சசிகலாவை பிடிக்காது: ராஜ கண்ணப்பன் பேச்சு
மதுரை: ''கூட்டணி கட்சிகளை தி.மு.க., அவமதிப்பது கிடையாது. உள்ளதை தான் எடுத்துச் சொன்னோம்,'' என அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசினார்.
மதுரை முனிச்சாலையில், தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் அவர் பேசியதாவது: சசிகலாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. 'நான் ஒருத்தர் இருப்பதையே மறந்து விட்டார்கள்' என அவர் கூறுகிறார். அவரை யார் இப்போது தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் கட்சியில் இருங்கள்; இல்லாமல் போங்கள். பழனிசாமி தான் உங்களை சேர்க்க மாட்டேங்கிறாரே. அ.தி.மு.க.,வில் தொண்டர்கள் கிடையாது. அங்கே இருப்பவர்கள் எம்.எல்.ஏ., சீட்டுக்காக உட்கார்ந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திடம், 'நீங்கள் ஏன் எம்.பி., தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்; 25 ஆண்டுகளாக உங்கள் சமுதாய மக்களுக்கு என்ன செய்தீர்கள்?' என்று கேட்டேன்.
கூட்டணி கட்சிகளை தி.மு.க., அவமதிப்பது கிடையாது. உள்ளதையே எடுத்துச் சொன்னோம். உதயசூரியன் என்றால் தான் மக்கள் ஓட்டளிப்பர்.
உதயசூரியன் என்றால், அது ஒரு மாதிரி; மற்ற சின்னம் என்றால் அது ஒரு மாதிரி. எல்லாரும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்றுதான் சொல்கிறோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின், 'ஆட்சியில் பங்கு கிடையாது' என்று தெளிவாக சொல்லி விட்டார்.
தேர்தல் ஆணையம் ஒரு பக்கமாக செல்கிறது. சிதம்பரத்திற்கு எதிராக எம்.பி., தேர்தலில் ஓட்டை மாற்றி போட்டு, என்னவோ செய்தார்கள்.
தோல்வியை பற்றி நான் கவலைப்படவில்லை. தேர்தலை பற்றி கவலைப்படுபவன் அரசியல்வாதியாக இருக்க முடியாது.
பாரிவேந்தர் கல்லுாரி வைத்துக் கொண்டு வசதியாக இருக்கிறார். கடந்த தேர்தலில் ஜான் பாண்டியன், என்னை எதிர்த்து முதுகுளத்துாரில் போட்டியிட்டார்.
'நீ ஏம்பா எதிர்ப்பா வர்ற; உன் பையனுக்கு நான் தான் 2 கோடிக்கு ரூபாய்க்கு மருத்துவம் படிக்க எம்.டி., சீட் வாங்கி கொடுத்தேனே' என்றேன். பேசாமல் சென்று விட்டார்.
பின், தன் மகன் திருமணத்திற்கு அழைத்தார். பின் முதல்வர் ஸ்டாலினிடம், 'ஒடுக்கப்பட்ட சமூகம்; நாம் யாரிடம் வித்தியாசம் பார்ப்பதில்லை. போயிட்டு போறான்' என்று கூறி, திருமணத்தை நடத்தி வைத்தோம். இவ்வாறு ராஜ கண்ணப்பன் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (0)