ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சிக்குள் நடந்த மோதலில், அதிர்ஷ்டவசமாக, முதல்வர் பதவி பழனிசாமி., வசம் வந்தது. ஒரு வாரம் தாங்க மாட்டார்; ஒரு மாதம் தாங்க மாட்டார் என, எதிர்க்கட்சிகள் ஆரூடம் கூற, அனைத்தையும் தவிடு பொடியாக்கி, பல தடைகளை கடந்து, நான்கு ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார். மீண்டும் முதல்வராக, கட்சியினரை ஒருங்கிணைத்து, தேர்தல் களத்தில், பம்பரமாக சுழன்று வருகிறார்.
எதிர்க்கட்சியினரே மூக்கில் விரல் வைத்து பார்க்கும் வகையில், பிரசாரம் செய்து வரும் முதல்வர் பழனிசாமி., நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
தி.மு.க., - எம்.பி., ராசாவின் பேச்சு, கண்கலங்க வைக்கும் அளவுக்கு, உங்கள் மனத்தை ஆழமாக காயப்படுத்தி விட்டதா?
நான், 40 ஆண்டுகளாக, அரசியலில் இருக்கிறேன். எத்தனையோ ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்கித் தாங்கி, என் மனம் கடினப்பட்டிருக்கிறது. பொது வாழ்வு என்று வந்து விட்டால், இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்பது, நான் அடைந்திருக்கும் மனப் பக்குவம்.
ஆனால், ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், லோக்சபா உறுப்பினர், வயதில் பல ஆண்டுகள் இளையவர். பொது வெளியில், பெண் இனத்தையே அவமதிக்கும் வகையிலும், ஒரு முதல்வரை பார்த்து, இப்படி பேசலாமா என்ற, அடிப்படை நாகரிகம் இல்லாமல் பேசியது, என்னை கண் கலங்க வைத்து விட்டது. எதையும் தாங்கும் இதயம், இதையும் தாங்கும். அதைப் பற்றி இதற்கு மேல் பேச வேண்டாம் என்று, நினைக்கிறேன்.
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை, 'காப்பி' அடித்து விட்டதாக, ஸ்டாலின் தெரிவித்து வருகிறாரே?
- இதுபற்றி ஏற்கனவே சொல்லி விட்டேன். அவர்கள் தான், எங்களது தேர்தல் அறிக்கையை, காப்பி அடித்துள்ளனர்.
'கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் இல்லை!'
உங்களுடைய அரசியல் பிரவேசத்தை பற்றி குறிப்பிடுங்கள்?
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகன். அவரது திரைப்படங்கள் வழியே, எம்.ஜி.ஆரின் உழைப்பு, சுயமரியாதை, பெண் விடுதலை, சமத்துவம், நல் ஒழுக்கம் போன்ற புரட்சிகரமான சிந்தனைகளால் கவரப்பட்டேன். நான், 1974 முதல், அரசியலில் ஈடுபட்டு வருகிறேன்.
வியூக வகுப்பாளர் இல்லாமல், திராவிட இயக்கங்களால் தேர்தலை சந்திக்க முடியாதா?
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்கால கட்டத்தில், சில தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு, அத்தகைய பணியில் அனுபவம் உள்ளவர்களை, அமர்த்திக் கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம். இவர்கள், தேர்தல் வியூகம் முழுவதையும் வகுப்பதில்லை. அதை கட்சி தான்வகுக்கிறது.
தேர்தல் பிரசார காலகட்டத்தை விட்டு விடுவோம்... பொதுவாக, நீங்கள் முதல்வரான பின், உங்களுடைய அன்றாட நிகழ்வுகள் எப்படி அமைந்திருக்கும்?
காலையில் எழுந்தவுடன் இறை வணக்கம். பின், சற்று உடற்பயிற்சி; அதைத் தொடர்ந்து,அன்றைய நிகழ்ச்சிகள் குறித்து முன் ஏற்பாடு; கட்சிக்காரர்களுடன் உரையாடல்;அதிகாரிகளுடன் ஆலோசனை; அலுவலகப் பணிகள்; கட்சிப் பணிகள் என்று, அன்றாட பணிகள் அமையும். உழைப்பது என்பது, எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி தருகிற இயல்பான செயலாகும்.
தமிழக அரசியலில், ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று, சில காலத்துக்கு முன் கிளம்பிய பேச்சு, இப்போது இல்லையே. அது பற்றி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வரலாற்றில் எப்பொழுதும் வெற்றிடம் என்ற, ஒன்று இல்லை.
நீங்கள் உள்ளிட்ட, பலஅமைச்சர்கள் மீது, கவர்னரிடம் ஊழல் புகார் பட்டியல் கொடுத்தாரே, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்?
