தேன்கூட்டை கலைத்து தெம்மாங்கு பாட நினைத்தால்... ஸ்டாலினை எச்சரிக்கும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சமீபத்தில், தேனி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, அ.தி.மு.க., வேட்பாளரான ரவீந்திரநாத் குறித்தும், அவரது தந்தையும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் குறித்தும், சில கருத்துகளை தெரிவித்தார்.

இதற்கு, அ.தி.மு.க.,வினரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், கூட்டணி கட்சியான, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், தானாக முன்வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலர், எஸ்.ஆர். தேவர் கூறியதாவது:பொதுவாகவே திராவிட இயக்கமானது, பேசிப்பேசியே வளர்க்கப்பட்ட இயக்கம். பேச்சாளர்களே திராவிட இயக்கத்தின் துாண்களாக இருந்து, அடுத்த கட்டத்திற்கு, அந்த இயக்கத்தை பரிணமிக்க வைத்தனர். அந்த பேச்சு சாமர்த்தியம், கருணாநிதி வரை சரியாக இருந்தது. அந்த பேச்சு கைவரப்பெறாதவராக ஸ்டாலின் உள்ளார். அவரது எடுபிடிகள் எழுதிக் கொடுத்ததை மேடையில் வாசிப்பதும், கத்துக்குட்டி தனமாக உளறுவதுமாக உள்ளார்.

'ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், பன்னீர்செல்வம் மகனுக்கு, 'சீட்' கிடைத்திருக்குமா' என, ஸ்டாலின் கேட்டிருக்கிறார். ஜெ., உயிரோடு இருக்கும் போதே, தேனி மாவட்ட ஜெ., பேரவை செயலராக ரவீந்திரநாத் இருந்திருக்கிறார்.பன்னீர்செல்வம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கேரளாவில் சொத்துகளை சேர்த்து விட்டார் என, அலறும் ஸ்டாலின், ஒரு நிமிடம் தன் குடும்பத்தை திரும்பி பார்த்திருந்தால், இந்த வார்த்தைகள் வாயில் வந்திருக்குமா? கசாப்பு கடைக்காரர், அகிம்சையை போதிப்பது போல இருக்கிறது ஸ்டாலின் சொல்வது.

ரவீந்திரநாத், 18 ஆண்டுகளுக்கும் மேலாக, அ.தி.மு.க.,வில் உழைத்து களத்தில் உள்ளார். ஆனால், நீங்கள், கனிமொழி உள்ளிட்டோர் பதவிகளை பெற்று நடமாடுகிறீர்களே. தி.மு.க., என்ற இயக்கத்தை கட்டமைத்து கட்டிக்காத்த, அண்ணாதுரை குடும்பத்தையே புறந்தள்ளிய, ஸ்டாலின் போன்றோர், பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் குறித்து பேச அருகதை இல்லை.நடக்க முடியாத, பேச முடியாத சூழலிலும், கடைசி நிமிடம் வரை, ஸ்டாலினை தி.மு.க., தலைவராக கருணாநிதி முன்னிறுத்தவில்லை. அந்தளவிற்கு ஸ்டாலின் மீது கருணாநிதி, 'நம்பிக்கை' வைத்திருந்தார்.
எங்களுடைய பொறுமை என்பது, ஒரு எல்லை வரைக்கும் தான். தேன்கூட்டை கலைத்து தெம்மாங்கு பாட நினைத்தால், படக்கூடிய அவதியை நினைத்து ஸ்டாலின் இனி பேச வேண்டும்.இவ்வாறு, எஸ்.ஆர்.தேவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)