ராகுல் சின்ன பையன் என்ற விமர்சனம் சரியா?

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது _ காங்கிரசுக்கு பாதகமாக அமையும்

மேற்கு வங்கத்தில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, காங்., தலைவர், ராகுல், 'முதல்வர் மம்தா, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; மாநிலத்தை முன்னேற்றாமல் தடுத்து வைத்துள்ளார்' என்றார். இதற்கு பதிலடி தரும் வகையில், 'ராகுல் சின்னப் பையன். அவர் மனதில் என்ன நினைக்கிறாரோ, அதை பேசுகிறார்; அதற்கெல்லாம் பதில் அளிக்க விரும்பவில்லை' என்றார், மம்தா. இரு தரப்பினரின் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துக்கள் இதோ:

லோக்சபா தேர்தலில், ஒரு கலாச்சார பாசிசத்தை, இந்தியாவில் நிலைநிறுத்த, பா.ஜ., துடிக்கிறது. இந்த தேர்தல், பாசிச சக்திகளுக்கு, விடை கொடுக்க வேண்டிய தேர்தல். மம்தா தலைமையிலான, மாநில அரசு மீதுள்ள அதிருப்தியை, தனக்கு ஆதாயமாக்குவதற்காக, ராகுல் திட்டமிட்டு, மம்தாவை விமர்சித்திருக்கலாம்.அதற்கு எதிர் கருத்தை கூறாவிட்டால், முதல்வர் கடமை தவறியதாகி விடும். எனவே, ராகுலை, 'சின்ன பையன்' என, மம்தா, போகிற போக்கில், நிருபர்களிடம் கூறியுள்ளார்.தேர்தல் முடிவு எப்படி வந்தாலும், பா.ஜ.,வுக்கு எதிராக, மதசார்பற்ற அனைத்து சக்திகளும், ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயம்; அது, நடக்கும். எனவே, ராகுல், மம்தா விமர்சனம், லோக்சபா தேர்தலில் எதிரொலிக்காது. அந்த விமர்சனங்கள், அந்தந்த மாநிலங்களில் இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ப உருவாகுவதில், எந்த பாதகமும் இல்லை. மேற்கு வங்கத்தில் மம்தா, கேரளாவில் இடது சாரிகள் வெற்றி பெற்றால், காங்கிரசுக்கு தான் ஆதரவு அளிப்பர்.அது, ஒரு பொது நோக்கத்திற்காக எடுக்கப்படுகிற முடிவு. பா.ஜ., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அந்த ஒரே நோக்கத்திற்காக, தேர்தல் முடிந்த பின், எதிர்கட்சிகள் அனைத்தும், ஒரு குடையின் கீழ் ஒருங்கிணையும்.பூனைக்கு யார் மணிக்கட்டுவது என, அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர்வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் முன்மொழிந்தார்.அவரது துணிச்சலான நடவடிக்கை, தேசிய அளவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஸ்டாலின் முன்மொழிந்ததை இடது சாரிகள் ஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவுமில்லை. பிரதமர் மோடிக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசுகிறது. தமிழகத்தில், அ.தி.மு.க.,வை கேலி பொருட்களாக மக்கள் பார்க்கின்றனர்.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்ததும், மக்களின் கோபம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது தான், தேர்தல் முடிவில் எதிரொலித்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும். ராகுல், மம்தா இடையே உள்ள கருத்து மோதல், எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாது.சம்பத்,தி.மு.க., நட்சத்திர பேச்சாளர்


பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், பிரதமர் மோடியை, பிரதமர் வேட்பாளராக, ஏகமனதாக ஏற்றுள்ளனர். அதில், எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. முழுமனதுடன் ஏற்று, தேர்தல் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், யார் பிரதமர் வேட்பாளர் என, உறுதியான முடிவு எடுக்க முடியாததை நாடு அறியும். ராகுலை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், மேற்கு வங்கத்தில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், ஸ்டாலின் மவுனம் காத்ததையும், நாட்டு மக்கள் நன்கு அறிவர்.யார் பிரதமர் என்பதில் ஏற்பட்டுள்ள, பிரச்னையின் தீவிரத்தையே, தன் வாயால், மம்தா கொட்டி தீர்த்துள்ளார். ராகுலை சின்னப் பையன் என, மம்தா பேசியது, நாடு முழுவதும் பாதகத்தை ஏற்படுத்தும். லோக்சபாவில், ராகுல் பேசிவிட்டு, பிரதமரை கட்டிப்பிடித்தார். அந்த நிகழ்வு, நல்ல பண்பாட்டின் வெளிப்பாடு. ஆனால், அடுத்த நிமிடம் கண் அடித்தது, ராகுலின் சிறு பிள்ளைத்தனத்தை வெளிப்படுத்தியது.அதனால் தான், ராகுலை பிரதமராக, மக்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியிலும், ராகுலை பிரதமராக அறிவிக்க தைரியம் இல்லை. காங்கிரசில் உள்ள சில மூத்த தலைவர்களும், பிரதமராகும் கனவில் இருக்கின்றனர். அவர்களும், ஜோதிடர்களை பார்த்து, ஜாதகங்களை கொடுத்து காத்திருக்கின்றனர்.மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மத்தியில், ராகுலை பிரதமராக்க, ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ராகுலுக்கு மாற்றாக, யாரை பிரதமராக தேர்வு செய்யலாம் என்பதில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்குள், சர்ச்சையும் எழுந்துள்ளது. அவர்களால், தேர்தலுக்கு முன்னரும், பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியாது; தேர்தலுக்கு பிறகும் முடிவு எடுக்க முடியாது.எது, எப்படி பார்த்தாலும், தேர்தல் அறிவிப்பதற்கு முன், எங்கள் கூட்டணியில், மோடி தான் பிரதமர் என, முடிவு செய்து விட்டோம். பிரதமர் மோடி ஒருவரால் தான், நாட்டில் நிலையான ஆட்சியை தர முடியும். வலிமையான, வளமான, பாதுகாப்பான ஆட்சியை தர முடியும்.ஜே.சி.டி.பிரபாகரன்,அமைப்பு செயலர், அ.தி.மு.க.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)