ஜெ., அரசுக்கு மக்கள் அளித்து வரும் பெருவாரியான ஆதரவை பொறுக்க முடியாமல், தி.மு.க., முற்றிலும் உண்மைக்கு புறம்பாக, மக்களின் கவனத்தை திசை திருப்ப எடுத்த முயற்சி அது. உதாரணத்திற்கு ரத்து செய்யப்பட்ட, 'டெண்டர்' என்பதே தெரியாமல், அதில் ஊழல் என கொடுத்துள்ளார். இதுகுறித்து நேரடியாக விவாதிக்கலாம், 'விவாதத்திற்கு ரெடியா' என்று, எல்லா கூட்டங்களிலும் கேட்டு வருகிறேன். இதுவரை ஸ்டாலினிடம் இருந்து பதில் இல்லை.
'சீட்' கொடுக்கவில்லை என்றதும், அழுது அரற்றிய தோப்பு வெங்கடாசலம், பெருந்துறை தொகுதியில், சுயேச்சையாக களம் இறங்கிஇருப்பது, அ.தி.மு.க., வேட்பாளருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
போட்டி வேட்பாளர்கள் என்பது, அனைத்து கட்சிகளுக்கும் உள்ள, பொதுவான விஷயம். அரசியலில் பொறுமை மிக அவசியம். எல்லா நேரங்களிலும், நாம் நினைப்பதே நடக்கவேண்டும் என, எதிர்பார்க்கக் கூடாது. பல கோடி தொண்டர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.எந்த பலனும் எதிர்பாராமல் களப்பணி ஆற்றும், ஆற்றல்மிகு வீரர்கள் பலரை பெற்றுள்ள, அ.தி.மு.க., வேட்பாளருக்கு, இது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. சில நேரங்களில், தியாகம் பெரும் பயனை வருங்காலங்களில் அளிக்கும் என்பதை, அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். கட்சி தொண்டர்கள் அனைவரது உழைப்பையும், விசுவாசத்தையும் என்றும், கட்சி கருத்தில் கொள்ளும்.
பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வுக்கு, மக்கள் மீண்டும் ஆதரவளிப்பர் என, எப்படி நினைக்கிறீர்கள்?
பத்து ஆண்டு கால ஆட்சியில் மின் வெட்டு இல்லை; கட்டப் பஞ்சாயத்து இல்லை; அராஜகமும், ரவுடித்தனமும் இல்லை; நில அபகரிப்பு இல்லை; சட்டம் - ஒழுங்கு பேணி காக்கப்பட்டது. நேர்மையும், கடமை உணர்ச்சியும் கொண்டு செயல்படும் அரசை பார்த்து, மக்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக வாழ்கின்றனர். எனவே, இத்தகைய சிறப்பான, பண்பட்ட ஆட்சியே தொடர வேண்டும் என்று உறுதி பூண்டு, மக்கள் எங்களையே மீண்டும் தேர்ந்தெடுப்பர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான, மர்மத்தை விலக்குவதற்காக அமைக்கப்பட்ட, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், விசாரணையை முடிக்காமல் முடங்கி கிடக்கிறதே?
விசாரணை நடந்து வருவதால், இது குறித்து எந்த கருத்தும் சொல்வது சரியாக இருக்காது.
'வாஷிங் மெஷின்' கொடுப்பது உள்ளிட்ட கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளில், அ.தி.மு.க., கவனம் செலுத்த காரணம் என்ன?
ஜெ., எப்போதும் பெண்களிடம் மிகுந்த அன்பு உடையவர். அந்த வகையில், பெண்களின் பணிச் சுமையை குறைக்கவும், மன அழுத்தத்தை போக்கவும், வாஷிங் மெஷின், ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள் போன்ற, பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துள்ளோம். கடுமையான வறட்சி, புயல், தொடர்மழை மற்றும் கொரோனா காலங்களில், வாழ்வாதாரத்தை இழந்து தவித்த குடும்பங்களுக்கு, அரசின் வழியாக, நலத் திட்ட உதவிகள் வழங்குவது அவசியமானதாகும்.
இலவசங்கள், சாதனைகள், இதில் எது உங்களுக்கு வலிமை சேர்க்கும் என நினைக்கிறீர்கள்?
இலவசங்கள் என்று எளிதாக எடை போடக்கூடாது. அவை இலவசங்கள் அல்ல. 'லேப்டாப்' சைக்கிள், கல்வி உபகரணங்கள், சீருடை, மதிய உணவு எல்லாம், நாளைய தலைமுறையின் மீது செய்யப்படும், தொலைநோக்கு முதலீடுகள் என்பதை, பொருளாதார வல்லுனர்கள்உணர்வர்.
வேறு எந்த வகையிலும், நாட்டின் வளங்களிலும், வருமானத்திலும் பங்கேற்க முடியாத மக்களுக்கு, பகிர்ந்தளிக்கும் முறைகள் தானே தவிர, இவை எல்லாம் இலவசங்கள் என்று, கொச்சைப்படுத்தக் கூடாது.
எங்களுடைய மக்கள் நலப்பணிகளால், இந்த மாநிலம் பெரும் பயன் அடைந்திருக்கிறது. நாங்கள் சொன்னதை செய்வோம் என்பதை அறிந்திருக்கும் மக்கள், எங்கள் வாக்குறுதிகளை நம்புகின்றனர். எனவே, கடந்த கால அனுபவத்தோடு, எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளோடு, எங்களுக்கு ஓட்டு போடுவர்.
