Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஜாதி உணர்வை வெல்லும் ரசிக மனநிலை

ஜாதி உணர்வை வெல்லும் ரசிக மனநிலை

டி.ஐ.அரவிந்தன்
aravindanmail@gmail.com

கடந்த 1970 - 80களில் இருந்ததை காட்டிலும், தற்போது, ஜாதி உணர்வும் ஜாதிப்பிடிப்பும் அதிகமாகி இருப்பதை உணர முடிகிறது. முன்பு இல்லாத ஜாதி உணர்வு புதிதாக வந்துவிடாது என்றாலும், முன்பு, ஜாதியை பற்றி பொதுவெளிகளில் பேசவும், ஜாதி வேற்றுமைகளை காட்டிக்கொள்ளவும் இருந்த தயக்கம் தற்போது இல்லை.

ஜாதி பெருமிதம், ஜாதி அடையாளத்தை முன்னிறுத்துவது ஆகியவை முன்பைவிட அதிகரித்திருக்கிறது. பழமையில் ஊறிய மூத்த தலைமுறையினரிடம் மட்டுமின்றி, இளையோரிடமும் இது இருப்பதை காண முடிகிறது.

பள்ளிகளிலும் கல்லுாரிகளிலும், கைகளில் ஜாதி அடையாள கயிறுகள் கட்டுவது, சமூக வலைதளங்களில் ஜாதி பெருமை பதிவுகள் போடுவது, ஜாதி வன்முறையில் ஆக்ரோஷத்தோடு இறங்குவது என்பவை அதிகரித்துவிட்டன. இவை, இளைஞர்கள் மனதில் ஜாதி அடையாளம் அழுத்தமாக இருப்பதை காட்டுகின்றன.

நவீன தொழில்நுட்பத்தை மிக திறமையாக பயன்படுத்தும் இந்த தலைமுறையினர் தான், நவீனத்துவத்திற்கு சற்றும் தொடர்பற்ற பழமைவாத ஜாதிய உணர்வில் ஊறியவர்களாகவும் இருக்கின்றனர்.

நவீனத்துவமும் நவீன வாழ்க்கையும் அவர்களைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பம், வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றோடு நின்றுவிடுகிறது. சமத்துவம், சம வாய்ப்பு, அவரவருக்கான உரிமைகள் ஆகிய நவீனத்துவ சிந்தனைகள் அவர்களிடம் பெரிதாக எடுபடவில்லை. குறிப்பாக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இதுவே யதார்த்தம்.

நட்பு, காதல், திருமணம், சமூக அந்தஸ்து என வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும் ஊடுருவியிருக்கும் ஜாதி உணர்வு, இளைஞர்கள் ஓட்டு போடும்போது மட்டும் இருக்காது என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. அரசியல் கட்சிகளும் இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு தான் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கின்றன.

33.50 சதவீதம்

தற்போது, தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில், 18 -- 24 வயது வரம்பில் 51,09,195 (10.40%) பேர்; 25 -- 34 வயது வரம்பில் 1,13,48,471 (23.10%) பேர் உள்ளனர்.

மொத்த வாக்காளர்களில், 33.50 சதவீதம் பேர் இளைஞர்கள். அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகின்றனர் என்று முடிவு செய்வதில், இவர்களுக்கு பெரும் பங்கு இருக்கும். நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களிடம் காணப்படும் கட்சி விசுவாசம் இளைஞர்கள் இடத்தில் இல்லை. கட்சி சார்பு, அவர்களுடைய ஜாதி உணர்வை அசைப்பதில் பெரிய பங்கு வகிக்க வாய்ப்பில்லை.

வழக்கமான தேர்தலாக இருந்தால், ஜாதி அடையாளத்தை முன்னிறுத்தி இவர்கள் ஓட்டு போட வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், இந்த முறை நட்சத்திர கவர்ச்சி நுழைந்துள்ளது. விஜயின் வருகை, ஜாதி உணர்வை தாண்டி அவர்களை ஓட்டு போட வைக்கும்.

