'ஐஸ்!' காங்., வெளியிட்டது கவர்ச்சி தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தலைவர் ராகுல், நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'நீட் தேர்வு விலக்கு, விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட், மீனவர்களுக்கு தனி அமைச்சகம்' என, ஏராளமான கவர்ச்சி அம்சஙகள் இடம்பெற்றுள்ளன. தொலைநோக்கு திட்டத்துடன் கூடிய எந்த அம்சமும் இல்லாமல், வாக்காளர்களுக்கு, 'ஐஸ்' வைக்கும் விதமான விஷயங்களே, இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தானும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை, ராகுல் நிரூபித்துள்ளதாக, அவர்கள் கூறுகின்றனர்.

லோக்சபா தேர்தல் பிரசாரம், நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர், சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்த தேர்தல் அறிக்கையை, காங்கிரஸ் தலைவர் ராகுல், நேற்று டில்லியில் வெளியிட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., மூத்த தலைவர் சோனியா, கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான, பிரியங்கா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், இதில் பங்கேற்றனர்.

'நீட்' தேர்வு:மொத்தம், 54 பக்கங்கள் அடங்கிய இந்த தேர்தல் அறிக்கையில், இடம்பெற்றுள்ள மிக முக்கிய அம்சங்கள்:
* மத்தியில், காங்., ஆட்சி அமைந்தால், மருத்துவப் படிப்புகளுக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை ஏற்பதா, வேண்டாமா என்பதை, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்ய வழிவகை செய்யப்படும். சில மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் அமைந்துள்ள மருத்துவ கல்லுாரிகளின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றன. இதை கருத்தில் வைத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மாணவர்கள், மருத்துக் கல்லுாரிகளில் சேரும் உரிமைக்கு, நீட் தேர்வு தடையாக உள்ளது; இதற்கு தீர்வு காணும் விதமாக, நீட் தேர்வுக்கு பதிலாக, மாநில அளவிலான நுழைவு தேர்வுகளை நடத்தவும், ஏற்பாடு செய்யப்படும்.

* கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவத்தினரால் ஏற்படும் நீண்டகால பிரச்னைகளுக்கு, உரிய வகையில் தீர்வு காணப்படும். மீனவர்களின் நலன்களுக்காக, தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

* தற்போது அமலில் உள்ள, தேச விரோத சட்டம் நீக்கப்படும். அதற்கு பதிலாக, மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புவோருக்கு, கடும் தண்டனை அளிக்கும் வகையிலான புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.

* ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். புதுச்சேரிக்கு, மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

* மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை இறுதி செய்யும், 'நிடி - ஆயோக்' அமைப்பு கலைக்கப்பட்டு, மீண்டும் திட்டக்கமிஷன் அமைக்கப்படும்.

* 'ரபேல்' போர் விமான ஊழல் குறித்து, முழுமையாக விசாரிக்கப்படும். பயங்கரவாதத்தை ஒழிக்க, முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும். காஷ்மீர் பிரச்னைக்கு முன்நிபந்தனை ஏதும் இன்றி, தீர்வு காணப்படும்.

* கல்வித் துறைக்கு, அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி, மேலும் அதிகரிக்கப்படும். பள்ளிக் கல்வி, மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்கப்படும்.

* அரசுத் துறையில் உள்ள, 22 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். கிராம ஊராட்சிகளில், 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

* வரும், 2030க்குள், நாட்டில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஜி.எஸ்.டி.,யில் உள்ள குறைகள், மற்றும் கடுமையான அம்சங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, எளிமையாக்கப்படும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள், ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவரப்படும்.

விவசாய பட்ஜெட்:* கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பணிகள், 150 நாட்களாக உயர்த்தப்படும். விவசாயத்துக்கு என, தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

* விவசாயிகள், தங்களது கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றாலும், அது கிரிமினல் குற்றமாக கருதப்பட மாட்டாது. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

* 'நியாய்' திட்டத்தின் கீழ், மாதம், 6,000 ரூபாய் வீதம், ஏழைகளுக்கு வழங்கப்படும்; இது, குறைந்தபட்ச வருமான திட்டம் என அழைக்கப்படும். இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். லோக்சபாவில், பெண்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.

* நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே, உயர் தர மருத்துவ சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, மருத்துவ உரிமை சட்டம் இயற்றப்படும்.

* முதல் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரையிலான பள்ளிக்கல்வி கட்டாயம் ஆக்கப்படுவதுடன், அது இலவசமாகவும் அளிக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

* புதிய தொழில் துவங்குவோருக்கு, அரசின் அனுமதிகளில், முதல் மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். இது போன்ற முக்கிய அம்சங்கள், காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் ஆதாயம்:இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: ராகுல், இளம் தலைவர் என்பதால், அவர் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, தொலை நோக்கு திட்டங்கள் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்காக, வாக்காளர்களை கவரும் வகையிலான அம்சங்களே, இதில் அதிகம் இடம் பெற்றுள்ளன. மாநில கட்சிகளை போல், போட்டி போட்டு, கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்மூலம், தேர்தல் ஆதாயத்துக்காக ஆசைப்படும், அரசியல் தலைவர்களில் தானும் ஒரு நபர் என்பதை, ராகுல் நிரூபித்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வயநாடு ஏன்? தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின், காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தற்போதைய மத்திய அரசால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக, தென் மாநில மக்கள் கருதுகின்றனர். இது குறித்து எனக்கு நிறைய தகவல்கள் வந்துள்ளன. தங்கள் மீது மத்திய அரசு வெறுப்பு காட்டுவதாகவும், முக்கிய முடிவுகளில் தங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படுவதில்லை என்றும், தென் மாநில மக்கள் நினைக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக, நான் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பேன் என்ற நம்பிக்கையை தரவும், அதை உணர்த்தும் விதமாகவுமே, கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறேன். இதன் மூலம், நிச்சயம் தென் மாநிலங்களை வளர்ச்சியடைச் செய்வேன். விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளன. எனவே, இந்துத்துவா பற்றி மட்டுமே பேசாமல், வேலைவாய்ப்புகள், ஊழல்கள், விவசாயிகள் பிரச்னைகள் குறித்தும், பிரதமர் பேச வேண்டும். முக்கிய பிரச்னைகள் குறித்து பொது விவாதத்துக்கு வர வேண்டும். என்னை நம்புங்கள். நான் பொய் கூற மாட்டேன். நான், 15 லட்சம் ரூபாய் தருவேன் என்றெல்லாம் கூற மாட்டேன். ஆனால், ஏழை குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் நிச்சயம் தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
'நாட்டு நலனுக்கு ஆபத்தானது' காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது: காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை; சாத்தியம் இல்லாதது. அந்த கட்சி அளித்துள்ள சில வாக்குறுதிகள், தேச நலனுக்கு ஆபத்தானவை. காஷ்மீரில், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீர்த்து போக செய்ய, முயற்சி செய்கிறது. இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்துவதே, அந்த கட்சியின் எண்ணம். பயங்கரவாதிகள், நக்சலைட்களை பாதுகாப்பதே, காங்கிரசின் திட்டம். காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, தகுதி யற்றவர்கள் தயாரித்துள்ளனர். பயங்கரவாதிகளை ஆதரிக்கும் விதமாக அறிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)