ஓரங்கட்டப்பட்டனரா சினிமா நட்சத்திரங்கள்?

தமிழக காங்கிரசில், நடிகையர், நக்மா, குஷ்புக்கு, 'சீட்' இல்லை. அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற பிரதான கட்சிகளிலும், நடிகர், நடிகையருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. மேலும், இந்த கட்சிகளின் பிரசார திட்டத்திலும், நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை. இந்த தேர்தலில், கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள, இந்த திடீர் மாற்றத்துக்கான ஆதரவும், எதிர்ப்பும்...

அலைகள் ஓய்வதில்லை:தமிழகத்தில், திராவிட கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு, திரையுலகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள், திரையுலகிலும், அரசியலிலும் முத்திரை பதித்தவர்கள். நட்சத்திரங்களின் பிரசாரம், திராவிட கட்சிகள் ஆட்சி அமைக்க உதவின. சினிமா புகழ் பெற்றவர்களின் பிரசாரம், வேட்பாளர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்து உள்ளது. 'எம்.ஜி.ஆர்., தன் முகத்தை காட்டினால் போதும்; ஓட்டுகள் குவியும்' என, அண்ணாதுரையே கூறியதுண்டு.
சினிமா நட்சத்திரங்கள், மக்களுக்கு பரிச்சயமானவர்கள். அவர்கள் ஆதரிக்கிற கட்சிகளுக்கு, கண்ணை மூடி, ஓட்டுப் போடும் கிராம மக்கள் உள்ளனர். எம்.ஜி.ஆர்., படத்தில், நம்பியார் வில்லனாக நடித்த காரணத்தால், 'நம்பியாரிடம் ஜாக்கிரதையாக இரு' என, எம்.ஜி.ஆரிடம் பெண்கள் சொன்னதும் உண்டு. அந்த அளவிற்கு, நடிகர்களின் கதாபாத்திரத்தை, நிஜமாக நம்பினர். கமலின் கட்சி பிரபலமானதற்கு, அவர் ஒரு நடிகன் என்பது தான் காரணம். அந்த கட்சியில், ஸ்ரீபிரியா, கோவை சரளா போன்ற நட்சத்திரங்களும் உள்ளனர்.

அ.தி.மு.க.,வில், காமெடி நடிகர் செந்தில், அக்கட்சிக்கு அதிகம் உழைத்தவர். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்ற குறை உள்ளது. மயில்சாமி, அ.தி.மு.க.,வில் இருந்தார். இப்போது, அவர், யாருக்கு பிரசாரம் செய்கிறார் என தெரியவில்லை. நடிகை நயன்தாரா மீதும், சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் கூட, நாளை அரசியலில் குதிக்கலாம்; பிரசாரம் செய்யலாம். நடிகர், நடிகையர் தேர்தல் பிரசாரம் செய்தால், மக்கள் கூட்டம் கூடும். அப்போது, சம்பந்தப்பட்ட கட்சிக்காக, மக்களிடம் ஓட்டு கேட்பது, சுலபமாக இருக்கும். வட மாநிலங்களில், பா.ஜ.,வில் நட்சத்திரங்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். எனவே, சினிமா பிரபலங்களின் அலை ஓய்ந்து விட்டதாக கூற முடியாது.

கங்கை அமரன், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர், கலைப்பிரிவு மாநில தலைவர், தமிழக பா.ஜ.,

தலைவர்கள் தான், 'ஹீரோ'க்கள்:'வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக்' என, சமூக வலைதளங்கள் கோலோச்சி வரும் காலம் இது. விஞ்ஞான அறிவு, கல்வி அறிவு வளர்ந்துள்ள, தமிழக மக்களிடம், விழிப்புணர்வும் அதிகமாகவே காணப்படுகிறது. சினிமாவில், நடிகர்கள் நல்லவராக நடித்து விட்டு, தனிப்பட்ட வாழ்க்கை, எதிர்மறையாக இருந்தால், அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஜல்லிக்கட்டு போன்ற போராட்டங்களில், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்க, இளைஞர்கள் அனுமதிக்கவில்லை. அங்கு போராடிய இளைஞர்கள் தான், 'ரியல் ஹீரோ'க்களாக காணப்பட்டனர். அந்த போராட்ட சம்பவமே, வெகுஜன மக்களிடம், சினிமா மோகம் இல்லை என்பதை பகிரங்கப்படுத்தியது.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும், ஜீவாதார பிரச்னைகளுக்காக, குரல் கொடுத்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடும் தலைவர்களை, தங்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களாக, மக்கள் பாவிக்கிற காலமாக மாறி விட்டது. பிரதமர் மோடியின் தவறான செயல்பாடுகளை, துணிச்சலாக, தேசிய அளவில் எதிர்த்து, பிரசாரம் செய்யும் ஸ்டாலினை தான், நிஜ கதாநாயகனாக மக்கள் பார்க்கின்றனர். தமிழக நலன், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில், நடிகர், நடிகையர் பங்கேற்க வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.

கமல், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார். ரஜினியும் சட்டசபை தேர்தலில் தான் போட்டி என, ஒதுங்கி விட்டார். இருவருக்கும் துணிச்சல் இல்லை. ஆந்திராவில், சிரஞ்சீவியும் தனிக் கட்சி நடத்த முடியவில்லை. மறைந்த சிவாஜி கணேசன் கூட, அவர் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெறவில்லை.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், நடிகர் வடிவேலு, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்; கூட்டம் கூடியது. ஆனால், ஓட்டுகள் விழவில்லை. அரசியல் என்பது, ஒரு போர்க்களம். இங்கு, மக்களுக்கு நல்லது செய்வோம் என்ற நம்பிக்கையை விதைத்தால் மட்டும், வெற்றி பெற முடியும். எனவே, இந்த தேர்தலில், சினிமா நட்சத்திரங்களின் அலை அடிக்கவில்லை; அது, ஓய்ந்து விட்டது என்பதிலும் சந்தேகமில்லை.

-டாக்டர் சரவணன், மாநில துணைத் தலைவர், மருத்துவ அணி, தி.மு.க.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)