விஜயை பார்க்க சென்ற தொழிலாளி மரணம்
சேலம், சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள மைதானம் ஒன்றில் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் கூட்டத்துக்கு வந்தோர் முண்டியத்து உள்ளே சென்றனர். அப்போது,
வெயில் உக்கிரம் தாங்காமல் ஒருவர் மயங்கினார். அவரை, பாதுகாப்பில் இருந்த போலீசார், தயாராக இருந்த ஆம்புலன்சில் ஏற்றி, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ், 37. சேலம், கொண்டலாம்பட்டி, அரசமரக்காட்டூரில் வசித்து, அதே பகுதியில் உள்ள வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்தார். திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. சுராஜ், இரு ஆண்டுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஆர்வத்தில் விஜயை பார்க்க வந்துள்ளார். வெயில் தாக்கத்தில் மயங்கி சரிந்து, இறந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிர்வாகிகள் கூட்டத்துக்கு சுராஜ் எப்படி வந்தார்?
மாநாடு, பொதுக் கூட்டங்களை தவிர, விஜய் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், 'பாஸ்' வழங்குவது வழக்கமாக உள்ளது. சேலம் கூட்டத்துக்கு, பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே பாஸ் கொடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அதில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் எப்படி நுழைந்தார் என்ற கேள்வி எழுந்தது.
ஏற்கனவே, விஜய் நிகழ்ச்சிக்கான பாஸ், பிளாக் டிக்கெட் போல் விற்பனை செய்யப்படுவதாகவும், போலியாக அச்சடிக்கப்படுவதாகவும் பல புகார்கள் உள்ளன. அவற்றை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, சேலத்தில் சுராஜ் மரணம் அமைந்திருக்கிறது என, போலீஸ் தரப்பில் புகார் தெரிவித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (0)