Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இலவசங்களை மக்கள் விரும்புவது ஏன்?

இலவசங்களை மக்கள் விரும்புவது ஏன்?

இளங்கோ மதி, எழுத்தாளர்
ezhilkrishnan@gmail.com

கடந்த 2006 சட்டசபை தேர்தலின் போது, மக்களின் மனநிலையை அறிய, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கள ஆய்வு செய்தது பிரபல வார பத்திரிகை ஒன்று. மக்கள் மீண்டும் அ.தி.மு.க.,வுக்கே ஓட்டு போட தயாராக இருப்பதை ஆரம்பக்கட்ட ஆய்வு வெளிப்படுத்தியது.

அப்போது, பிரசார களத்தில் திடீரென ஒரு திருப்புமுனை. தேர்தலில் வென்றால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச கலர் 'டிவி' வழங்குவதாக, அப்போதைய தி.மு.க., தலைவர் கருணாநிதி கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார். இது தமிழகம் முழுக்க பரபரப்பானது. புதிய அலை உருவானது. ஒரே அறிவிப்பில் மக்கள் தி.மு.க., பக்கம் சாயத் துவங்கியதை கள ஆய்வில் அறிய முடிந்தது. தேர்தல் முடிவிலும் அது எதிரொலித்தது.

ஜனநாயகம் தழைக்க, தோள் கொடுக்க வேண்டிய 'திருவாளர் பொதுஜனம்' மெல்ல மெல்ல சுருங்கி, 'எனக்கு தனிப்பட்ட முறையில் என்ன கிடைக்கும்?' என்று கணக்குப் போட்டு ஓட்டு போடும் வியாபார மனநிலைக்கு மாறிய புள்ளி அதுதான்.

எளிய கேள்வி


சாமானிய மக்களின் தற்போதைய கேள்வி மிக எளிமையானது. 'அரசு விதிக்கும் அனைத்து வரிகளையும் அபராதங்களையும் நான் நேர்மையாக கட்டுகிறேன். ஆனால், பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கிறது?'

இந்த கேள்விக்கு கொண்டுவிட்டது, மேலும் பல எளிமையான கேள்விகள் தான்.

* சாலைகள் ஏன் குண்டும் குழியுமாக இருக்கிறன? ஏன் அசுத்தமாக உள்ளன?

* வெயில் காலத்திலும் கொசுக்கள் மொய்ப்பது ஏன்?

* குழாயில் தினசரி குடிநீர் ஏன் இல்லை?

* தெருநாய் பிரச்னை எப்போது தீரும்?

இந்த சாதாரண பிரச்னைகளுக்கு கூட தீர்வு கிடைக்காத போது, அடிப்படை வசதிகளுக்கு கூட வாழ்நாள் முழுக்க போராட வேண்டுமா என்ற விரக்தி ஏற்படுகிறது. அதாவது, அரசால் சாதாரண பிரச்னைகளை கூட தீர்க்க முடிவதில்லை. அரசு தீர்க்கும் என காத்திருந்து மக்கள் சலிப்படைந்துவிட்டனர். அதனால் தான், சொத்து வரி, ஜி.எஸ்.டி., வருமான வரி என, தாங்கள் கட்டும் வரிகளுக்கு உபகாரமாக என்ன கிடைக்கிறது என கணக்குப்போட தொடங்கிவிட்டனர். இது நியாயமானது தான். அரசால் வசதிகள் ஏதும் செய்து கொடுக்க முடியவில்லை எனில், தனிப்பட்ட முறையில் 'பணமாகவோ, பொருளாகவோ கொடு' என்று கேட்கத் துவங்கிவிட்டனர்.

இந்த மனநிலை அரசியலையும் மாற்றிவிட்டது.

இலவச அரசியல்


இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி, பல லட்சம் கோடி அன்னிய முதலீடுகள், டைடல் பார்க்குகள், சிறப்பு சட்டங்கள் என அரசுகள் வாசிக்கும் சாதனைகள் எதையும் மக்கள் பொருட்படுத்துவதில்லை.

