வரிந்து கட்டுகிறது 'அ.தி.மு.க., - ஐ.டி.,' தி.மு.க.,விடம் கேட்க கேள்விகள் ரெடி!

கோவை: 'சொன்னீங்களே... செஞ்சீங்களா...' என, வார்டு மக்கள் கேள்வி கேட்கும் வகையில், 30 வினாடி ஓடக்கூடிய வீடியோ எடுத்து, வாட்ஸ்-அப் குழுக்களில் பரப்ப, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், இதய தெய்வம் மாளிகையில் நடந்தது.
மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்ப செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளரான, அம்மன் அர்ச்சுனன் தலைமை வகித்தார்.

ஓட்டு வாங்க என்ன செய்யணும்



அப்போது, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள், கோவை மாவட்டத்தில் செய்த வளர்ச்சி பணிகள், 11 மருத்துவ கல்லுாரிகள் கொண்டு வந்தது உள்ளிட்ட நலத்திட்ட பணிகள் தொடர்பாக, வாக்காளர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும், அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்கியதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

தற்போதைய தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு தரமின்றி வழங்கியது; பணம் வழங்காதது; ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பது; 150 கோடி ரூபாய்க்கான டெண்டரை 'கேன்சல்' செய்தது உள்ளிட்ட விஷயங்களை, 'மீம்ஸ்' ஆக உருவாக்கி, வாக்காளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.மக்களின் உணர்வுகளை கண்டறிந்து, அதற்கேற்ப அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

வறுத்தெடுக்கும் வாட்ஸ்-அப்!



அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கூறுகையில், 'சொன்னீங்களே... செஞ்சீங்களா' என, ஆட்சியாளர்களை பார்த்து, பொதுமக்களே கேள்வி கேட்கும் வகையில், 30 வினாடி ஓடக்கூடிய வீடியோ தயார் செய்கிறோம். காஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை குறைப்போம்னு சொன்னீங்களே... செஞ்சீங்களா... கூட்டுறவு வங்கிகளில் வங்கி கடன் தள்ளுபடி செய்வோம்னு சொன்னீங்களே... செஞ்சீங்களா... மாதந்தோறும் பெண்களுக்கு, 1,000 ரூபாய் தர்றோம்னு சொன்னீங்களே... செஞ்சீங்களா என, கேட்கும் வகையில் வீடியோ எடுக்கப்படுகிறது.

இது, அந்தந்த வார்டுகளில் உள்ள வாட்ஸ்-அப் குழுக்களில் பரப்பப்படும். அந்தந்த ஏரியாவை சேர்ந்த ஆண்கள், பெண்களே கேள்வி கேட்கும்போது, மற்றவர்களை யோசிக்க துாண்டும். கடந்த ஒன்பது மாத ஆட்சியில், கோவைக்கு தி.மு.க., எதுவும் செய்யாதது தெரியவரும்' என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)