தங்க காசு சப்ளை தம்பிதுரைக்கு சிக்கல்

கரூர் மாவட்டத்தில், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் - தனி சட்டசபை தொகுதிகள்; கரூர் லோக்சபா தொகுதியிலும்; குளித்தலை தொகுதி, பெரம்பலுார் லோக்சபா தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிகளில், அ.தி.மு.க.,வும், குளித்தலையில், தி.மு.க.,வும் வெற்றி பெற்றன. கரூர் தொகுதியில் போட்டியிட்ட, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 441 ஓட்டுகள் வித்தியாசத்தில், மயிரிழையில் வெற்றி பெற்றார். தி.மு.க.,வுக்கு தாவியுள்ள, 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் சட்டசபை தொகுதியில், 2006, 2011 தேர்தல்களில், அ.தி.மு.க., சார்பில், தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

கரூர் தொகுதியில் உள்ள, அ.தி.மு.க., நிர்வாகிகள், செந்தில் பாலாஜி, மாவட்ட செயலராக இருந்த போது நியமிக்கப்பட்டவர்கள். தற்போது செந்தில் பாலாஜி, தி.மு.க.,வில் மாவட்ட பொறுப்பாளராக உள்ளதால், அ.தி.மு.க., நிர்வாகிகளை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், அ.தி.மு.க., தரப்பு, கலக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், கரூர் சட்டசபை தொகுதியில் உள்ள ஊராட்சி, வார்டு செயலர்களுக்கு, 2 சவரன் தங்க காசு, ஒன்றிய செயலர்களுக்கு, 5 சவரன் தங்க காசுகள், மந்திரி ஒருவர் தரப்பில், வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மற்ற மூன்று தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், அதிருப்தியில் உள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கரூர் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கு மட்டும், தங்க காசுகள் வழங்கியதால், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை தொகுதி நிர்வாகிகள், கோபத்தில் உள்ளனர். இதனால், கரூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, பெரம்பலுார் தொகுதியில் போட்டியிடும் சிவபதிக்கு எதிராக, நிர்வாகிகள் வேலை செய்யும் வாய்ப்பை உருவாக்கி விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)