'உரிமைகளை மீட்டெடுப்போம்; வாருங்கள் உடன் பிறப்பே' என்கிறாரேஸ்டாலின்?
எந்த உரிமையை, யாரிடமிருந்து மீட்டெடுக்க, அவருடைய உடன் பிறப்புகளை கூப்பிடுகிறார் என்று தெரியவில்லை. காவிரி நதி நீர் உரிமையை அடகுவைத்தது; கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது, தி.மு.க., ஆட்சி.முல்லைப் பெரியாறு அணையில், தண்ணீர் அளவை உயர்த்தி, ஐந்து தென் மாவட்ட மக்களின் வறட்சியைப் போக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும், அதை செய்யத் தவறியது, தி.மு.க., ஆட்சி. இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தை சுவைத்துக் கொண்டிருந்தது.அப்படிப்பட்ட தி.மு.க., எந்த உரிமையை, யாரிடம் இருந்து, எப்படி மீட்க இருக்கிறது என்பதை, அவரிடமே கேளுங்கள்.
உங்கள் ஆட்சி காலத்தில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி எதுவுமே இல்லை.சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடுக்கு முன், வெளிநாடு போய் திரும்பிய முதல்வர் பழனிசாமி தமிழகத்துக்கு எவ்வித தொழிற்சாலை களையும் கொண்டு வரவில்லைஎன்கிறாரே ஸ்டாலின்?
'கோவிட்' காலத்திலும், அதிக முதலீடுகளை ஈர்த்தது, தமிழகம் என்பதை அனைவரும் அறிவர். என் வெளிநாட்டு பயண திட்டம் வாயிலாக, 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 8,835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. நான் புதிய தொழிற்சாலைகள் துவங்க, நேரில்செல்வதையும், புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதையும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி முன்னிலையில் தான் செய்து வருகிறேன். இது தெரியாமல், ஸ்டாலின்பேசுகிறார். அவர் பொதுவாகவே, எங்கள் ஆட்சி மீது, வேண்டுமென்றே குறை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
அமைச்சர் கே.சி. வீரமணியும், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனும், அரசியலில் கைகோர்த்து செயல்படுவதாக, இரு கட்சியினரும் வெளிப்படையாக குற்றம்சாட்டுகின்றனரே?
இதில் உண்மை இல்லை.
பரப்புரையின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் என அனைவரும், உங்களை தனிப்பட்ட முறையில், கடுமையாக விமர்சனம் செய்திருப்பதை, எப்படி பார்க்கிறீர்கள்?
என்னை பற்றி அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் விமர்சித்தோ, குற்றம் கண்டுபிடித்தோ பேச முடியாதவர்கள், தனிப்பட்ட முறையில், என்னை தரந்தாழ்ந்து விமர்சிப்பதை, மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தேர்தலில், இதற்கான சரியான பாடத்தை, தி.மு.க., கூட்டணியினருக்கு வாக்காளர்கள் புகட்டுவர்.
நான்கு ஆண்டுகளில், முக்கிய சாதனைகள் என்ன?
காவிரி உரிமையை சட்ட போராட்டம் நடத்தி மீட்டெடுத்தது; காவிரி டெல்டா பகுதியை,பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க, சட்டம் இயற்றியது; காவிரி -- குண்டாறு இணைப்பு; அத்திக்கடவு -- அவினாசி திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி உள்ளோம்.மின் மிகை மாநிலம்; நீர் மிகை மாநிலம்; குடிமராமத்து பணிகளில் தனித்தன்மை; அதிகமான தடுப்பணைகள்; நிலத்தடி நீர் உயர்வு; அதிக மகசூல்; வேளாண் பெருமக்களின் நன்மைக்கான திட்டங்கள் பல.
தொழில் துறையில் வளர்ச்சி; புதிய வேலைவாய்ப்புக்கு வழி வகுத்தல்; புதிய தொழில் துவங்க, ஒற்றை சாரள முறையில், விரைந்து அனுமதி; உயர் கல்வி சேர்தலில் முதலிடம்; இயற்கைசீற்றங்களின் போது, விரைவான களப்பணி மற்றும் நிவாரண உதவிகள்; கிராமப்புறமாணவர்களுக்கு, மருத்துவத்தில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு; ஒரே ஆண்டில், 11 மருத்துவக்கல்லுாரிகள்; கொரோனா தொற்றை, கட்டுக்குள் கொண்டு வந்தது முக்கியமானவை.
மேலும், 2,000 அம்மா, 'மினி கிளினிக்'குகள்; இரு முறை விவசாயிகள் கடன் தள்ளுபடி;விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்; கூட்டுறவு வங்கிகளில், நகைக் கடன் தள்ளுபடி;மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி போன்றவை, முக்கிய சாதனைகளாகும்.
கூட்டணி கட்சிகளால், வெற்றி வாய்ப்பு அதிகமாகும் என கருதுகிறீர்களா?
ஆம். எங்கள் கூட்டணி, வெற்றி கூட்டணி. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து