எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கைவிட்டது: போதுமான எம்.பி.,க்கள் இல்லாததால் முடிவு

புதுடில்லி : பார்லியில் போதுமான, எம்.பி.,க்கள் இல்லாததால், லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கோருவதில்லை என, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.டில்லியில், நேற்று நடந்த கட்சியின், எம்.பி.,க்கள் கூட்டத்தில், கட்சியின், பார்லிமென்ட் குழுத் தலைவராக, சோனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சமீபத்தில் நடந்த, லோக்சபா தேர்தலில், காங்., 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, காங்., தலைவர், ராகுல் அறிவித்திருந்தார்.கட்சியின் உயர்நிலை குழுவான, செயற்குழு கூட்டத்தில், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், புதிய தலைவரை அடையாளம் காணும் படியும், ராகுல் கூறியிருந்தார்.ஆனால், அதை, செயற்குழு நிராகரித்தது. தலைவர் பதவியில், ராகுல் தொடர வேண்டும் என, மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், தன் முடிவில் ராகுல் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதே மண்டபம்இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்திருக்கும் நிலையில், டில்லியில், காங்கிரஸ், எம்.பி.,க்கள், கூட்டம், நேற்று நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு, ராகுல், யாரையும் சந்திக்காமலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும் இருந்தார்.தேர்தல் முடிவுகள் வந்தவுடன், சில நிமிட நிருபர்கள் சந்திப்பு; மத்திய அமைச்சரவை பதவியேற்பு ஆகியவற்றில் மட்டுமே அவர் பங்கேற்றார். இந்நிலையில், கட்சியின், எம்.பி.,க்கள் கூட்டத்திற்காக, அவர் பார்லிமென்டிற்கு நேற்று வந்திருந்தார்.தே.ஜ., கூட்டணி,எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்ற அதே மைய மண்டபத்தில், காங்கிரஸ், எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது.
மலர் அலங்காரங்கள் ஏதுமில்லாமல், வெகு சாதாரணமாக காட்சி யளித்த அந்த இடத்தில், காங்கிரஸ் பார்லிமென்ட் கட்சித் தலைவர் தேர்வு நடைபெற்றது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிய, எம்.பி.,க்கள் ஜோதிமணி மற்றும் சுதாகரன் ஆகியோர் வழிமொழிய, பார்லி மென்ட் காங்கிரஸ் கட்சித் தலைவர்பதவியில் ஏற்கனவே இருந்து வரும் சோனியா, மீண்டும் ஒருமனதாக அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தீவிரம்இக்கூட்டத்திற்கு, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, 52 எம்.பி.,க்களும் வந்திருந்தனர். அவர்களோடு, ராஜ்யசபா எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: முதலில் நீங்கள் ஒவ்வொருவரும், யார் என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்காகவும் வாதிடப் போகும் நபர்கள், நீங்கள். உங்களுக்கு எதிராக, வெறுப்பும், கோபமும் நிச்சயம் கிளம்பும்.காரணம், காங்கிரஸ் இல்லாத இந்தியா தேவை என, பா.ஜ., சொல்லி வருகிறது. எதிர்க்கட்சிகளே தேவையில்லை என, அந்தக் கட்சி நினைக்கிறது. எனவே, இதைப் புரிந்து கொண்டு, நீங்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும்.பா.ஜ.,வை எதிர்கொள்வதற்கு, வெறும், 40 எம்.பி.,க்கள் மட்டுமே போதும். ஆனால், இம்முறை,நம்மிடம், 52 பேர் உள்ளனர். கவலையே வேண்டாம்.
ஒவ்வொரு நாளும், பா.ஜ.,வை ஆட்டிப் படைத்து விடலாம். குறைந்த, எம்.பி.,க்கள் என்பதால், சபைக்குள், நமக்கு போதுமான நேரம் கிடைக்காது; பரவாயில்லை. இரண்டே இரண்டு நிமிடங்கள்கூட போதும்; பா.ஜ.,வை, தலைகீழாக புரட்டிப் போட்டு விட முடியும். நமக்கு வழிகாட்ட, மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். எனவே, புத்துணர்வோடு களமிறங்கினால், நினைத்ததை சாதித்து விடலாம்.இவ்வாறு, ராகுல்பேசினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கோரப் போவதில்லை என, கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து, கட்சியின் செய்தித் தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: விதிகளின்படி, மொத்த முள்ள, எம்.பி.,க்களில், 10 சதவீதம் உள்ளகட்சியே, எதிர்க்கட்சி அந்தஸ்தை கோர முடியும். கடந்த லோக்சபாவில், 44 எம்.பி.,க்கள் மட்டுமே இருந்ததால், இந்த அந்தஸ்தை, பா.ஜ., அரசு அளிக்கவில்லை.தற்போதைய லோக்சபாவில், காங்.,குக்கு, 52 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கோருவதற்கு தேவையான எண்ணிக்கையைவிட, இரண்டு இடங்கள் குறைவாக உள்ளதால், அந்த அந்தஸ்தை கோருவ தில்லை என, முடிவு செய்துள்ளோம்.அதே நேரத்தில், இந்த அந்தஸ்தை தருவது குறித்து, ஆளும், பா.ஜ., முடிவு எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசாத்காங்.,தலைவர் பதவி யில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவித்துள்ள நிலையில், கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதைத் தொடர்ந்து, லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில், கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கடந்த முறை, கட்சியின் லோக்சபா தலைவராக, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருந்தார்.தற்போது நடந்த தேர்த லில், அவர் தோல்வி அடைந்துள்ளார். அதனால், புதிய தலைவரை கட்சி தேர்ந்தெடுக்க உள்ளது.கடந்த முறை, கட்சியின் ராஜ்யசபா தலைவராக, மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத் இருந்தார்; அவரே தொடருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எழுச்சி பெறுவோம்!கூட்டத்தில், சோனியா பேசியதாவது:இரவு, பகலாக, ராகுல் உழைத்தார். அனைத்து தரப்பினரது ஆதரவும் கிடைத்ததால் தான், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் ஆட்சியை அமைக்க முடிந்தது.நம் கட்சிக்கு, 12.13 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர்; அவர்களுக்கு நன்றி. எம்.பி.,க்கள், சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும், அனைவரையும் அரவணைத்து செல்ல, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, ஒத்துழைப்பு அளிப்போம். அதேசமயம், பிளவுபடுத்தும்நடவடிக்கைகளை எதிர்ப்போம்.நாங்கள், விழிப்புடனிருக்கும், மனசாட்சி கொண்ட எதிர்க்கட்சி என்பதை, நாட்டு மக்களுக்கு காட்டுவோம். இனிமேல் தான், மிகப் பெரிய சவால்கள் உள்ளன. அந்த சவால்களை, வாய்ப்புகளாக பயன்படுத்தி கொள்வோம். கண்டிப்பாக, மீண்டும் எழுச்சி பெறுவோம்.மக்களின் நம்பிக்கையை, மீண்டும் பெற, கடினமாக உழைப்போம்.இவ்வாறு, சோனியா பேசினார்.

-- நமது டில்லி நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)