புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. வரும் ஜூன் 17 ம் தேதி முதல் புதிய லோக்சபா கூட்டம் கூடவுள்ளது. இதில் புதிய சபாநாயகராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன் இந்த முறை போட்டியிட வில்லை. இதனால் தற்காலிக சபாநாயகராக மேனகா நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் கடந்த ஆட்சியை விட இன்னும் சிறப்பாக இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். புதிய பல்வேறு சட்டங்கள் வரலாம் என பேசப்படுகிறது.
இந்நிலையில் வரும் ஜூன் 17 ல் முதல் பார்லி., கூட்டம் நடக்கிறது. இந்த லோக்சபாவில் எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்படுவது வழக்கம். இதில் பார்லி.,யில் அனுபவம் மிக்கவரான மூத்த எம்.பி. மேனகா நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவையில் ஜூன் 20 ம் தேதி பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார். ஜூலை 5ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலாகும்.
8 முறை எம்பியாக இருந்தவர்
சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் நபர்களில் 3 பேர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக பா.ஜ.,வட்டாரம் தெரிவிக்கிறது. மேனகா, ராதாமோகன்சிங், அலுவாலியா, கங்குவார் பெயர்கள் முதலிடத்தில் உள்ளன. மேனகாவை பொறுத்தவரை 8 முறை எம்.பியாக இருந்தவர். அவர் வகித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் ஸ்மிருதி இராணி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . இதனால் மேனகாவே தொடர்ந்து சபாநாயகராவார் என்றும் கூறப்படுகிறது.மேலும் ராதாமோகன்சிங் பிரதமருக்கு மிக நெருக்கமானவர் என்பதால் இவரும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
வாசகர் கருத்து