இலவசங்களே மக்கள் மனதை இப்போது ஆட்கொண்டுள்ளன. அதனால், கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகள் இல்லாத கட்சியே கிடையாது என்ற நிலை உருவாகி உள்ளது. நாம் தமிழர் கட்சி விலகலாக, புதிதாக வந்துள்ள த.வெ.க., கூட மாதம் 2,500 ரூபாய் என அறிவித்துள்ளது.

இலவசங்கள் பெரும்பாலும் பெண்களையே குறிவைத்து வீசப்படுகின்றன. குடும்பத்தின் பொருளாதார சுமையை சுமக்கும் பெண்களுக்கு, எப்போதும் ஆளுங்கட்சி மீது ஒரு தாளாத கோபம் இருக்கும். அதை தணிக்கவே இலவசங்கள் முயற்சிக்கின்றன.

ஆனால், இலவசங்கள், மோசமான சாலைகள் போன்ற அன்றாட பிரச்னைகளை தீர்ப்பதில்லை. அதனால் தான், மாதம் 1,000 ரூபாய் என்பது அடுத்த தேர்தலுக்கு 2,000 ரூபாயாக உயர வேண்டி உள்ளது. அத்துடன், இலவசங்களை ஏற்றாலும், மாற்றத்தை மக்கள் தேடுகின்றனர்.

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி, கடந்த தேர்தலில் கமலுக்கு ஓட்டு போட்டார். கமலின் அரசியல் கருத்துகளை அவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. அது அவருக்கு தேவையும் இல்லை.

ஒரே காரணம், ஆளுங்கட்சி மற்றும் திராவிட கட்சிகள் மீதான கோபம். ஆட்சி செய்யாதவர்கள் நல்லவர்கள், அதிலும் நடிகர்கள் மிகமிக நல்லவர்கள்; மாற்றத்தைக் கொண்டு வந்து நல்லாட்சி தரக்கூடியவர்கள் என்ற பொதுப்புத்தியின் அடிப்படையில் கமலுக்கு செலுத்தப்பட்ட ஓட்டு அது.

அதனால் தான், திரைப்பிரபலங்கள் அரசியலுக்கு வந்தால், உடனடியாக அவர்களை ஆதரிப்பது நம் மக்களுக்கு சுலபமாகிவிடுகிறது. முன்பு, ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னபோதும் இந்த நிலை தான் இருந்தது.

இன்று யு டியூப் போன்ற தளங்களில், 'விஜய் வந்தால் நல்லது செய்வார்' என்று இளைஞர்கள் முழங்குகின்றனர். இதுவும் அந்த கோபம் மற்றும் சலிப்பின் வெளிப்பாடுதான்.

இலவச அரசியலின் பின்னால் உள்ள மாபெரும் ஆபத்தை மக்கள் உணர்வதில்லை. இன்று ஓட்டுகளுக்காக வீசப்படும் இந்த 1,000 - 2,000 ரூபாய், நாளை அவர்களின் பிள்ளைகளுக்கான தரமான அரசு பள்ளிகளாகவோ, அதிநவீன வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளாகவோ, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாகவோ மாறாமல் முடங்கிப்போகும் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகின்றனர். கஜானா காலியானாலும் பரவாயில்லை என்று, வாக்குறுதிகளை அள்ளிவீசும் மனநிலைக்கு அரசியல் கட்சிகளும் தள்ளப்பட்டுவிட்டன.

Advertisement

மார் 31, 2026 12:10 pm

நம்முடைய அடுத்த தலைமுறைக்கு தேவையான வளர்ச்சியை கொடுக்காமல் இலவசங்களை கொடுத்தால் அடுத்த தலைமுறை பிச்சை தான் எடுக்கனும்

Reply Rate this
மார் 31, 2026 12:06 pm

அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடை என்று பெயரில் கோடிக்கணக்கில் வாங்கும் போது அதில் சிறிய வாங்க ஆசைப்படுகிறார்கள்.

