காங்., - ஆம் ஆத்மி கூட்டணிக்கு சரத்பவார் முயற்சி?

புதுடில்லி: டில்லியில், காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
டில்லியில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிசி சாக்கோ, நிர்வாகிகள் மத்தியில் போன் மூலம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அதன் பின்னர், ''டில்லியில் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் விரும்புகின்றனர். இதற்காக, காங்கிரஸ் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இதனை பெரும்பாலான நிர்வாகிகள் விரும்புகின்றனர்'' எனக்கூறினார்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித், டில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் எனக்கூறி காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு கடிதம் எழுதினார். இதனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி தொடர்பாக இரு கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. அப்போது, பா.ஜ.,விற்கு எதிராக வலுவான இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இது தொடர்பாக, கருத்து தெரிவிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)