மேற்கண்டவர்களில், 20- - 30 வயது வரம்பில் உள்ள இளையோரிடம், விஜய்க்கு ஓட்டு போடுவீர்களா? என்ற கேள்வியை கேட்டு வருகிறேன். ஜாதி வேறுபாடின்றி, 'போடுவேன்' என்று பெரும்பாலும் பதில் வருகிறது.

இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ரசிக மனநிலை. இரண்டு, இதுவரை ஓட்டு போட்ட விதத்தை மாற்றிப் பார்க்கலாமே என்ற யோசனை. நட்சத்திர வசீகரம், மாறுதல் எனும் காரணிகள், இளைஞர்களின் போக்கை தீர்மானிப்பதை காண முடிகிறது.

இதிலும், நட்சத்திர வசீகரம் அதீதமாக இருக்கிறது. தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பெண் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். அவருக்கு 27 வயது. தென் மாவட்டம் ஒன்றில் உள்ள தன் சொந்த ஊரில், இளையோர் மத்தியில் களப்பணி ஆற்றிவருகிறார்.

அந்த சிறிய ஊரில், இளைஞர்கள் மத்தியில் இரண்டு விஷயங்கள் அழுத்தமாக இருப்பதாக அவர் கூறுகிறார். ஒன்று, ஜாதி; இன்னொன்று, விஜய் மீதான கண்மூடித்தனமான ஈர்ப்பு. ஜாதி உணர்வுகளை தாண்டி, இளைஞர்கள் விஜய்க்கு ஓட்டு போட தயாராக இருப்பதாக சொல்கிறார்.

தளபதி... தளபதி

தமிழக அரசு அண்மையில் மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கியபோது, 20- - 22 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர், 'ஸ்டாலின் அரசு கொடுத்த 5,000 ரூபாயை வாங்கியதற்காக, என் அம்மாவை அடித்தேன்' என்று பெருமை பொங்க, தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.

அதை கேட்டு, பிற இளைஞர்கள் ஆரவாரத்துடன் பாராட்டி இருக்கின்றனர். அந்த கூட்டத்தினர் முழுதும் 'தளபதி... தளபதி' என்று வெறியோடு இருப்பதை கண்டதாக அந்த பெண் சொல்கிறார்.

கரூர் சம்பவம், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சர்ச்சை ஆகியவை நடுநிலை வாக்காளர்களை விஜய் பக்கம் செல்வது பற்றி யோசிக்க வைக்கும். ஆனால், இளைஞர்கள், விஜயை வெறித்தனமாக ரசிக்கின்றனர்.

இந்த காரணங்களால் அவரை விட்டு விலகுவதாக தெரிய வில்லை. எனவே விஜய் மீதான ஈர்ப்பு, இளைஞர்களிடம் இருக்கும் ஜாதிய உணர்வை ஊடறுக்கக் கூடிய சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

விஜய்க்கு சாதகமாகும் அவரது வசீகரம் தான், இந்த தேர்தல் களத்தின் புதிய அம்சம். அது எந்த அளவிற்கு வலிமையாகவும் வீச்சுடனும் இருக்கிறது என்பதை பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். ஏனென்றால் இளைஞர்களின் ஓட்டுகள் 33.50 சதவீதம் உள்ளன.

இவர்களோடு, 1,12,27,060 அதாவது 22.80% பேர் உள்ள 34 -- 44 வயது வரம்பினரையும் சேர்த்தால், தொகை 56 சதவீதத்தை தாண்டிவிடுகிறது. 34- - 44 வயது வரம்பினரும் விஜய் வசீகரத்திற்கு ஆளாகமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

(கட்டுரை ஆசிரியர் நேற்று காலை அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.)