Reply Rate this
மார் 31, 2026 11:25 am

படிப்பறிவு இல்லாமை, திராவிட மாயை. நடிகர் மாயை. அதிக அளவு குடி. போதை உபயோகம், போன்றவை கிராமங்கள் தவிர பெரு நகரங்கள் வரை உள்ளது. இதனால் உள்ள ஏழ்மை, இலவசங்களை நாட வைக்கிறது. இந்த லஞ்சம் தான் மழைக்காலத்தில், வீட்டுக்குள் தண்ணீராக புகுந்து அவர்களின் இலவசங்களை அடித்து கொண்டு செல்கிறது அல்லது அவர்கள் குடி இருக்கும் அரசாங்க வீடுகள் அவர்கள் தலையில் விழுவதும் அப்பாவி மக்களுக்கு புரியவில்லை.

Reply Rate this
மார் 31, 2026 09:10 am

எந்த கட்சி இலவசங்களை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கிறதோ அந்த கட்சியை போட்டியிட தடை செய்ய சட்டம் வேண்டும்.

Reply Rate this
மார் 31, 2026 08:40 am

அவரவர் புதைகுழியில் போட்டு புதைக்க

Reply Rate this
மார் 31, 2026 08:39 am

மக்களாட்சிக்கு குடஓலை முறையினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது தமிழகம். ஓட்டை விலைக்கு வாங்கும் திருமங்கலம் ஃபார்முலா ஐ அறிமுகப்படுத்தியதும் தமிழகம். ஓட்டினை தவணைமுறையில் வாங்கும் இலவசத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி வருவதும் தமிழகம். குடஓலை முறைக்கு மாறாக வேட்பாளர்களை சூட்கேஸ் வாங்கி நியமிக்கும் வழகத்தினை ஏற்படுத்தியதும் தமிழகம். வாக்களர்களுக்கு இந்த ஐ டி பார்க், ரோடுகள் போட்டுவது, கல்லூரிகள் கட்டுவது, எல்லாம் கமிஷனுக்குத்தான் என்று நங்கு அறிவரகள். இந்த இலவசங்கள் மூலமாக ஆட்சியாளர்கள் கொள்ளை அடிப்பதையும் மக்கள் நன்கு அறிவர்கள். எப்படி லாட்டரி பரிசுக்கு வரி விதிக்கப் படுகிறதோ அதுபோல பெறப்படுகிற இந்த இலவசங்களுக்கும் ஜி ஸ் டி போல புதிய வரி ஒன்றினை விதித்தால் இலவசம்கள் மூலம் அடிக்கப்படும் கொள்ளையினை சிறிது குறைக்கலாம்.

Reply Rate this
மார் 31, 2026 07:22 am

கடைசியில் இலவசமாக ... தருவார்கள்

Reply Rate this
மார் 31, 2026 07:05 am

சீமான் கேட்ட மாதிரி இலவசமா ....வாங்கிப்யா இதைவிட இந்த பிச்சைகார வாக்காளர்களை கேவலமா பேச முடியாது ஆனால் இந்த கேடுகெட்ட மக்கா திருந்தாது பி. கு. நான் இலவசமாக எதுவும் வாங்கியது இல்லை ரேஷனில் கூட பொருட்கள் வாங்குவது இல்லை ஓட்டுக்கு காசு வாங்கியதே இல்லை என் வாழ்நாளில் என் குடும்ப ஓட்டுகள் விற்பனைக்கு அல்ல எந்த கட்சிக்கும் எந்த வேட்பாளருக்கும் அடிமையாக ஓட்டு போடுவது இல்லை

Reply Rate this
மார் 31, 2026 07:03 am

மக்களை கையேந்தும் நிலையில் வைத்திருப்பதுதான் அரசியல் கட்சிகளின் நோக்கம். சில கட்சிகள் விதிவிலக்காக இருந்தாலும் எல்லோரும் அந்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. இதற்கு ஒரு கண்டிப்பான சட்டம் வரவேண்டும். மக்களுக்கு பணம் பொருள் இலவசம் எதுவும் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே அரசியல்வாதியை தேர்ந்து எடுத்து ஓட்டு போடுவார்கள். ஆனால் இப்போது நடப்பதே வேறு. இதற்கு முடிவு கடுமையான சட்டங்கள் தண்டனைகள் மட்டுமே.

Reply Rate this