ஈரோட்டில் எண்ண முடியாத கோஷ்டிகள் அதிர்ச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர்

பல முனை பிரச்னையால், ஈரோடு லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக வெங்கு மணிமாறன் அறிவிக்கப்பட்டு, பழி தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பை, முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், புறநகர் மாவட்ட செயலர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், மாநகர மாவட்ட செயலர், ராமலிங்கம், எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம் என, நான்கு அணியாக செயல்படுகின்றனர்.இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், திருப்பூர், எம்.பி., சத்தியபாமா, முன்னாள் மேயர் மல்லிகா, துணை மேயர் பழனிசாமி, ஈரோடு, எம்.பி., செல்வகுமார சின்னையன் என, கோஷ்டி பட்டியல் நீள்கிறது.

முன்னாள் துணை மேயர் பழனி சாமி, எம்.பி., செல்வகுமார சின்னையன் சீட் கேட்ட போது, மாவட்டச் செயலர் ராமலிங்கம், தன் மகன் ரத்தன் பிரத்வி, 28, போட்டி யிட சீட் கேட்டார். மூவருக்கும் சீட் தராமல், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகர செயலர் மற்றும் நகராட்சி முன்னாள் தலைவரான, வெங்கு மணிமாறன், ஈரோடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தை, எம்.பி., செல்வகுமார சின்னையன், மொடக்குறிச்சி, எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி புறக்கணித்தனர். வெங்கு மணிமாறன் வெற்றி பெற்றால், ஈரோடு மாவட்டத்தில், கட்சியில் முக்கிய பொறுப்புகள் அவருக்கு கிடைக்கலாம். எனவே, அதை தடுக்கும் வகையில், மாவட்ட செயலர் ராமலிங்கம், அமைச்சர்கள், 'உள்ளடி' வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர். சமீபத்தில், ஈரோடு கனி மார்க்கெட் வந்த வேட்பாளர் மணிமாறன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர், கனி மார்க்கெட் வளாகத்தை சீரமைப்பதாக உறுதி கூறினர்.

ஆனால், 'ஐந்தாண்டுகளில், அதை ஏன் செய்து கொடுக்கவில்லை' என கடைக்காரர்கள் கேட்டபோது, உடன் இருந்த அமைச்சர் கருப்பணன் ஒதுங்கி கொண்டார். வேட்பாளர் என்ன சொல்வது என தெரியாமல், வெலவெலத்துப் போனார். உடனிருந்த உள்ளூர் கட்சியினர், 'இது தானே ஆரம்பம்... போக போக எல்லாருடைய போக்கும், வேட்பாளருக்கு தெரியும் பாருங்க...' என, தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)