/ / தி.மு.க.,என்றால் தில்லுமுல்லு கட்சி: ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் நாடகம்

தி.மு.க.,என்றால் தில்லுமுல்லு கட்சி: ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் நாடகம்

போடி:''தி.மு.க., என்றால் தில்லுமுல்லு கட்சி. எப்படியாவது ஆட்சியை பிடிப்பதற்கு ஸ்டாலின் நாடகம் ஆடி வருகிறார். மக்கள் நம்ப வேண்டாம்,'' என, தேனி மாவட்டம் போடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.அ.தி.மு.க., வேட்பாளர்களான துணைமுதல்வர் பன்னீர்செல்வம்(போடி), சையதுகான் (கம்பம்), முருகன் (பெரியகுளம்) (தனி), லோகிராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் முதல்வர் பேசியதாவது:தேனி மாவட்ட 4 தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து அதைநிறைவேற்றுபவராக துணை முதல்வர் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வன் அ.தி.மு.க.,வில் இருந்து பதவி சுகங்களை அனுபவித்து விட்டு தற்போது தீயசக்தியான தி.மு.க., பக்கம் சென்று நன்றி மறந்தவராக உள்ளார். அவரை 'டிபாசிட்' இழக்க செய்ய வேண்டும். அ.தி.மு.க., கூட்டணி வலிமையாக இருக்கிறது.கட்சி, துணை முதல்வர், என்னை பற்றி குறைகூறி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். ஆனால் நாங்களோ அ.தி.மு.க.,வின் சாதனைகளை எடுத்துரைத்து பிரசாரம் செய்கிறோம். அவருடைய கனவு ஒரு போதும் பலிக்காது. ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் பதவியில் இருந்தவர் ஸ்டாலின். அப்போதெல்லாம் மனுக்களை பெற்று குறைகளை தீர்க்க நினைக்காமல் தற்போது மனுக்களை பெற்று வருகிறார். மக்களிடம் பெறுகிற மனுக்கள் உள்ள பெட்டிகளை திறக்கப் போவதில்லை. 'சீல்' உடைக்கப்போவதில்லை. ஆட்சிக்கு வரப்போவதில்லை.

தில்லுமுல்லு கட்சி

தி.மு.க., என்றால் தில்லுமுல்லு கட்சி. எப்படியாவது ஆட்சியை பிடிப்பதற்கு ஸ்டாலின் நாடகம் ஆடி வருகிறார். அதனை நம்ப வேண்டாம். போடியில் போட்டியிடும் துணை முதல்வர், மக்களுக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளார். எங்கள் இருவரிடமும் வைத்த கோரிக்கைகளை ஏற்று 16 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடியில் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. துணை முதல்வரின் முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை கட்டிய பொறியாளர் பென்னிகுவிக்கின் மணிமண்டபம் லோயர் கேம்பில் கட்டப்பட்டுள்ளது.இறைவனால் தேனி மாவட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட கொடை துணை முதல்வர். முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தியது அ.தி.மு.க., அரசு. தொடர்ந்து 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்.திண்டுக்கல், - சபரிமலை ரயில்பாதை திட்டம் குறித்து, தேனி ரவீந்திரநாத் எம்.பி., லோக்சபாவில் பேசியுள்ளார். குரங்கணி,- டாப் ஸ்டேஷன் ரோடு ரூ.300 கோடியில் துவங்கப்படும். கேரளாவுக்கு விரைவாக செல்ல 4 கி.மீ., துாரம் உள்ள சாக்கலுாத்து மெட்டு ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சிறுபான்மையின மக்களின் நலனை காக்கும் ஒரே அரசு அ.தி.மு.க., அரசு. தமிழகத்தில் ஜாதி சண்டை கிடையாது. இன்று ஒரே குடும்பமாக அனைத்து மதத்தினரும், சாதியினரும் வாழ்ந்து வருகிறோம். ஆனால் தி.மு.க.,வினர் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஆண்டிபட்டி நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்றபடி ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

மக்களின் கட்சி

அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சி அ.தி.மு.க., இது மக்களின் கட்சி. எனவே மூன்றாவது முறையாக மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைய இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் போடியில் துணை முதல்வரை வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !