வயநாடு : நடந்து முடிந்த தேர்தலில், பிரதமர் நரேந்திரமோடி பொய்களை பரப்பி வென்றார். தேசிய அளவில் ஒரு விஷச்சூழலை எதிர்த்து போராடவேண்டியது உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியுள்ளார்.
ராகுல் நன்றி :
லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராகுல். தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல 3 நாள் கேரள சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதில் வயநாடு தொகுதி கல்பெட்டாவில் வாக்காளர் நன்றி அறிவிப்பு பேரணியில் பேசினார்.
பொய், வெறுப்பு :
அப்போது ராகுல் பேசுகையில், '' பிரதமர் மோடி வெறுப்பின் பிரதிநிதி, கோபத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். அவர் பாதுகாப்பின்மை மற்றும் பொய்களின் பிரதியாக இருக்கிறார். அவர் வெறுப்பை பரப்பி நாட்டை துண்டாடுகிறார். நாட்டில் நாம் இப்போது விஷத்தை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. அந்த விஷத்தை மோடி தான் பரப்புகிறார். நான் வலிமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். அவர் விஷமத்தனமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்,'' என்று சரமாரியாக பிரதமரை சாடினார்.
காங்கிரஸ் கதவு :
மேலும் அவர் பேசுகையில், '' எந்த தத்துவத்தை சேர்ந்தவரானாலும், நாட்டின் எப்பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு காங்கிரஸ் கதவுகள் திறந்தே இருக்கும்,'' என்றார்.
இந்த நன்றி அறிவிப்பு பேரணியில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நாளை வரை வயநாடு தொகுதியில், ராகுல் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நன்றி தெரிவிக்க உள்ளார்.
வாசகர் கருத்து