புதிய அமைச்சர்களுக்கு உள்ள சவால்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவர்களுள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.

ராஜ்நாத் சிங்:கடந்த அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக இருந்த, ராஜ்நாத் சிங், இந்த முறை, ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 'நம் ராணுவத்தில் தற்போது இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் கருவிகள், பல ஆண்டுகளுக்கு முந்தையவை' என, ஒரு குற்றச்சாட்டு உள்ளது; இதை நவீன மயமாக்குவது, ராஜ்நாத்சிற்கு, மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

மொத்த பொருளாதார வளர்ச்சியில், மிக குறைந்த அளவிலான நிதியே, ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. எனவே, இந்த குறைந்த நிதியில், நவீனமயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, மிகப் பெரிய பணியாக, ராஜ்நாத் சிங்கிற்கு இருக்கும்.

அமித் ஷா:உள்துறை அமைச்சராக, அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில், தேசிய அரசியலிலும், நாட்டின் வளர்ச்சியிலும், அவருக்கு உள்ள முக்கியத்துவத்தை காட்டுவதாக உள்ளதாக, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே, குஜராத் மாநில அமைச்சராக பதவி வகித்த அனுபவம் இருந்தாலும், தேசிய அளவில், முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவியை நிர்வகிப்பதே, அமித் ஷா முன் உள்ள சவால்.

இவர்கள் தவிர, வெளியுறவு அமைச்சராக, முன்னாள் வெளியுறத் துறை செயலர், ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதும், ஆச்சரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெளியுறவு கொள்கைகளை வகுப்பதிலும், அவற்றை செயல்படுத்தி, வெற்றி காண்பதிலும், மிகுந்த அனுபவம் உடையவர், ஜெய்சங்கர். போதிய அரசியல் அனுவம் இல்லை என்பது மட்டுமே, இவருக்கு உள்ள சவால்.

நிர்மலா சீதாராமன்:மோடி தலைமையிலான முந்தைய அரசு பதவியேற்றதும், நிர்மலா சீதாராமனுக்கு, வர்த்தக துறை ஒதுக்கப்பட்டது. அதற்கு பின்தான், ராணுவ இலாகா, அவருக்கு ஒதுக்கப்பட்டது. வர்த்தக துறையை திறமையாக கையாண்ட அனுபவம் இருப்பதால், நிதித்துறையை கையாளுவது, அவருக்கு பெரிய சுமையாக இருக்காது.

இதற்கு முன், 1970 - 71ல், காங்கிரசின் இந்திரா, பிரதமராக இருந்தபோது, நிதித்துறையையும் கூடுதலாக கவனித்தார். அவருக்கு பின், நிதித்துறை அமைச்சராகியுள்ள பெண் என்ற பெருமை, நிர்மலாவுக்கு கிடைத்துள்ளது. அதேநேரத்தில், நாட்டின், முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையையும், அவருக்கு கிடைத்து உள்ளது.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும், நிதித்துறையில், பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது, இந்திய அரசியலில், ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பொருளாதரத்துக்கு புத்தாக்கம் அளிப்பது, பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையை எளிமைப்படுத்துவது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை, புதிய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, நிர்மலா சீதாராமனுக்கு உள்ள, மிகப் பெரிய சவால்கள்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)