UPDATED : மார் 03, 2026 07:27 AM | ADDED : மார் 03, 2026 06:26 AM
திருப்பரங்குன்றம்: ''தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களது ஒற்றைக்குறிக்கோள்,'' என, திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் பக்தி மேலோங்கிக் கொண்டிருக்கிறது. ஆன்மிகம் செழிக்க வேண்டும். ஆன்மிகத்திற்கு எதிராக இருப்பவர்கள், சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பவர்களின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை மதித்து மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். நல்லாட்சி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என கிரிவலம் செல்கிறேன். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் 80 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது. பணிகள் முடிந்ததும் திறப்பு விழா நடத்தப்படும். தி.மு.க., வில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., படுதோல்வி அடையும் என குறிப்பிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் எங்கள் கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பாதிப்பு ஏதும் ஏற்படாது. தேனி மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் சிறு பாதிப்பு கூட இல்லை. தேர்தலில் அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் எந்த விதத்திலும் சிறிதளவு கூட பாதிப்பு ஏற்படாது. இன்று(நேற்று) முழு நிலவு பவுர்ணமி. முருகப்பெருமானுடைய அருளால் நாட்டில் நல்லாட்சி அமையும். பிரதமர் மோடி எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள கோயிலில் வழிபாடு செய்வது வழக்கம். அதனடிப்படையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்தார். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை விரைவில் துவங்கும். பா.ஜ., வின் நிலைப்பாட்டை ஏற்கனவே கூறி இருக்கிறோம். எங்களுக்கு தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது ஒன்று தான் குறிக்கோள். தே.ஜ., கூட்டணி ஆட்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தான் முதல்வர் என்றார்.