போட்டூன்!
காசு வாங்கி ஓட்டு போட்டால் மொட்டை அடித்து மிளகாய் அரைத்து விடுவர் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில், கோவை கிணத்துக்கடவு சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது, மொட்டை அடித்து மிளகாய் மாலையுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இடம்: மதுக்கரை தாலுகா அலுவலகம்.
திருத்தணி தொகுதி தவெக வேட்பாளர் சத்யகுமார், தனி நபராக சென்று திருத்தணி நகரத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்து வருகிறார்.
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தொண்டர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அது சரி எம்ஜிஆர் சிலை எங்கே என்கிறீர்களா? இப்ப அவரா முக்கியம்?
தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவர் விஜயனுக்கு, சட்டசபை தேர்தலில் சீட் வழங்க கோரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் பெரிய கேனில் கொஞ்சம் போல எரிபொருளுடன் வந்து தீக்குளிக்க போறேன் என்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
துணை முதல்வர் உதயநிதி திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டபோது, அவருடன் திருவண்ணாமலை வேலு, கலசப்பாக்கம், சரவணன், கீழ்பெண்ணாத்தூர் பிச்சாண்டி, செங்கம் கிரி ஆகிய நான்கு திமுக வேட்பாளர்களும் பிரசார வாகனத்தில் ஏறி குறைவான இடத்தில் நெருக்கியடித்துக்கொண்டு நின்றதால், வாக்காளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் போட கூட சிரமப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள அமைச்சர் பெரியகருப்பன், பகுத்தறிவு பேசும் கட்சியை சேர்ந்தவர் என்றாலும், அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தனது குலதெய்வமான வேலங்குடி கருப்பண சாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் பிரசாரத்தை மேற்கொண்டார்.
விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் காங்., கட்சி சிட்டிங் எம்எல்ஏ ராதாகிருஷ்ணனுக்கு விருத்தாசலம் தொகுதி சீட் கிடைக்க கூடாது என அதே கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலர் ஜெயகுரு பிராது கட்டி வேண்டிக் கொண்டார். அந்தத் தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பிராதை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
தேர்தல் வந்தாலே எல்லோருமே பிசியாகி விடுகின்றனர். வேட்டி துண்டு விற்றுக்கொண்டிருந்த இந்த பெண்மணி, 'அதை எல்லாம் அப்புறம் வித்துக்கலாம், இப்ப விறுவிறுப்பா விற்கிற கட்சி கொடி, குடை, பேட்ச்களில் கவனம் செலுத்துவோம்' என்று களத்தில் இறங்கியிருக்கிறார் இவர். இடம்: டவுன்ஹால், கோவை.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், சென்னை மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது பிரசார வேனின் பக்கவாட்டில் துண்டு கட்டி, அதை பிடித்து தொங்கிக் கொண்டே சென்ற தென் சென்னை, தென் கிழக்கு மாவட்ட செயலர் அசோக் மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார்.
கைவிரல்களில் பெரிய பெரிய மோதிரம் அணிந்து காணப்படும் அதிமுக பிரமுகர் மோதிரம் பொன்னுசாமி, தேர்தல் நேரத்தில் ரொம்ப பிசியாக வலம் வருவார். இவர் வாய் திறந்து பிரசாரம் செய்ய வேண்டாம், கையெடுத்து கும்பிட்டாலே போதும், அதுவே பெரிய பிரசாரம் தான். இடம்: அதிமுக தலைமை அலுவலகம், சென்னை.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்