தேர்தல் ஆணையத்தை 'மஞ்ச குளிக்க' விட்ட விவசாயிகள்

தெலுங்கானாவில், முதல்வரின் மகள் போட்டியிடும் தொகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதனால், மின்னணு ஓட்டு இயந்திரத்தை அங்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் லோக்சபா தொகுதிக்கு, ஏப்.,11ல் தேர்தல் நடக்கிறது. இங்கு ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் சார்பில், முதல்வர் சந்திரசேகர ராவ் மகள், கவிதா போட்டியிடுகிறார். பா.ஜ., சார்பில், தர்ம அரவிந்த் மற்றும் காங்கிரஸ் சார்பில், மது யாஷ்கி கவுட் போட்டியிடுகின்றனர். மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ள இந்த தொகுதியில், மஞ்சள் மற்றும் கம்பு விவசாயிகள் அதிகம் உள்ளனர்; தங்கள் வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என, போராடி வருகின்றனர்; மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை.

லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்க, நிஜாமாபாத் தொகுதியில் மட்டும், விவசாயிகள் அதிக அளவில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். முதலில், 1,000 விவசாயிகள் மனு தாக்கல் செய்ய முடிவு செய்தனர். ஆனால், பல விவசாயிகளை, டி.ஆர்.எஸ்., கட்சியினர் சரிக்கட்டினர். எனினும், 185 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு மின்னணு ஓட்டு எந்திரத்தில், 16 வேட்பாளர்களை மட்டும் இணைக்க முடியும். அதிகபட்சம், நான்கு இயந்திரங்களை இணைக்க முடியும். அவ்வாறு, 64 பேர் தான், வேட்பாளர்களாக இருக்க முடியும்.

ஆனால், 185 வேட்பாளர்கள் இருப்பதால், அங்கு, ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளதால், 15 லட்சம் ஓட்டு சீட்டுகளை அச்சடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா பிரியும் முன், 1996ல், நல்கொண்டா தொகுதியில், பாதுகாப் பான குடிநீர் கேட்டு, ஜல சாதனா சமிதி அமைப்பினர், 450க்கும் மேற்பட்டோர், மனு தாக்கல் செய்தனர். அப்போது, மெகா ஓட்டு சீட்டு அச்சிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின், தற்போது தான், ஒரு தொகுதியில், அதிக வேட்பாளர்கள் களத்தில் இறங்கிஉள்ளனர்.

- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)