Advertisement

ஏப் 04, 2026 04:31 pm

ரஜினியும் இப்படித்தான் வந்தாரு , குடும்ப பயத்தை கொடுத்து , வயது உடல்நலன் பயத்தை கொடுத்து , , , , வெளியேற வைத்தது திராவிஷ மாடல் . . . அதனால்தான் இவர் குடும்பத்துடன் ஒட்டுதல் இல்லை என்று காண்பித்து தப்பிப்பதற்காக ,, டைவர்ஸ் என்ற டிராமாவை போயிருக்காரு ,, , உடல்நலம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ,, ஆனால் அரசியல் வித்தை , கொஞ்சமும் இல்லாமல் உள்ளே தொபுக்கடீர்னு குதிச்சிட்டாரு , , , ,எப்படியும் தலித் ஜாதி ஓட்டு , கிறிஸ்டின் மத ஓட்டு , சினிமா ரசிகர்கள் என்ற ஓட்டு , இவை எல்லாம் தனக்குத்தான் என்ற கணக்கு போட்டு , குதித்திருக்கிறார் ,, , , ,ஆனால் தான் ஒரு நல்லவனுக்கெல்லாம் நல்லவன் , ஏழை பங்காளன் , உழைப்பவர் நண்பன் , தாய்குலத்தின் ஆபத்பாந்தவர் , அதோடு மற்ற எல்லா தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையானவரா , இருப்பாரா , என்ன செய்வார் , என்ற கேள்விகளுக்கு இவரிடம் சுயமாக பதிலோ, திறமையோ , கொஞ்சம் கூட இருப்பதாக தெரியவில்லை . . . குருட்டு கோழி தவிட்டை விழுங்குவது போல, பாவம் . . . . அப்பப்ப வந்து கூவி விட்டு செல்கிறார் . ..

Reply Rate this
ஏப் 04, 2026 02:49 pm

இதெல்லாம் டுபாக்கூர். ரயில்ல கூட நெடும்பயணம் எல்லோரும் ஒன்னாதான் போறோம் சாப்பாடு கூட சேர் பண்ணுவோம். உடனே சதி ஒழிஞ்சிடுசா. தேர்தல் முடிந்து வீட்டுக்கு போனவுடன் அவனவன் ஜாதி கயிறு அது இதுன்னுதான் திரிவான். விஜய் கட்சியில சேர்ந்தவன் எல்லாம் வேற ஜாதியில் சம்பந்தம் செய்வானா, உளறல்.

Reply Rate this
ஏப் 04, 2026 12:59 pm

ஒன்று ஜாதி இல்லை ஆனால் மதம் இருக்கிறது. நிற்கும் தொகுதியை பார்த்தாலே மதத்தை வைத்து அரசியல் செய்வது தெரிகிறது.

இரண்டு ஒவ்வரு தொகுதியிலும், அந்தந்த ஜாதி மெஜாரிட்டியை வைத்தே சீட் ஒதுக்கப்படுகிறது. இது ஜாதி மற்றும் மதத்தை வைத்து நடக்கும் காக்டெய்ல்.

Reply Rate this
ஏப் 04, 2026 12:33 pm

ஆக மதமாற்றம் சுலபமாக நடக்கும்.

Reply Rate this
ஏப் 04, 2026 09:16 am

எங்கள் தொகுதியில் விஜய்க்கு வாக்கு சேகரிக்கிறார்கள். சாதி இல்லாமல் அரசியல் இல்லை என்பதுதான் உண்மை

Reply Rate this
ஏப் 04, 2026 08:26 am

ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

Reply Rate this
ஏப் 04, 2026 07:58 am

தவெக விஜயின் சினிமா நடிகன் கவர்ச்சி அவரை நேரில் பார்க்கும் ஆவலை தவெக பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும்போது கூடும் கூட்டம் தேர்தலில் வாக்குகளாகாது.

Reply Rate this
ஏப் 04, 2026 07:49 am

ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி

Reply Rate this
ஏப் 04, 2026 07:18 am

ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடக்கூடாது என்று பெருமை பேசிய திராவிட மாடல் தான் ஓட்டுக்காக ஜாதி அரசியலை சீராட்டி வளர்த்து இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது.

Reply Rate this