...ன்னு. முதல் கோணல், முற்றிலும் கோணல்..ங்ற கதையா... இவனுடை தொடக்கமே கோணலாக அமைந்துவிட்டது.

Reply Rate this
ஏப் 05, 2026 08:22 am

அனுபவம் இல்லாதவர்களை வைத்து கட்சி நடத்தினால் இப்படித்தான் ஆகும். நிறைய வேட்புமனுக்கள் சரியில்லை என தள்ளுபடி செய்ய வாய்ப்புக்கள் அதிகம். பரிதாபம் .

Reply Rate this